ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் பழைய முறையிலேயே பணம் பட்டுவாடா தொடர வேண்டும்
சென்னை, ஆக.1 -
ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் பழைய முறையிலேயே பணம் பட்டுவாடா தொடர வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் சாமி.நடராஜன் விடுத்துள்ள அறிக்கை யில் தெரிவித்திருப்பதாவது: விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திரு வண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் ஒழுங்கு முறை விற்பனை கூடங்களில் வியாபாரிகள் கொள் முதல் செய்த வேளாண் பொருட்களுக்கு உண்டான பணத்தை விற்பனை கூடங்களின் வங்கி கணக்கிற்கு மொத்தமாக அனுப்பி வந்தனர். இதை பிரித்து ஒவ்வொரு விவசாயிகளின் வங்கி கணக்கிற்கும் விற்பனை கூடங்களின் நிர்வாகிகள் அனுப்பி வந்தனர். இதை மாற்றி வியாபாரிகளே (e-NAM) வலைதள பக்கம் மூலம் விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கு பணத்தை அனுப்பிட வேண்டும் என தமிழ்நாடு வேளாண்மை விற்பனை வாரிய ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இதற்கு வியாபாரிகளும், விவசாயிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து, பழைய நிலையே தொடர வேண்டு மென வலியுறுத்தி வருகின்றனர். தேசிய வேளாண் சந்தைக்கான மின் வர்த்தக தளம் (e-NAM) ஏப்ரல் 2016இல் ஒன்றிய அரசால் துவக்கப்பட்டது. இது விவசாயப் பொருட்களுக்கு ஒருங்கிணைந்த தேசிய சந்தையை உருவாக்கு வதற்கான நடைமுறையாகும். விற்பனை கூடங் களை, மண்டிகளை மின்னணு தளமான (இ-நாம்) உடன் இணைக்க ஒன்றிய அரசு ஒப்புதலும் அளித்தது. தற்போது மத்தியப் பிரதேசம், குஜராத், மகா ராஷ்டிரா, தெலுங்கானா உட்பட பல மாநிலங்களில் உள்ள ஆயிரம் வேளாண் விற்பனை மையங்கள் (e-NAM) மின்னணு தளத்துடன் இணைக்கப்பட்டு உள்ளன. இதில் இப்போது தமிழ்நாட்டில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடங்களை இணைத்தி டும் ஏற்பாடாகவே வியாபாரிகள் நேரடியாக விவசாயி களுக்கு இ-நாம் வழியே பணம் பட்டுவாடா செய்து கொள்ள உத்தரவிட்டுள்ளது. இது ஒன்றிய அரசின் நிர்ப்பந்தத்தின்படி உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஒன்றிய பாஜக அரசு வேளாண் சந்தைகளை படிப்படியாக கார்ப்பரேட்டுகளின் கைகளில் ஒப்படைத் திடும் ஏற்பாடுதான் இது. எதிர்காலத்தில் தற்போ துள்ள வியாபாரிகள் கொள்முதல் செய்ய முடியாத நிலை ஏற்படும். பெரும் நிறுவனங்கள் கார்ப்பரேட்டு கள் கொள்முதல் செய்வார்கள். அடுத்து ஒழுங்கு முறை விற்பனை கூடத்தை தரை வாடகைக்கு விட்டு விடுவார்கள். முழுவதும் தனியாரிடம் சென்றுவிடும். எனவே, ஒழுங்குமுறை விற்பனை கூடங்களின் வங்கி கணக்கிற்கு வியாபாரிகள் நேரடியாக பணம் அனுப்பும் முறையையே தொடர்ந்திட மாநில அரசு உத்தரவிட வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வலியுறுத்துகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.