வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்கள் உள்ளூர் சட்டங்களை பின்பற்ற வேண்டும் என வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
அமெரிக்காவில் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக செயல்பட்டதாக, இந்திய மாணவர்களுக்கு எதிராக அமெரிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
கொலம்பியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த இந்திய மாணவி ரஞ்சனி ஸ்ரீனிவாசன் பாலஸ்தீன ஆதரவு போராட்டத்தில் பங்கேற்றதை தொடர்ந்து அவரது விசாவை அமெரிக்க அரசு ரத்து செய்தது. இதையடுத்து கடந்த வாரம் அவர் அமெரிக்காவை விட்டு தாமாக வெளியேறினார்.
இதையடுத்து ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்ட ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த இந்திய மாணவர் பதார் கான் சூரி சில நாட்களுக்கு முன் கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், “விசா மற்றும் குடியேற்ற கொள்கையை பொறுத்தவரை, இவை ஒவ்வொரு நாட்டின் அதிகார வரம்புக்குள் இருக்கும் இறையாண்மை சார்ந்த விஷயங்கள் ஆகும். வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்கள் உள்ளூர் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டு நடக்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்றார்.
பதான் கான் சூரி கைது குறித்து அவர் கூறுகையில், “அவர் தடுப்புக் காவலில் இருப்பதாக தெரியவருகிறது. இது தொடர்பாக அவரோ அல்லது அமெரிக்க அரசோ எங்களை தொடர்பு கொள்ளவில்லை" என்றார்.