சென்னை முத்தையால்பேட்டை மல்லிகேசுவரர் கோயிலில் திருவெம்பாவை கூட்டு வழிபாடு: அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார்
மார்கழித் திருவிழாவை முன்னிட்டு இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று (16–ந் தேதி) சென்னை, முத்தையால்பேட்டை, மரகதாம்பாள் உடனுறை மல்லிகேசுவரர் கோயிலில் திருவெம்பாவை கூட்டு வழிபாட்டை தொடங்கி வைத்தார்.
இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகக் கட்டுப்பாட்டிலுள்ள கோயில்கள் சார்பில் சித்தர்கள் மற்றும் அருளாளர்களுக்கு விழாக்கள் நடத்தி சிறப்பு செய்வதோடு, இறையன்பர்கள் பங்கேற்புடன் மகாசிவராத்திரி பெருவிழா, நவராத்திரி விழா, ஐயப்பன் மலர் வழிபாடு, முருகன் கோயில்களில் கந்த சஷ்டி பாராயணம், வைணவ கோயில்களில் திருப்பாவை பாராயணம் போன்ற சிறப்பு வழிபாடுகளும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.
மாதங்களில் சிறந்த மாதமென கூறப்படும் மார்கழி மாதம் இறைவழிபாட்டிற்கு மிகவும் உகந்ததாக போற்றப்படுகிறது. இம்மாதத்தில் வைணவ கோயில்களில் 12 ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் நாச்சியார் அருளிய திருப்பாவை பாசுரங்களும், சிவன் கோயில்களில் சைவக் குரவர்களில் ஒருவரான மாணிக்கவாசகரால் இயற்றப்பட்ட திருவெம்பாவை பாசுரங்களும் இறையன்பர்களால் தொடர்ந்து பாராயணம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், அமைச்சர் பி.கே.சேகர்பாபு மார்கழித் திருவிழாவை முன்னிட்டு சென்னை, முத்தையால்பேட்டை மரகதாம்பாள் உடனுறை மல்லிகேசுவரர் கோயிலில் திருவெம்பாவை கூட்டு வழிபாட்டை தொடங்கி வைத்தார். அறநிலையத்துறை ஆலோசனைக் குழு உறுப்பினர் சுகி சிவம் திருவெம்பாவையின் சிறப்பு குறித்து விளக்கிக் கூறினார். அதனைத் தொடர்ந்து திருக்கோயில் ஓதுவார்கள் மற்றும் இறையன்பர்கள் திருவெம்பாவை பாராயணம் செய்தனர்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு பணி அலுவலர் ச.லட்சுமணன், மண்டல இணை ஆணையர்கள் ஜ.முல்லை, கி.ரேணுகாதேவி, சு.மோகனசுந்தரம், உதவி ஆணையர்கள் க.சிவகுமார், கி.பாரதிராஜா, திருக்கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் வெங்கட கோபாலகிருஷ்ணன் மற்றும் அறங்காவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?