சில தருணங்கள்

சில தருணங்கள்


உனக்காக காத்திருக்கும் தருணங்கள்

எத்தனை அற்புதமானவை..


நீ இன்னேரம் எங்கிருப்பாய்

என்ன செய்துகொண்டிருப்பாய்

என்னைப்போலவே நீயும்

கணமெல்லாம் ஏங்கிக்கொண்டிருப்பாயா

கனவெல்லாம் என் நினைவை தாங்கிக்கொண்டிருப்பாயா..


அகப்படாததாய் சில கனவுகள்

இருளில் கரையும்..


நான் அறியமாட்டேனென

நீ முத்தமிட்ட கன்னத்து ஈரங்கள் ஜென்மங்கள் கடந்தும்

இன்னமும் உலரவேயில்லை..


அருகில் எவருமில்லாது

நீள் நெடுங்காலம்

உன்னோடு பயணித்தலொரு

பெருங்கனவெனக்கு..


அந்த வாடைக்காற்றும்

இரவுத்தனிமையும் நிலைபெற்றால் பரவாயில்லை..


ஏன் என் அன்பெனும் நதி

உன் பெருங்கடல் சேர்வதேயில்லை..


மறுக்கப்பட்ட அல்லது மறைக்கப்பட்ட சலனங்களுக்கப்பால்

நீ கலைந்துவிடுகிறாய்..


இந்த இரவுகளை உதறிவிட்டு

உறக்கத்தை போர்த்திக்கொண்டு

உன் கனவொன்றோடே

மூழ்கி இறந்துவிடவேண்டும்..


நீ சலனப்படும் நி்கழ்வின்பொருட்டு

ஏன் நான் நிலைகொள்ளாது தவிக்கிறேன்..


அதோ நீ வந்துகொண்டிருக்கலாம்

என் காத்திருப்பின் பெருவலி

உன்னை ரணப்படுத்தியிருக்கலாம்..


உனக்கருகில் வாழ்ந்துவிடுதலென்பது

பெருங்கனவாகவே போய்விட்டதெனக்கு..


சோவென்ற மழைக்கு நனையும்

பட்ட மரம்போல்..


வேரறுந்து கிடக்கிறது

நீ அருகற்றதோர்

என் மீள் ஆன்மா..


காத்திருப்பின் தருணங்கள்

சுகமானவை மட்டுமல்ல..


சில சமயம் வலியானவை

ரணம் சேர்ப்பவை..!


ம.முத்துக்குமார்

வே.காளியாபுரம்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%