கொடிக்கம்பங்களை அகற்று: மதுரை ஐகோர்ட்டில் 3 நீதிபதிகள் அமர்வு உத்தரவு
மதுரை, ஆக.14-–
சாலையோரங்களில் அமைக்கப் பட்டுள்ள கட்சிக் கொடிக்கம்பங்களை அகற்றும் விவகாரத்தில், அரசியல் கட்சிகளின் கோரிக்கைகளை ஏற்க மறுத்து மதுரை ஐகோர்ட் 3 நீதிபதிகள் அதிரடியாக உத்தர விட்டனர். இதனால் சாலையோர கொடிக்கம்பங்களை அகற்றும் நடவடிக்கைக்கு எந்த தடையும் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் பல இடங்களில் சாலை யோரங்களில் அரசியல் கட்சிகள் சார்பில் கொடிக் கம்பங்கள் அமைக்கப் பட்டுள்ளன. இந்த நிலையில் இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட் தனி நீதிபதி இளந்திரையன், தமிழகம் முழுவதும் சாலை யோரங்களிலும், உள்ளாட்சிகளுக்கு சொந்தமான இடங்களிலும் அரசியல் கட்சிகள் மற்றும் சமுதாய அமைப்புகள் சார்பில் வைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை அகற்றும்படி ஜனவரி மாதம் உத்தரவு பிறப்பித்தார்.
இதற்கு எதிராக மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், விஜயகுமார், சவுந்தர் ஆகிய 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரித்து வந்தது. இதில் மற்ற கட்சிகளும் தங்கள் கருத்தை தெரிவிக்கலாம் என கடந்த விசாரணையின்போது உத்தர விடப்பட்டது. அதன் பேரில் அண்ணா தி.மு.க., ம.தி.மு.க., த.வெ.க. உள்ளிட்ட கட்சிகள் இடையீட்டு மனுக்களை தாக்கல் செய்தன. இந்த மனுக்கள் அனைத்தும் இதே நீதிபதிகள் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தன.
அப்போது நீதிபதிகள், “கொடிக்கம்பங்களை அகற்றும் விவகாரத்தில் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட் சில நாட் களுக்கு முன்பு தள்ளுபடி செய்துவிட்டது” என்றனர்.
அதற்கு கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சிகளின் வக்கீல்கள், “அந்த மனு தாரருக்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை” என்றனர். இதைக்கேட்ட நீதிபதிகள், “நீங்கள் தாக்கல் செய்த மனுவின் கோரிக்கையும், சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் கோரிக்கையும் ஒன்றுதான். இதே போல் இங்கு தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களின் கோரிக்கையும் ஒன்றுதான். எனவே சுப்ரீம் கோர்ட் மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்ததால் நாங்கள் எந்த உத்தரவையும் பிறப்பிக்க இயலாது” என்றனர்.
மனுதாரர்களின் வக்கீல்கள், “கொடிக் கம்பங்களை அகற்றும் உத்தரவு காரணமாக அரசியல் கட்சிகள் பல்வேறு விளைவுகளை சந்திக்க நேரிடும். எனவே இந்த வழக்கில் எங்கள் தரப்பு வாதங்களை பதிவு செய்து உரிய முடிவு எடுக்க வேண்டும்” என தெரிவித்தனர். ஆனால் மனுதாரர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், இந்த மனுக்கள் மீதான விசாரணையை முடித்து வைப்பதாக உத்தரவிட்டனர்.