சென்னையில் 2 நாட்களில் போதைப் பொருள் விற்பனை செய்த, கடத்திய 105 பேர் கைது
Feb 05 2026
11
சென்னை: சென்னையில் நடைபெற்ற 2 நாள் சிறப்பு தணிக்கையில் போதைப் பொருள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்ட 105 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் போதைப் பொருள் கடத்தல், பதுக்கல் மற்றும் விற்பனையை முற்றிலும் தடுக்க போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீஸார், காவல் நிலைய போலீஸாருடன் ஒருங்கிணைந்து, 2 நாட்கள் சிறப்பு தணிக்கையை மேற்கொண்டனர். இந்த தணிக்கை கடந்த 31, 1 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.
அதன்படி, சென்னையில் உள்ள 12 காவல் மாவட்ட போலீஸாரும் அவர்கள் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் போதைப் பொருட்களுக்கு எதிரான கண்காணிப்பை முடுக்கிவிட்டனர்.
இதில் சட்ட விரோதமாக கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் வைத்திருந்தது மற்றும் விற்பனை செய்தது தொடர்பாக 57 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 105 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதில் 46 கஞ்சா வழக்குகள், 11 மாத்திரை வழக்குகள் அடங்கும். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 26 கிலோ கஞ்சா, போதைப் பொருளாக பயன்படுத்த மறைத்து வைத்திருந்த 1,888 வலி நிவாரண மாத்திரைகள் மற்றும் 4 மோட்டார்சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
போதை மற்றும் புகையிலை பொருட்களை கடத்தி வருபவர்கள், பதுக்கி வைப்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களை கைது செய்ய, வாகனத் தணிக்கைகள், தீவிர ரோந்து பணிகள் மற்றும் சிறப்பு அதிரடி தணிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் ஆணையர் அருண் எச்சரித்துள்ளார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?