செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை 3 ஆண்டுகளில் மூன்று மடங்காகும் இஸ்ரோ தலைவர் உறுதி

ஹைதராபாத்:
“விண்ணில் தற்போது, 55 இந்திய செயற்கைக்கோள்கள் உள்ள நிலையில், அடுத்த மூன்று ஆண்டுகளில் அவற்றை மும்மடங்காக உயர்த்த திட்டமிட்டுள்ளோம்,” என, இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.
தெலுங்கானாவின் ஹைதராபாதில், 'ஜி.பி.பிர்லா நினைவு சொற்பொழிவு' நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின் தலைவர் நாராயணன் பங்கேற்றார். 'இந்திய விண்வெளி திட்டத்தின் சாதனைகள், சவால்கள் மற்றும் எதிர்கால கண்ணோட்டங்கள்' என்ற தலைப்பில் அவர் பேசியதாவது:
இஸ்ரோ மற்றும் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையமும் இணைந்து அனுப்பும், 'நிசார்' செயற்கைக்கோள், வரும் 30ம் தேதி ஜி.எஸ்.எல்.வி., - எப் 16 ராக்கெட் வாயிலாக விண்ணில் ஏவப்பட உள்ளது. இந்தாண்டு, 12 ஏவுகணைகளை விண்ணில் ஏவ முடிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது, விண்வெளி சுற்றுப்பாதையில் இந்தியாவின் 55 செயற்கைக்கோள்கள் பயன்பாட்டில் உள்ளன. அடுத்த மூன்று ஆண்டுகளில், அவற்றை மும்முடங்காக உயர்த்தும் பணியில் இஸ்ரோ ஈடுபட்டுள்ளது. விண்வெளி துறையில் நம் தேவை மிகப்பெரியது.
தேவை அதிகமாக இருப்பதால், அதிகமான செயற்கைக்கோள்களை உருவாக்கி, அவற்றை விண்வெளிக்கு அனுப்பும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.
வரும் 2035ல், நம் நாடு, சர்வதேச விண்வெளி நிலையத்தை உருவாக்கும்.
சந்திரயான் - 3 வெற்றிக்கு பின், இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற ஜப்பான் விரும்பியது. இதன் விளைவாக, ஜப்பானிய விண்வெளி நிறுவனமான ஜாக்சாவும், சந்திரயான் - 5 பணியை நோக்கி செயல்பட முடிவு செய்துள்ளது. நாங்கள் இணைந்து செயற்கைக்கோள்களை உருவாக்கி வருகிறோம்.
அதேபோல், இந்திய ராக்கெட்டுகளை பயன்படுத்தி, அமெரிக்காவின் 6,500 கிலோ எடையுள்ள தகவல் தொடர்பு செயற்கைக்கோளை, அடுத்த மூன்று மாதங்களில் சுற்றுப்பாதையில் செலுத்தும் பணியில் இஸ்ரோ ஈடுபட்டுள்ளது. ககன்யான் திட்டத்தின்படி, 2027ம் ஆண்டின் முதல் காலாண்டில், விண்வெளிக்கு இந்திய வீரர்களை அனுப்ப திட்டமிட்டுள்ளோம்.
இந்திய ராக்கெட்டுகளை பயன்படுத்தி, விண்வெளி தொழில்நுட்பம் இல்லாத 34 நாடுகளைச் சேர்ந்த 433 செயற்கைக்கோள்களை இஸ்ரோ விண்வெளிக்கு அனுப்பியுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில், இஸ்ரோவால் ஏவப்பட்ட மொத்த செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை 518. ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில், 4,000 கோடி ரூபாய் பட்ஜெட்டில், மூன்றாவது ஏவுதளத்தை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?