அன்புமணி மீதான ஊழல் வழக்கை சி.பி.ஐ. விரைந்து விசாரிக்க வேண்டும் பா.ம.க. நிர்வாகக் குழுக் கூட்டத்தில் ராமதாஸ் தீர்மானம் நிறைவேற்றம்
அன்புமணி மீதான ஊழல் வழக்கை சி.பி.ஐ. விரைந்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் தலைமையில் நடந்த பா.ம.க. நிர்வாகக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி தனி கட்சி ஆரம்பித்து கொள்ளட்டும். பா.ம.க. கட்சி பெயரையோ அல்லது எனது பெயரையோ பயன்படுத்தக் கூடாது. எனது இன்ஷியலை வேண்டுமானால் பயன்படுத்திக் கொள்ளலாம் என தொடர்ந்து பேசி வருகிறார்.
இந்த நிலையில் இந்த மாதம் இறுதியில் சேலம் தலைவாசலில் பா.ம.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடைபெறுகிறது. இதற்கு முன்னோட்டமாக விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் இன்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் ராமதாஸ் உட்பட 22 பேர் கலந்து கொண்ட நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது.
சின்னமும், கட்சியும் இல்லை
இதைத் தொடர்ந்து பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
அன்புமணியை கட்சியில் இருந்து நீக்கி விட்டேன். அப்போது என் பெயரையும் கட்சியின் பெயரையும் பயன்படுத்தக்கூடாது என தெரிவித்திருதேன். இருப்பினும் எனது பெயரையும் கட்சியின் பெயரையும் பயன்படுத்தி இருக்கிறார்கள், இதனை வன்மையாக கண்டிக்கிறேன். இப்போது அன்புமணிக்கு சின்னமும் இல்லை கட்சியும் இல்லை என நாங்கள் வழக்கு தொடுத்தோம். அன்புமணி கட்சி உறுப்பினர் கூட இல்லை. அவரை நாங்கள் நீக்கி விட்டோம்.
பா.ம.க.வை நான் கஷ்டப்பட்டு வியர்வை சிந்தி ஆரம்பித்தேன். 46 ஆண்டுகள் கட்சிக்காக உழைத்தேன். அன்புமணிக்கு பல்வேறு பதவிகள் கொடுத்து அழகு பார்த்தேன். 96 ஆயிரம் கிராமங்களுக்கு சென்று ஆலமரம் போல் பா.ம.க.வை வளர்த்தேன். கட்சியைக் கைப்பற்ற பம்மாத்து வேலைகளை எல்லாம் அன்புமணி தொடர்ந்து செய்து வருகிறார். தீட்டிய மரத்திலேயே கூர் பாய்ச்சியதைப் போல் பாமக என்னும் மரத்தில் கிளையை வெட்ட ஆரம்பித்திருக்கிறார் அன்புமணி. நாம் நட்ட ஒரு பூந்தோட்டம். அதில் பல குரங்குகள் நுழைந்து பூக்களை எல்லாம் தினமும் நாசம் செய்து கொண்டிருக்கிறார்கள். அன்புமணி என் பெயரை சொல்லி என் படத்தை போட்டு என் கொடியை பயன்படுத்தி செய்வது வேதனை அளிக்கிறது. இதனை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று இந்த நிர்வாகக்குழுவில் கண்டிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பொய் மூட்டைகளை ஊடகங்களுக்கு அன்புமணி கொடுக்கிறார். அது எனக்கு வருத்தம் அளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் பா.ம.க.கவுரவ தலைவர் ஜி.கே. மணி, பா.ம.க.செயல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் ராமதாசின் மூத்த மகள் ஸ்ரீ காந்தி, அருள் எம்.எல்.ஏ.,பொதுச் செயலாளர் முரளி சங்கர்,பொருளாளர் சையத் மன்சூர் அலி, முன்னாள் எம்.பி. துரை, தலைமை நிலைய செயலாளர் அன்பழகன், மாநில நிர்வாகி பரந்தாமன் உள்ளிட்ட 22 நிர்வாகிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
தீர்மானங்கள்
கூட்டத்தில் நிறைவேற்றபட்ட தீர்மானங்கள் வருமாறு:-
* ஒட்டு கேட்பு கருவியை வைத்து சொந்த தந்தைக்கு ஆப்பு வைக்க துணிந்தவர்கள் மீது புகார் கொடுத்தும் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்காத காவல்துறையை கண்டிப்பது.
* அன்புமணியின் ஆட்டம் பாட்டம், ஆதாயம் ஆகியவைகளுக்காக அசைந்து, வளைந்து நெளிந்து தேர்தல் ஆணையத்தில் பொய்யான ஆவணங்களை கொடுத்து ஆணையத்தையே ஏமாற்றியது குறித்து ஆய்வு செய்து அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* நிலுவையில் உள்ள அன்புமணி மீதான ஊழல் வழக்கோடு, கட்சியின் சின்னம், தலைவர் சம்மந்தமான விஷயத்தில் அன்புமணி மற்றும் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளையும் மோசடி வேலைகளையும் சேர்த்து சி.பி.ஐ. விரைந்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* வருகிற சட்டமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து முடிவு எடுக்கவும், பேச்சுவார்த்தை நடத்தவும், வியூகம் அமைக்கவும் ராமதாசுக்கு முழுஅதிகாரம் வழங்குவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.