டெல்லியில் கனமழை; 100 விமானங்கள் தாமதம்: ‘‘ரெட் அலர்ட்’’ அறிவிப்பு
Aug 11 2025
122

புதுடில்லி, ஆக. 9–
டெல்லியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் இன்று (சனிக்கிழமை) 100க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவைகள் அடியோடு பாதிக்கப்பட்டு உள்ளன.
டெல்லியில் பருவமழை தீவிரமடைந்து கடந்த சில நாட்களாகவே பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ரக்ஷா பந்தன் பண்டிகையான இன்று அம்மாநில மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
சாஸ்திரி பவன், ஆர்கே புரம், மோதி பாக், கித்வாய் நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் கன மழையால் சாலைகளில் நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளானார்கள். மழை தொடரும் சூழலில், டெல்லி முழுவதும் இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
இதற்கிடையில் பலத்த மழை காரணமாக வானிலை சீராக இல்லாததால் விமானப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 105 விமானங்கள் தாமதமாக வருகின்றன. அதில் 13 விமானங்கள் டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய விமானம் ஆகும். எஞ்சிய 92 விமானங்கள் மற்ற நகரங்களில் இருந்து டெல்லிக்கு வரவேண்டியவை ஆகும். இதுகுறித்து டெல்லி விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:– ‘‘இந்திய வானிலை ஆய்வு மையத்தின் முன்னறிவிப்பின்படி, டெல்லியில் மோசமான வானிலை நிலவி வருகிறது. இருப்பினும், டெல்லி விமான நிலையத்தில் அனைத்து விமான நடவடிக்கைகளும் இயல்பாக இருக்கின்றன. விமானங்கள் ரத்து செய்யப்படாத நிலையில், தாமதமான விமானங்களின் பயண நேரம் மாற்றப்பட்டுள்ளது.
மேலும் ஸ்பைஸ் ஜெட் மற்றும் இண்டிகோ விமான நிறுவனங்கள் தங்களது பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்து, விமான விவரங்களைத் தொடர்ந்து கண்காணிக்குமாறு ஆலோசனைகள் வழங்கியுள்ளது. உங்கள் பயணம் தொந்தரவில்லாமல் இருப்பதை உறுதிசெய்ய எங்கள் குழுக்கள் அனைத்து வழிகளிலும் பணியாற்றி வருகின்றன’’.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?