காலையில் கண்ணாடியில் தெரிந்த வெள்ளைத் தலை முடிகள் நரசிம்மனைக் கேள்வி கேட்டன.
“வயசு அறுபதாக்கும்"ன்னு பெருமையாச் சொல்லிக்கறே... சரி... இந்த அறுபது ஆண்டுகள்ல… என்ன சாதிச்சே?”
உண்மையில் நரசிம்மன் சாதித்தது என்று சொல்லில்கொள்ள ஒன்றுமே இல்லை.
சாதாரண கிளார்க் வேலை. வாடகை வீடு. கடன் சுமைகள்,
பிள்ளைகளின் படிப்பு செலவுகள், இதுதான் அவன் வாழ்க்கையே.
உண்மையில் வாழ்க்கை அவனை வாழ வைத்ததே தவிர உயர விடவில்லை.
இளமையில் ஓவியம் வரைவதில் அவனுக்கு உயிர். ஆனால், அப்பா கேட்ட, 'இதெல்லாம் வயிற்றை நிறைக்குமா?” என்ற ஒரே கேள்வி, அவன் கனவுகளை அலமாரிக்குள் அடைத்து வைத்தது.
அன்று நரசிம்மனின் பணி நிறைவு நாள். அலுவலகத்தில் யாரும் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அதிகம் பேசவில்லை. பிரிவுபச்சார விழா என்று ஒன்று நடக்கவேயில்லை.
கனக்கும் மனத்துடன் மாலையில் வீட்டுக்குத் திரும்பி அலமாரியைத் திறந்தான்
உள்ளே...
பழைய ஓவியங்கள். மஞ்சள் தாள்கள்.
நிறங்கள் மங்கியிருந்தாலும், உணர்வு மட்டும் உயிரோடு இருந்தது.
அந்த இரவு முதல், நரசிம்மன் மீண்டும் ஓவியம் தீட்ட ஆரம்பித்தான்.
யாருக்காகவும் இல்லை. பிறர் பாராட்டுக்காகவும் இல்லை.
தனக்காக. தன் ஆத்ம திருப்திக்காக.
பூங்காவில் அமர்ந்து வரைவான். அதைப் பார்த்து சிலர் சிரிப்பார், சிலர் நகைப்பார்.
சிலர் கேட்பார்,
“இந்த வயசுல உங்களுக்கு இதெல்லாம் எதுக்கு?”என்று.
நரசிம்மன் மெல்லச் சிரிப்பான் அவ்வளவுதான்.
ஒருநாள், அந்தக் கல்லூரி மாணவன் நரசிம்மன் வரைந்த ஓவியத்தை மொபைலில் படமெடுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்தான்.
“இந்த ஓவியத்தை வரைந்தவர் அறுபது வயது இளைஞர்” என்று.
அந்த வரி வைரலானது.
கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் வந்தார்கள். பத்திரிகையில் பேட்டி வந்தது.
"இந்த ஆண்டின் சிறந்த கலைஞர்" விருதுக்குத் தேர்வானான் நரசிம்மன்.
விழாவின் போது அவனை மேடைக்கு அழைத்தார்கள். கைகளில் மைக்கைக் கொடுத்து, " இன்றைய இளைய தலைமுறைக்கு ஏதாவது சொல்லுங்க" என்று கேட்டார்கள்.
அப்போது அவன் சொன்ன ஒரே வாக்கியம்:
“வெற்றி தாமதமாக வரலாம்…
ஆனால், கனவுகள் காலாவதியாகக் கூடாது.”
கைதட்டல் அடங்க நீண்ட நேரம் ஆனது.
அந்த கைதட்டல், அவனுக்காக மட்டுமல்ல… வயது என்பதெல்லாம் வெறும் எண்ணிக்கையே! என்பவர்களுக்கும் சேர்த்து.
(முற்றும்)

முகில் தினகரன்,
கோயமுத்தூர்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?