இளகிய மனம்

இளகிய மனம்


கே. பி. ஜனார்த்தனன்


நிஜமாவா சொல்றீங்க? நல்லா பார்த்தீங்களா?” என்று கேட்டாள் சுமதி ஆச்சரியத்துடன்..

 “போலியேதான்!” சதாசிவம் அவளைக் கவலையோடு பார்த்தார். “சரி, எத்தனை கேட்டாள்? நீ எத்தனை கொடுத்தே?”

நடந்ததை விவரித்தாள் சுமதி.

பத்து மணி இருக்கும். ஓடோடி வந்தாள் பக்கத்து வீட்டு கஸ்தூரி.

“சுமதிக்கா, ஒரு ஹெல்ப் பண்ணுவீங்களா எனக்கு?” என்றாள் லேசான பதட்டத்துடன்.

“முதல்ல உட்காரு,” என்று அவளை சாந்தப்படுத்தினாள், “சொல்லு.”

“பையனுக்கு பீஸ் கட்டணும் அக்கா. காலேஜ் போன பிறகு தான் தெரியுமாம் இன்னிக்கு கடைசி தேதின்னு. போன் பண்ணி சொன்னான் ரமேஷ். மத்தியானத்துக்கு முன்னாடி பணம் கொடுக்கணும். அர்ஜண்டா இப்ப 3000 ரூபாய் வேணும். இந்த நகையை வைத்துவிட்டு..” என்று இழுத்தாள்.

“நகையா?”

“தப்பா நினைக்காதீங்க. ஒரு நம்பிக்கைக்குத்தான். பணத்தை தந்துட்டு திரும்ப வாங்கிக்கிறேன்.” 

சுமதி தயங்கினாள். “அவரு இல்லே வீட்டிலே ..”

“உங்க கிட்ட ஏதும் இல்லியா? எனக்கு இப்ப உடனே…”

யோசித்தாள். இளகிய மனம் உள்ள சுமதி இதற்கு முன் அடிக்கடி சிலருக்கு பணம் கொடுத்து உதவியிருக்கிறாள். ஒன்றும் திரும்ப வந்ததில்லை. கணவர் கண்டித்திருக்கிறார்தான். ஆனால் ஃபீஸ் கட்ட என்று சொல்கிறாள்…

கொடுத்தாள்.

சதாசிவம் வந்ததும் விஷயத்தை சொன்னதும் அந்த செயினை எடுத்துப் பார்த்தார்.”ஏமாத்திட்டா,” என்றார். “எத்தனை தடவை பட்டாலும் உனக்கு புத்தி வராது.

 வெயிட்டைப் பார்த்தாலே தெரியலியா? இப்படியா ஏமாறுவே?”

சுமதி அவர் பார்வையைத் தவிர்த்தாள்.

“தூர எறி இதை. அவள் இதை ஒருநாளும் 3000 ரூபாயைக் கொண்டுவந்து கொடுத்து மீட்கப் போறதில்லே…”

சுமதி அமைதியாகச் சொன்னாள். “வருவாங்க. கண்டிப்பா வருவாள். எனக்கு நகையைப் பத்தி தெரியாதுதான். ஆனா கஸ்தூரியைப் பத்தித் தெரியும். பல சந்தர்ப்பங்களில் கவனிச்சிருக்கேன். மனசாட்சி உள்ளவள். இது போலின்னு தெரிஞ்சிடக் கூடாதுன்னு அவள் மனசு துடிக்கும். அதனால சீக்கிரமாவே வந்துருவா பணத்தோட.”

“நீ என்ன சொல்றே?” 

“நான் இந்த நகையை நம்பி அவளுக்கு பணம் தரலே. அவளை நம்பித்தான்!”

அடுத்த வாரமே கஸ்தூரி பணத்துடன் வந்து நகையை வாங்கிக் கொண்டபோது இருவரும் ஒருவரை ஒருவர் அர்த்தத்துடன் பார்த்துக் கொண்டார்கள்.  

+++++

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%