ஜம்மு காஷ்மீர் மேக வெடிப்பில் 60 பேர் பலி: உயிர் பிழைத்தவர்கள் சொல்வது என்ன?
கிஷ்த்வார்:
ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் நேற்று மேகவெடிப்பால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி 60 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திலிருந்து மீண்டவர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் நேற்று மேகவெடிப்பின் காரணமாக திடீர் வெள்ளப்பெருக்குடன் நிலச்சரிவும் ஏற்பட்டது. இதனால் சோசிட்டி மலை கிராமத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60-ஆக உள்ளது. இன்னும் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பதாக நம்பப்படுவதால் இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
மீட்பு பணிகளில் என்டிஆர்எப், எஸ்டிஆர்எப், காவல்துறை, ராணுவம் மற்றும் உள்ளூர் தன்னார்வலர்கள் பெரிய அளவில் ஈடுபட்டுள்ளனர். நேற்று இந்த சோக சம்பவம் நடந்தபோது மச்சைல் மாதா கோயில் யாத்திரையின் கடைசி கட்டத்துக்காக சோசிட்டியில் கூடியிருந்த நூற்றுக்கணக்கான யாத்ரீகர்களில் ஒன்பது வயது சிறுமி தேவன்ஷியும் ஒருவர்.
மேகவெடிப்பால் திடீர் வெள்ளம் ஏற்பட்டபோது ஒரு மேகி-பாயிண்ட் கடையில் சேறு மற்றும் இடிபாடுகளுக்குள் சிக்கி புதைந்திருந்த அவர், சில மணி நேரங்களுக்குப் பிறகு அவரது மாமா மற்றும் பிற கிராமவாசிகளால் மீட்கப்பட்டார்.
இதுபற்றி பேசிய அவர், “நாங்கள் ஒரு மேகி கடையில் நின்றோம். மேகவெடிப்பு வெள்ளத்தால் மக்கள் எங்களை வேகமாக ஓடச் சொன்னார்கள். நாங்கள் அங்கேயே நின்றோம். சில நிமிடங்களில், கடையின் மீது ஒரு பெரிய சேறு சகதியும் சரிந்தது. திடீர் வெள்ளத்தில் சிக்கி என்னால் மூச்சு விட முடியவில்லை.
என் மாமா, பூஜி மற்றும் பலர் பல மணிநேரம் போராடி மரப் பலகைகளை அகற்றினர், நாங்கள் அனைவரும் வெளியே வந்தோம். என்னையும் என் குடும்ப உறுப்பினர்களையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர். மாதா எங்களைக் காப்பாற்றினார்”என்றார்.
32 வயதான சினேகா இந்த வெள்ளத்தில் சிக்கி மீண்டு வந்தார். இதுபற்றி பேசிய அவர், “ நாங்கள் வாகனத்தில் சென்ற போது ஒரு பெரிய இடி சத்தம் கேட்டது, மலையின் மேல் மேக வெடிப்பு ஏற்பட்டதை கண்டோம். நான் ஒரு வாகனத்தின் கீழ் சேற்றில் சிக்கிக்கொண்டேன். என்னைச் சுற்றிலும் உடல்கள் கிடந்தன. அவர்களில் சிலர் கழுத்து உடைந்து, கைகால்கள் துண்டிக்கப்பட்ட குழந்தைகள். நான் உயிர் பிழைப்பேன் என்ற நம்பிக்கையே இல்லை.
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு வாகனத்தின் கீழ் புதைந்தபோது, எல்லாம் முடிந்துவிட்டது என்று நினைத்தேன். என் தந்தை முதலில் தன்னை விடுவித்துக் கொண்டார். பின்னர் எனக்கு உதவினார். நான் என் தாயை ஒரு மின் கம்பத்தின் அடியில் இருந்து வெளியே இழுத்தேன். அவர் மிகவும் காயமடைந்த நிலையில் இருந்தார்.
வெளியே வந்தபோது உடல்கள் எல்லா இடங்களிலும் கிடந்தன. முழு மலையும் இடிந்து விழுந்ததுபோல இருந்தது. சிட்டோ மாதா கோயிலின் தாக்கூர் ஜி சிலை கூட எங்கள் கண்களுக்கு முன்பாக அடித்துச் செல்லப்பட்டது. அதிகாரிகள், காவல்துறை, ராணுவம், சிஆர்பிஎஃப் மற்றும் உள்ளூர்வாசிகளின் விரைவான நடவடிக்கை எண்ணற்ற உயிர்களைக் காப்பாற்றியது. ஒரு மணி நேரத்துக்குள், காயமடைந்தவர்களை மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்ல வாகனங்கள் வந்தன. அவர்கள் தாமதமாக வந்திருந்தால், இன்னும் பலர் இறந்திருப்பார்கள்" என்று அவர் கூறினார்.
“வானமும் பூமியும் ஒன்றாக இடிந்து விழுவது போல் தோன்றியது. பெரிய வெடிப்பு சத்தத்திற்குப் பிறகு, முழுப் பகுதியும் மூடுபனி மற்றும் தூசியால் நிரம்பியிருந்தது. என்னுடன் வந்தவர்கள் என் மனைவி, மகள் உட்பட பெரும்பாலோர் சேற்றில் சிக்கினர். பாலம் கட்டுமான தளத்தில், 10-க்கும் மேற்பட்டோர் செனாப் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதை நான் கண்டேன்” என்று 12 பேருடன் வந்திருந்த உதம்பூரைச் சேர்ந்த சுதிர் கூறினார்.
ஜம்முவைச் சேர்ந்த உமா பேசுகையில், “வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படாமல் இருக்க ஒரு வாகன டயரை பிடித்துக் கொண்டேன். ஒரு போலீஸ்காரர் என்னைக் காப்பாற்றினார். ஆனால் என் சகோதரி கஹ்னா ரெய்னாவை இன்னும் காணவில்லை” என்று அவர் கூறினார்.
15 பேர் கொண்ட குழுவுடன் வந்திருந்த வைஷாலி சர்மா, “நாங்கள் ஒரு பாலத்தை நெருங்கியபோது மதியம் 12:15 மணியளவில். எங்களை ஓடச் சொல்லி சத்தம் போட்டனர். அதற்குள் நாங்கள் சேறு மற்றும் பாறைகளுக்கு அடியில் சிக்கினோம். நான் பாறைகளுக்கு இடையில் சிக்கிக்கொண்டேன். என் பெற்றோர் எங்கே என்று எனக்குத் தெரியவில்லை” என்றார்