கம்போடியா மீது தாய்லாந்து தாக்குதல் - ட்ரம்ப்பின் சமாதானம் என்னவாயிற்று?
Dec 14 2025
13
பாங்காக் (தாய்லாந்து): அச்சுறுத்தல் முழுமையாக நீங்கும் வரை கம்போடியா மீதான தாக்குதல் தொடரும் என தாய்லாந்து பிரதமர் அனுடின் சர்ன்விராகுல் தெரிவித்துள்ளார். இவ்விரு நாடுகளுக்கும் இடையே அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறி இருந்த நிலையில், தாய்லாந்து பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தாய்லாந்து பிரதமர் அனுடின் சர்ன்விராகுல் இன்று காலை வெளியிட்ட சமூக ஊடக பதிவில், ‘‘எங்கள் நிலத்துக்கும் மக்களுக்கும் இனி எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று நாங்கள் உணரும் வரை தாய்லாநதின் ராணுவ நடவடிக்கைகள் தொடரும் என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இன்று காலை எங்கள் நடவடிக்கைகள் எங்களின் இந்த நிலைப்பாட்டை உணர்த்தி உள்ளன’’ என தெரிவித்துள்ளார்.
தாய்லாந்தின் தாக்குதலை அடுத்து அமெரிக்காவை கம்போடியா விமர்சித்துள்ளது. கம்போடியாவுக்கும் தாய்லாந்துக்கும் இடையே உள்ள பகையை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் ஒப்புக்கொண்டதாக ட்ரம்ப் அறிவித்த போதிலும், தாய்லாந்தின் படைகள் வான் மற்றும் தரை வழி தாக்குதல்களை தொடர்வதாக கம்போடிய அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கம்போடிய பாதுகாப்பு அமைச்சகத்தின் சமூக ஊடகப் பதிவு ஒன்றில், ‘‘இன்று (டிச.13) தாய்லாந்தின் இரண்டு எஃப்-16 போர் விமானங்கள், கம்போடிய இலக்குகள் மீது ஏழு குண்டுகளை வீசியது. தாய்லாந்து படைகள் குண்டுவீச்சை இன்னும் நிறுத்தவில்லை. தொடர்ந்து குண்டுகளை வீசி வருகின்றன’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 8 மணி வரை தாய்லாந்து ராணுவம் தாக்குதல் நடத்திய கிராமங்கள் மற்றும் குடியிருப்புகள் குறித்த விவரங்களை கம்போடிய பாதுகாப்பு அமைச்சகம் பட்டியலிட்டுள்ளது. ஹோட்டல்கள் மற்றும் கிளப்புகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதை அது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் காட்டுகின்றன.
அதேநேரத்தில், இந்த சமீபத்திய தாக்குதல்களால் உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பதாக கம்போடிய அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. எனினும், இந்த தாக்குதல் காரணமாக இரு நாட்டு எல்லையில் வசிக்கும் ஏராளமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளனர்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?