tamilnadu epaper

வெளிநாட்டுத் தயாரிப்பு இறக்குமதி கார்களுக்கு 25% வரி: அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு ஏப்ரல் 2–ந் தேதி முதல் அமுல்

வெளிநாட்டுத் தயாரிப்பு இறக்குமதி கார்களுக்கு 25% வரி: அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு ஏப்ரல் 2–ந் தேதி முதல் அமுல்

வாஷிங்டன், மார்ச் 27


வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு 25% வரிகள் விதித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.


அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்ற முதல் நாளிலிருந்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். இதற்கிடையே, அவர் இறக்குமதி வரிகளை அதிகரித்து அண்டை நாடுகளுக்கு அதிர்ச்சி கொடுத்து வருகிறார். தற்போது அவர் வெளிநாட்டு கார்களுக்கு அதிக வரி விதித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.


இது தொடர்பாக, ஓவல் அலுவலகத்தில் நிருபர்கள் சந்திப்பில் டிரம்ப் கூறியதாவது: வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கும், கார்களின் உதிரி பாகங்களுக்கும் ஏப்ரல் 2ம் தேதி முதல் 25% வரிகள் விதிக்கப்படும். ஏப்ரல் 3ம் தேதி முதல் வரி வசூல் துவங்கும். இந்த புதிய வரி விதிப்பு நிரந்தரமாக இருக்கப் போகிறது.


அமெரிக்க பொருளாதாரத்தையும் தொழில்துறையையும் மேம்படுத்துவதே புதிய வரி விதிப்பின் நோக்கமாகும். இந்த நடவடிக்கை பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும். இது நீங்கள் இதற்கு முன்பு பார்த்திராத வளர்ச்சியைத் உருவாக்கும்.


வாகன கட்டணக் கொள்கையை வடிவமைப்பதில், டி.ஓ.ஜி.இ., குழு தலைவர் எலான் மஸ்கிற்குஎந்த தொடர்பும் இல்லை. வாகனங்களுக்கு இறக்குமதி வரியை அதிகரிப்பது குறித்து எலான் மஸ்க் ஆலோசனை வழங்கவில்லை. புதிய வாகனத் துறை வரிகள் மிக விரைவில் வரும்.


இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறினார்.


கடந்த ஆண்டு அமெரிக்கா சுமார் 80 லட்சம் கார்களை இறக்குமதி செய்துள்ளது. இதன் மதிப்பு 240 பில்லியன் டாலர். அமெரிக்காவுக்கு அதிக எண்ணிக்கையில் கார்களை ஏற்றுமதி செய்து முதலிடத்தில் மெக்சிகோ, அடுத்து தென்கொரியா, ஜப்பான், கனடா, ஜெர்மனி நாடுகள்.


அமெரிக்காவில் கார்களை தயாரித்தால் வரி எதுவுமே விதிக்கப்படமாட்டாது என்று உறுதிபடக்கூறினார் டிரம்ப்.


இந்தப் புதிய வரி விதிப்பு காரணமாக இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகள், ஏற்றுமதியாளர்களின் நிலைமை குறித்து கவலையை வெளியிட்டுள்ளன.


பிரிட்டனின் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்கள் அதிக எண்ணிக்கையில் அமெரிக்காவுக்கு விற்கப்பட்டுள்ளது. (மொத்தம் 1 லட்சத்து 16 ஆயிரத்து 294 கார்கள்) புதிய வரிகள் அமலுக்கு வருவதற்கு முன்னால் அமெரிக்க அரசுடன் சுமுக பேச்சு நடத்த, சுமுக வர்த்தக ஒப்பந்தம் ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது.