டிரம்பின் ஆட்குறைப்பு நடவடிக்கை.. 3,900 பேரை வெளியேற்றும் நாசா - அதிர்ச்சியில் ஊழியர்கள்
Jul 28 2025
13

வாஷிங்டன்,
பெடரல் பணியாளர்கள் அதாவது அமெரிக்க அரசுப் பணியாளர்கள் எண்ணிக்கையை குறைக்க அந்நட்டின் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் முடிவெடுத்துள்ளார். டிரம்பின் இந்த அதிரடி நடவடிக்கையால் பல்வேறு நிறுவனங்களில் ஆட்குறைப்பு செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தற்போது அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசாவில் 2-வது முறையாக பெரிய அளவில் ஆட்குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நாசாவில் ஏற்கனவே ஒருமுறை ஆட்குறைப்பு செய்யப்பட்டது.
நாசாவில் சுமார் 14 ஆயிரம் ஊழியர்கள் பணி செய்து வரும்நிலையில், இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையால் 20 சதவீத ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதாவது சுமார் 3 ஆயிரத்து 900 பேர் வெளியேற்றப்படுகிறார்கள் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
இந்த மாத தொடக்கத்தில் டிரம்ப் நிர்வாகம் குறைந்தது 2 ஆயிரத்து 145 நாசாவின் மூத்த ஊழியர்களை பணிநீக்கம் செய்ய கடிதம் அனுப்பியது. அவர்களில் பெரும்பாலானோர் சிறப்பு திறன்கள் மற்றும் நிர்வாக திறன்களை கொண்டவர்கள். இந்த ஆண்டு மார்ச் மாதத்தில், உலகின் முன்னணி விண்வெளி நிறுவனம், ஜனாதிபதி டிரம்ப் பதவியேற்ற பிறகு ஜனவரியில் வெளியிடப்பட்ட நிர்வாக உத்தரவுகளுக்கு இணங்க குறைந்தது 3 துறைகளை மூடப்போவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மீண்டும் இரண்டாம் கட்ட ஆட்குறைப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்ற தகவல்கள் வெளியானதால் நாசா ஊழியர்கள் கலக்கத்தில் உள்ளனர். இன்னும் சில நாட்களில் 20 சதவீதம் வரை ஆட்குறைப்பு இருக்கும் என்றும், எண்ணிக்கை வேறுபடலாம் என்றும் செய்திதொடர்பு அதிகாரி ஒருவர் நேற்று கூறினார்.
இதற்கிடையே கடந்த 20-ந்தேதி நூற்றுக்கணக்கான நாசா ஊழியர்கள், விண்வெளி அருங்காட்சியகம் அருகே திரண்டு போராட்டம் செய்தது குறிப்பிடத்தக்கது.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?