இந்தியா, பாகிஸ்தானில் வெள்ள பாதிப்புகளால் ஏற்பட்ட உயிரிழப்புகள் - ஐ.நா. இரங்கல்

நியூயார்க்,
இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள உத்தரகாசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த அதிகனமழையால் கீர்கங்கா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் ஏராளமானோர் வெள்ளத்தில் சிக்கி மாயமானார்கள். விடுதிகள், ஓட்டல்கள், வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன.
வெள்ளத்தில் சிக்கி தவித்தவர்களில் சுமார் 1,300 பேர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், 66 பேர் மாயமாகினர். இதில் 24 பேர் நேபாளத்தை சேர்ந்த தொழிலாளர்கள் ஆவர். இதைத் தொடர்ந்து காஷ்மீரின் கிஷ்துவார் மாவட்டத்தில் உள்ள சோசிட்டி கிராமத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட மேகவெடிப்பால் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் அங்குள்ள ஆற்றில் திடீர் என வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
இந்த வெள்ளப்பெருக்கில் மலைப்பாதையில் இருந்த வீடுகள், கட்டிடங்கள் உள்ளிட்டவை அடித்துச் செல்லப்பட்டன. தீடீர் வெள்ளம் மற்றும் அதனை தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 60 பேர் உயிரிழந்தனர். வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 170 பேர் மீட்கப்பட்ட நிலையில், சுமார் 75 பேர் காணாமல் போனதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதே போல், இந்தியாவின் அண்டை மாநிலமான பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்துங்க்வா மாகாணத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் அங்குள்ள பஜவுர், புனேர், ஸ்வாட், ஷாங்லா, டோர்கர் உள்ளிட்ட மாவட்டங்களில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கு மற்றும் அதனை தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 344 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தானில் சமீபத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு சம்பவங்களில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் மீட்பு பணிகளுக்காக சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க ஐ.நா. குழுக்கள் தயாராக உள்ளன என்று அவர் தெரிவித்துள்ளார்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?