உடல் உறுப்புகள் திருட்டை முறைகேடு என்பதா? - அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு அண்ணாமலை கண்டனம்
Jul 27 2025
67

சென்னை:
நாமக்கல்லில் நடந்தது கிட்னி திருட்டு அல்ல, முறைகேடு என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதற்கு தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் அவர் கூறியிருப்பதாவது: நாமக்கல் விசைத்தறி தொழிலாளர்களுக்கு நடந்தது ‘கிட்னி திருட்டு இல்லை, முறைகேடு’ என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொல்கிறார்.
ஒருவரின் ஏழ்மையைப் பயன்படுத்தி அவரின் உடல் உறுப்புகளை திருடுவதை முறைகேடு என்று சொல்வதா? இந்த விவகாரத்தில் இடைத்தரகராக செயல்பட்ட திமுக நிர்வாகி திராவிட ஆனந்தன் இன்றுவரை கைது செய்யப்படாமல் இருப்பது ஏன், கிட்னி திருட்டில் தொடர்புடைய திமுகவின் மண்ணச்சநல்லூர் சட்டப்பேரவை உறுப்பினர் நடத்தும் மருத்துவமனை மீது ஏதோ கண்துடைப்பு நடவடிக்கை எடுத்துவிட்டால் போதுமா? இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
பழங்குடியினர் வீடுகள்: அண்ணாமலை வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில், ‘‘திருப்பூர் மாவட்டம், அமராவதி வனச்சரகத்துக்கு உட்பட்ட கோடந்தூர் திருமூர்த்திமலை கிராமத்தில் காமராஜர், எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட வீடுகள் இன்று வாழவே முடியாத நிலைக்கு சிதிலமடைந்திருப்பதாக அப்பகுதியை சேர்ந்த பழங்குடியின மக்கள் கூறுகின்றனர்.
வருவாய்த்துறை சார்பில் ஆய்வு செய்யப்பட்டு 110 வீடுகளைப் புதுப்பித்துத் தர பழங்குடியினர் நல ஆணையம், ஆதி திராவிடர் நலத் துறைக்குப் பரிந்துரைத்ததாகச் சொல்லப்படும் நிலையில் ஒன்றரை ஆண்டுகளாகியும் இதுவரை எந்த நடவடிக்கையோ, நிதியோ ஒதுக்கப்படவில்லை. இது, மலைவாழ் மக்களைப் பற்றிய எந்த அக்கறையும் திமுக அரசுக்கு இல்லை என்பதையே காட்டுகிறது.
எளிய மக்களுக்கான பிரதமரின் வீடுகட்டும் திட்டம், ஜல் ஜீவன், பிரதமரின் கிராமப்புற சாலைகள் திட்டம் எனப் பல திட்டங்கள் மூலம் பெறப்படும் நிதிகள் எங்குதான் செல்கின்றன?’ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?