சென்னை: ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து தருவதாக ஜார்க்கண்ட் இளைஞர்களிடம் பணம் பறித்த இருவர் கைது
Oct 24 2025
18
சென்னை: ஜார்க்கண்ட் இளைஞர்களிடம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து தருவதாக கூறி பணம், செல்போன் பறித்த பிஹாரை சேர்ந்த இருவர் சென்னையில் கைது செய்யப்பட்டனர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் பீர்பால் (23). சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணி செய்து வருகிறார். இவர், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர் செல்ல நண்பர் ஒருவருடன் கடந்த அக்.13ம் தேதி சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வெளி மாநிலத்தைச் சேர்ந்த 2 இளைஞர்கள் வந்துள்ளனர்.
வந்தவர்கள் பீர்பால் மற்றும் அவரது நண்பரிடம் ரயில் டிக்கெட் உடனடியாக முன்பதிவு செய்து தருவதாக கூறி சேத்துப்பட்டு அழைத்து சென்றுள்ளனர். பின்னர், அங்கு மறைவான இடத்தில் வைத்து தாக்குதல் நடத்தி, கத்தி முனையில் இருவரிடமும் இருந்து பணம் மற்றும் செல்போன்களை பறித்துள்ளனர். மேலும், அவர்களது கடவுச் சொல்லை (பாஸ்வேர்ட்) பெற்று பறிக்கப்பட்ட செல்போனில் இருந்து ஜிபே மூலம் ரூ.48 ஆயிரத்தை அவர்களது வங்கி கணக்குக்கு மாற்றியுள்ளனர். பின்னர், இருவரையும் அங்கேயே விட்டு தப்பினர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பீர்பால், இது தொடர்பாக நண்பருடன் சென்று சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இதில், ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து தருவதாக கூறி பணம் பறித்தது பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த ராஜ்குமார் ராம் (24), தினேஷ்குமார் முகியா (21) என்பது தெரியவந்தது. இதையடுத்து, எழும்பூர் ரயில் நிலையம் அருகே நின்றிருந்த இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இருவரும் சேர்ந்து சென்ட்ரலில் பீர்பால் மற்றும் அவரது நண்பரிடம் பணம், செல்போனை பறித்த பின்னர் ஆந்திர மாநிலம் சென்று அங்கு ரயில் நிலையங்களில் தூங்கி கொண்டிருந்த நபர்களிடம் அடுத்தடுத்து 16 செல்போன்களை திருடியுள்ளதும் தெரியவந்தது. அவர்களிடம் இருந்து மொத்தம் 18 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?