காசாவை முழுமையாகக் கைப்பற்றி தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு முன்மொழிந்த முடிவுக்கு அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்கு பல முனைகளில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. சீனா, துருக்கி, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளும், ஐக்கிய நாடுகள் சபையும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
எதிர்ப்புகளை சமாளித்துவிடலாம் என்ற நோக்கில் இஸ்ரேல் தனது ‘ஆக்கிரமிப்பு’ நடவடிக்கையை அரங்கேற்றவும் தொடங்கிவிட்டது. இஸ்ரேலின் நடவடிக்கை, காசாவின் நிலை, சர்வதேச சமூகத்தின் நிலைப்பாடு, உள்நாட்டில் நிலவும் ஆதரவு, எதிர்ப்பு ஆகியனவற்றை தெளிவாகப் பார்ப்போம்.
முழுமையாகக் கைப்பற்றுதல் என்றால் என்ன? - முதலில், காசாவை ழுமையாகக் கைப்பற்றுதல் அல்லது ஆக்கிரமித்தல் என்றால் என்ன என்று சற்று தெளிவாகப் பார்ப்போம். கடந்த அக்டோபர் 7, 2023 அன்று பாலஸ்தீன விடுதலை ஆதரவு இயக்கமான ஹமாஸ் இஸ்ரேல் மீது வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில், 1200 பேர் கொல்லப்பட்டனர். 251 பேர் பிணைக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர். இதனையடுத்து, காசா மீது இஸ்ரேல் தாக்குதலைத் தொடங்கியது. இஸ்ரேல் நடத்திவரும் பதில் தாக்குதலில் காசாவைச் சேர்ந்த 61 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். ராணுவத் தாக்குதல் உயிரிழப்புகளோடு இப்போது பட்டினிச் சாவும், மரண எண்ணிக்கையை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், காசாவில் இஸ்ரேல் ராணுவத் தாக்குதலால் பாதிக்கப்படாமல் எஞ்சியுள்ளது அப்பகுதியின் 25% மட்டுமே. அங்குதான் போரில் உயிர் பிழைத்த மிச்சம் மீதி பேர் தஞ்சமடைந்துள்ளனர். எஞ்சியுள்ள இந்தப் பகுதிக்குள் ராணுவப் படைகளை குவித்துவிட்டால், காசாவை இஸ்ரேல் முழுமையாகக் கைப்பற்றியதாகிவிடும். இதன் மூலம் ராணுவத்தினால் மட்டுமல்ல, அரசியல் ரீதியாக, மத, கலாச்சார ரீதியாக காசாவை இஸ்ரேல் கட்டுப்படுத்தும்.
ஒரு பக்கம் உணவுப் பஞ்சம், மறுபக்கம் காசா முழுவதையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் இஸ்ரேலின் முடிவு. இவற்றுக்கு இடையே பசித்த வயிறும், வறண்ட கண்களுமாக உயிரை கையில் பிடித்துக் கொண்டு துயரத்தின் சாட்சியாக நின்று கொண்டிருக்கிறார்கள் காசா மக்கள். இதோ இந்தச் செய்தியை பதிவு செய்த நேரத்தில் கூட, காசாவில் பட்டினியால் இருவர் உயிரிழந்ததாக அமெரிக்க தன்னார்வ தொண்டு நிறுவனம் நடத்தும் ‘காசா ஹியூமேனிட்டேரிய ஃபண்ட்’ (GHF) முகாம் உறுதி செய்திருந்தது. பட்டினியால் காசாவாசிகள் மட்டுமல்ல அங்கே பிணைக் கைதிகளாக உள்ள இஸ்ரேலியர்களும் கூட பாதிக்கப்பட்டுள்ளனர்.
5 கோட்பாடுகள்: இந்தச் சூழலில், காசா மீதான தாக்குதல்களை நிறுத்த, ஹமாஸ்களை ஆயுதமற்றவர்களாக்க வேண்டும், பிணைக் கைதிகளை மீட்க வேண்டும், காசா பகுதியிலிருந்து படைகளை படிப்படியாக திரும்பப் பெற வேண்டும், அப்பகுதியை இஸ்ரேல் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வர வேண்டும், அங்கே ஹமாஸ், பாலஸ்தீன தலையீடு இல்லாத ஒரு தலைமையை உருவாக்க வேண்டும் என்ற பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் 5 கோட்பாடுகளில் உடன்படுவதாக இஸ்ரேல் அமைச்சரவை தெரிவித்துள்ளது. விதவிதமான வார்த்தைகளில் சொல்லப்பட்டாலும், இது காசாவை கைப்பற்றுவது தவிர வேறொன்றும் இல்லை.
ஆனால், இந்த முடிவுகளை இஸ்ரேல் எதிர்க்கட்சித் தலைவர் யாயிர் லாபிட் கடுமையாக எதிர்த்துள்ளார். இது ஒரு பேரழிவுக்கு வழிவகுக்கும் பேராபத்தான முடிவு என்று அவர் விமர்சித்துள்ளார்.
சீனாவும் இஸ்ரேலின் முடிவு மீது தனது ஆழ்ந்த அக்கறையை வெளிப்படுத்தியுள்ளது. அந்நாட்டு வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர், “காசா பாலஸ்தீனியர்களுக்கு சொந்தமானது. காசாவை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதென்ற அபாயகரமான முடிவை இஸ்ரேல் உடனடியாக நிறுத்திவைக்க வேண்டும்.
காசாவில் தற்போது நிலவும் மனிதாபிமான சிக்கலைத் தீர்க்க சரியான வழி, பிணைக் கைதிகள் விடுவிப்பை உறுதி செய்வதோடு, உடனடியாக போர் நிறுத்தத்தை அமலுக்குக் கொண்டு வருவது. காசாவில் போர் நிறுத்தத்தை அமல்படுத்த சர்வதேச சமூகத்துடன் இணைந்து இஸ்ரேலுக்கு உதவ சீனா தயாராக இருக்கிறது.” என்று கூறியுள்ளார்.