வினேஷ் 25 வயது வாலிபனாக தன் அம்மாவின் பூர்விக கிராமத்துக்கு வந்ததில், அங்கிருந்த இவன் தாய் மாமா வீட்டினருக்கு அத்தனை மகிழ்ச்சி. மாமாக்கு இரண்டுமே பெண். அதனால் தன் தங்கை மகனிடம் அதிக பிரியம்..
12 வயது வரை லீவ் விட்டால் இங்குதான் கிடப்பான். பிறகு வர மறுத்துவிட்டான்.. ஏதோ ஒரு கோச்சிங் கிளாஸை சாக்கு வெச்சி வருவதேயில்லை.
பூர்விக நிலம் ஒன்று விற்க இருந்ததால் .. அனைவரும் கையெழுத்து போட வேண்டுமென்று பிடிவாதமாக அவன் அம்மா அழைத்து வந்து விட்டாள்..
மாலை மாமாவுடன் ஊர்க்கேணி பக்கம் போயிருக்க.. அவனறியாமல் ஓரக்கண்ணால் அக்கேணியை பார்த்தான். இப்ப வீட்டுக்கு வீடு போர் தண்ணி வந்து விட.. பெரிதாக நடமாட்டமில்லாமல் இருந்தது அது..
இவன் பார்ப்பதை பார்த்து .. மாமா ,அவனை தள்ளிக்கொண்டு போய் கிணறை காண்பித்தார்..
தண்ணீர் தளும்பிக்கிடந்தது..
" லேய்.. ஞாபகமிருக்கா.. உன் அத்தை கூட நிதம் இந்த கேணிக்கு வந்து தண்ணி இறைச்சி குளிச்சிட்டு அத்தை துணி துவைச்சி முடியறவரை காவலுக்கு நிப்பியே.. அதே கிணறுதான்டா.. ஆனா.. போர் வெச்சி ஏத்தி வீட்டுக்கு தண்ணி பைப் குடுத்ததால் இப்ப இங்க அதிக புழக்கமில்லை.."
மாமா சொன்னது பாதிதான் புரிந்தது. யாரோ தன்னை " வினேசு .. வினேசு", என்று கரகர குரலில் அழைப்பது போலவேயிருக்க பயந்தே போனான்..
இவன் நெற்றியில் வியர்வைத்துளிகளை பார்த்த மாமா.. வீட்டுக்கு உடனே அழைத்து வந்து விட்டார். எதிர்பார்த்தது போலவே .. நல்ல காய்ச்சலும் வந்துவிட்டது வினேஷ்க்கு..
அவன் பாட்டிதான் " பிள்ளை பயந்திருக்கான். அவனை ஏன்டா அங்க கூட்டிட்டு போன. கடைசியா சிறு பிள்ளையா வந்தப்பவும் இப்படி கெணத்து மேட்டுக்கு தனியா போயி பயந்து காச்சலோடதான் அவ அம்மா ஊருக்கு தூக்கிட்டு போனா.. வெவரம் இருக்காடா உனக்கு?" னு பையனை திட்டினார்..
வினேஷ் கண்களுக்குள் அந்த 12 வயதில் அந்த கேணியருகே நடந்தது ஞாபகம் வந்தது..
" இவன் பெரியப்பா மவன்,தம்பி முறைதான் செந்தில். ஒன்னுரெண்டு வயசு
குறைச்சலா இருப்பான். தண்ணீக்குள்ள மீனு இருக்குதுன்னு இவன் பொய் சொன்னதைக்கேட்டு .. அவனும் பாக்கனும்னு அடம்பிடிக்க, அக்கம் பக்கம் யாருமில்லாத அந்த நேரத்துல தன் முதுகு மேல ஏற சொன்னான் குனிந்து கொண்டு..
அவனும் ஏறி பார்த்து " கண்களுக்கு மீன் தெரியல" என்று சொல்லி சண்டையிட..
அப்படியே வேணும்னே சட்டுனு எழுந்திருக்க.. அவன் நிலை தடுமாறி கிணற்றில் விழுந்து விட்டான்.. பயந்து போய் அப்படியே ஓடிவந்து வீட்டுக்குள் படுத்தவனுக்குதான் அம்புட்டு ஜூரம். இவன் அம்மை .. " டாக்டர்ட் காமிச்சிக்கிறேன். இவன் அப்பா என்னைய கொண்ணே போட்டுடுவாரு'னு காலை முதல் பஸ்ஸிலேயே அழைத்து சென்று விட்டாள்..
அவன் மனசாட்சி அப்பப்ப குத்துவதால்தான்.. இப்ப வரை கிராமத்துக்கு வருவதை தவிர்த்தான். இதோ இப்ப அதே கிணற்றோரம் அந்த செந்தில் பய குரல் கேட்டு பயந்து...
"உன்னைய பார்க்க யாரு வந்தாருக்கா பாருடா .. வினேஷூ.. பெரியப்பா வந்திருக்காரு..!" என்று பாட்டி குரல் கேட்க.. கண்டை கஷ்டப்பட்டு திறந்து பார்க்க.
அங்கு நின்னது செந்தில்.. அதே செந்தில்.. இவன் கிணற்றில் தள்ளி கொன்ற அதே செந்தில்.. "
இவன் பயந்து எழுந்து ஓட முயற்சிக்க,பக்கத்தில் நின்ற அவன் பெரியப்பா தோளில் கை வைத்து அமர்த்தினார்..
"லேய் !பயந்து ஜூரம் வர வயசாடா இது?..என் பையன பாரு..உன்னைய விட இளையவன்தான..சின்ன வயசிலியே நீச்சல் பழகுனவன்.இப்ப கூட திடீர்னு அந்த கெணத்துக்குள்ள குளிச்சி நீந்திட்டு வருவான்.ஆத்தையே அசால்ட்டா கடந்துடுவான்.டௌனுல வெச்சி வளக்குறேன்னு ,ஒத்த புள்ளைய ஒரு தெகிரியம் இல்லாம வளத்துருக்காள என் தங்கச்சி! என்னத்தை சொல்றது..!"
"அப்ப இவன் நாம கெணத்துல தள்ளிவிட்டப்போ சாகலியா? என்னு வினேஷ் யோசிக்க..
" என்னடா?.கெணத்துக்கு பக்கத்துல இருக்குற தோப்புலேருந்து உன்னை பேரு சொல்லி நேத்து அத்தனை வாட்டி கூப்புட்டேன்..திரும்பவே இல்லியேப்பா நீ.உன் மாமாவோட நீ பாட்டுக்கு போயிட்ட.அதான் ஒரு எட்டு உன்னைய வீட்டுலியே பாக்லான்னு அப்பாவ கூட்டி வந்தேன்..கெளம்புடா..சினிமா கினிமா ஏதும் போலாம்..பேயும் கிடையாது..பிசாசும் கிடையாது..எந்திரினு", அவன் கையைப்பிடித்து தூக்க..அவனை அப்படியே கட்டித்தழுவிக்கிட்ட வினேஷை பாத்து ஆச்சரியப்பட்டனர் அனைவரும்..
" எம்புட்டு நட்பு பாரு புள்ளைவொளுக்குள்ள..இனி அடிக்கடி அழைச்சி வா தாயி ஊருக்கு", என்றவர்களை பார்த்து குதூகலத்துடன் தலையசைத்தாள் வினேஷின் தாய்..
தான் கொலைகாரனில்லை என்ற நினைப்பிலேயே, வினேஷ்க்கு உடல் நலமாகியிருந்தது..கூடவே மனசும்..
(முற்றும்)

தஞ்சை பியூட்டிஷியன்
உமாதேவி சேகர்