உச்ச நீதிமன்ற ஆணையின்படி ஆகஸ்ட் மாதத்துக்கான 46 டிஎம்சி காவிரி நீரை கர்நாடகா தர வேண்டும்
Aug 01 2025
113

சென்னை:
உச்ச நீதிமன்ற ஆணையின்படி, வரும் ஆகஸ்ட் மாதத்துக்கான 45.95 டிஎம்சி காவிரி நீரை தமிழகத்துக்கு வழங்குவதை கர்நாடகா உறுதி செய்ய வேண்டும் என்று காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தியது.
இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 42-வது கூட்டம் ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் டெல்லியில் 30-ம் தேதி (நேற்று) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தமிழக உறுப்பினர் மற்றும் நீர்வளத்துறையின் செயலர் ஜெ.ஜெயகாந்தன் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொலிக் காட்சி வாயிலாக கலந்துகொண்டார்.
அப்போது அவர் தற்போது மேட்டூர் அணையின் நீர்இருப்பு அதன் முழு கொள்ளளவான 93.470 டி.எம்.சி ஆக இருப்பதையும், கிருஷ்ண ராஜசாகர், கபினி அணைகளில் இருந்து அதிகமான உபரிநீர் வெளியேற்றப்படுவதால் மேட்டூர் அணைக்கு இன்று காலை நீர்வரத்து விநாடிக்கு 1 லட்சத்து 12,555 கனஅடியாக இருந்த நிலையில் தற்போது குறைந்து வருவதாகவும் எனவே, நிலைமைக்கு ஏற்ப மேட்டூர் அணையில் இருந்து நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார்.
மேலும், கர்நாடக அணைகளின் நீர் இருப்பு மற்றும் நீர்வரத்து கணிசமான அளவு தொடர்ந்து வருவதாலும், தமிழகத்துக்கு வரும் ஆகஸ்ட் மாதத்துக்கு வழங்கப்பட வேண்டியநீர் அளவான 45.95 டிஎம்சி நீரை உச்ச நீதிமன்ற ஆணையின்படி கர்நாடகா உறுதி செய்யுமாறு ஆணையத்தை வலியுறுத்தினார். இக்கூட்டத்தில் காவிரி தொழில் நுட்பக் குழுமத்தின் தலைவர் ஆர்.சுப்பிரமணியன், அரசு உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?