இமாசல பிரதேசம்: மழை தொடர்பான சம்பவங்களில் பலி எண்ணிக்கை 192 ஆக உயர்வு
Aug 07 2025
14

சிம்லா,
வடமாநிலங்களில் ஒன்றான இமாசல பிரதேசத்தில், பருவமழை காலங்களில் அதிகளவில் மழை பெய்து வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் அவல நிலை காணப்படுகிறது. நடப்பு ஆண்டில் பரவலாக பல்வேறு இடங்களிலும் முன்பே தென்மேற்கு பருவமழை பெய்தது. தொடர்ந்து பல நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
கனமழையால் நிலச்சரிவு, வெள்ளம் மற்றும் மேகவெடிப்புகளும் ஏற்பட்டு பாதிப்பை உண்டு பண்ணுகின்றன. இமாசல பிரதேசத்தில் கடந்த பல நாட்களாக பெய்து வரும் மழையில் சிக்கி பலர் உயிரிழந்து உள்ளனர்.
இந்த நிலையில், மாநில பேரிடர் மேலாண் கழகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில், இன்று காலை 10 மணி வரையிலான காலகட்டத்தில் மாநிலம் முழுவதும் 449 சாலைகள், 753 மின்மாற்றிகள் மற்றும் 276 நீர் விநியோக திட்டங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பருவமழை தொடங்கியதில் இருந்து இதுவரை 192 பேர் உயிரிழந்து உள்ளனர். இவர்களில் மழை தொடர்பான உயிரிழப்புகளின் எண்ணிக்கை 106 ஆகும். சாலை விபத்துகளில் சிக்கி 86 பேர் உயிரிழந்ததும் இதில் அடங்கும். இதனால், இயற்கை பேரிடர்கள் மற்றும் உட்கட்டமைப்பு பாதிப்பு ஆகிய இரு வகை அச்சுறுத்தல்கள் ஏற்பட்டு உள்ளன என அந்த அறிக்கை உறுதிப்படுத்தி உள்ளது.
இவற்றில் மண்டி மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. கனமழை மற்றும் நிலச்சரிவுகளால் 318 சாலைகள் முடங்கியுள்ளன. 3 முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து, குல்லு (67 சாலைகள்), காங்ரா (23 சாலைகள்) மற்றும் சிர்மவுர் (22 சாலைகள்) ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன.
நிவாரண மற்றும் மீட்பு முயற்சிகள் நடந்து வரும் சூழலிலும், பல பகுதிகளை சென்றடைவது இயலாத ஒன்றாக உள்ளது. எனினும், போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகள் நடந்து வருகின்றன என அதிகாரிகள் தெரிவித்தனர். பொதுமக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்கும்படியும் மாநில பேரிடர் மேலாண் கழகம் அறிவுறுத்தி உள்ளது.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?