"மனைவிக்கு உடம்பு சரியில்லை டவுனில் உள்ள பெரிய ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போகனும்
வேலைக்கு போயி இரண்டு நாளாச்சு யாரும் வேலைக்கு கூப்பிடல கையில காசு இல்லே பொண்டாட்டிய எப்படி டவுனுக்கு கூட்டிட்டு போறது "என்ற யோசனையில் மூழ்கினான் அங்கப்பன் .
"வெளியில கடன் வாங்கினாள் இரண்டு நாளுல விரட்டுவான் வங்கில கேட்டா கொடுப்பாங்க ஒரு வருசமானாத்தா கேட்பாங்க அப்போ புரட்டி கொடுத்திறலாம் "என்று மந்தையில் பேசிக் கொண்டிருந்தது ஞாபகத்திற்கு வர
வங்கியில போய் கேட்க வேண்டியது தான் "அவங்க கொடுக்கிற பணத்துக்கு அத்தாட்சியம் கேட்பாங்களே நம்ம கிட்டே இருக்கிறதை எடுத்துட்டு போவோம்னு" இரும்பு பெட்டியில இருந்ததை எடுத்து பையில் வைத்துக் கொண்டு
"அங்கம்மா வேற புடவை எடுத்து கட்டிக்க நான் போய் பணம் வாங்கிட்டு வர்றே "என சொல்லி திரும்பினான் "அங்கம்மா ரத்த ரத்தமா வாந்தி எடுத்துக் கொண்டு இருந்தாள் படுத்தே இருக்காதே உள்ளுக்குள்ளே போகாம ரத்தம் வாய் வழியா வந்துருச்சு பாத்தியா என்ன அங்கம்மா நம்ம கிட்டே இருக்கிறது அது ஒண்ணுதான் அதையும் வெளியே வீணாப்போனா திரும்ப கிடைக்குமா?"
மண்சட்டியில் இருந்த தண்ணீரை கொண்டு வாயை கொப்பளிக்க வைத்து முகத்தில் தண்ணீரை தெளித்து புடவையால் துடைத்து விட்டு
"அங்கம்மா இப்பிடியே செவத்துல சாஞ்சுக்க
வங்கியில காசு வாங்கிட்டு வந்துறே "ன்னு வேகமாக தெருவை கடந்து மெயின் சாலை ஓரமாக இருந்த கிராம வங்கியினுள் வந்த அங்கப்பன் பணம் கொடுக்கிறவங்க யாருன்னு அங்கிருந்த ஒருவரிடம் கேட்க கையை நீட்டி காண்பித்த இடத்திற்கு வந்தார்
"அம்மா நூறு ரூபா பணம் வேணும் "
"கணக்கு புக் கொண்டு வந்திங்களா...?
"புக்கா..இல்லேயே" "வேறு கார்டு கொண்டு வந்திங்களா..?"
"ஆங்...இந்தாங்க!"
"இது ரேசன் கார்டு ஏடிஎம் கார்டு இல்லையா..?"
"இந்த கார்டு தான் இருக்கு "
"இந்த கார்டுக்கெல்லாம் பணம் தரமாட்டாங்க "எனச் சொல்ல
"
மந்தையில மாயாண்டி சொன்னானே வங்கியில பணம் கேட்டா கொடுப்பாங்கன்னு எம் பொண்டாட்டிக்கு கன்சராம் நம் சுகாதாரத்துல சொன்னாங்க டவுனு பெரிய ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போகச் சொன்னாங்க இப்போ எம் பொண்டாட்டி அங்கம்மா ரத்த ரத்தமா கக்குறா டவுனுக்கு கூட்டிட்டு போக பஸ்ஸீக்கு காசு வேணுமில்ல ஒரு நூறு ரூபா கொடுங்க வேலைக்கு போயி இரண்டு நாள்ல வந்து தந்துறே" ன்னு சொல்ல அங்கப்பன் சொன்னதை வங்கியில் உள்ளவர்கள் கேட்டு ஒருவருக்கொரு பார்த்தவர்கள் கேன்சர் நோயாம் "உங்க பெயர் என்னய்யா அங்கப்பன் "என்றார் கணிணியில் பெயரை தட்டிப் பார்த்தவர்
"அவர் பெயரே இல்லையே " தங்களுக்குள் பேசியவர்கள் அவரைப் பார்த்தார்கள் ரத்தக்கறை படிந்திருந்ததைப் பார்த்தவர்கள்
அங்கு இருந்த ஐந்து பேர் ஆளுக்கு நூறு ரூபாய் சேர்த்து ஐநூறு ரூபாயை "அய்யா இந்தாங்க" என கொடுக்க "அய்யா எனக்கு இவ்வளவு பணம் வேணாம் ஒருநூறு ரூபா போதும் "
"மருந்து மாத்திரை வாங்க கேட்பாங்க " அதுக்கு பணம் வேணும்யா "ன்னு சொல்ல
"டவுன் ஆஸ்பத்திரில கொடுக்க மாட்டாங்களா.."
"இத நா எப்பிடி கொடுப்பேன்" "பரவாயில்லை முதல்ல உங்க மனைவியை கூட்டிட்டு போங்க" ன்னு சொல்ல "வேலைக்கு போய் காசு வந்தாத்தா தருவேன்" ன்னு சொல்லிக் கொண்டு,
"டவுனு வண்டி வர்றதுக்குள்ளே அங்கம்மா வை கூட்டிட்டு வரனும்" என வேகமாக நடந்து வீட்டினுள் வந்த அங்கப்பன் செவத்துல சாஞ்சபடி அங்கம்மா இருக்க ,
அங்கம்மா வங்கில இருக்கிறவங்க நல்ல வங்களா.... இருக்காங்க உனக்கு கன்சர்ன்னு சொன்னேன் என் பெயரைக் கேட்டாங்க சொன்னேன் பெட்டியில இருந்து எடுக்காம அவங்க பையில் இருந்து ஐநூறு ரூபாய் கொடுத்தாங்க வாங்கிட்டு வந்துட்டேன் டவுனு ஆஸ்பத்தியில காட்டி உனக்கு மருந்து மாத்திரை வாங்கிட்டு, ஆப்பிள் பழமா... அதெல்லாம் வாங்கி நீ சாப்பிட்டு நல்லா வருவியாம் சரிசரி சிக்கிரமா கிளம்பு டவுனுக்கு போற வண்டி வந்துரும்" எனச் சொல்லிக் கொண்டே அங்கம்மா அருகில் வந்தான் ,
அங்கம்மா. வாயிலிருந்து ரத்தம் கசிந்து புடவை எல்லாம் செவப்பாய் இருக்க ,செவரோரம் சாய்ந்தபடி சுவாசமின்றி அமைதியாய் இருந்தாள் !அங்கம்மாள்.
அங்கம்மா...அங்கம்மா..அங்கப்பன் அழைக்கும் குரல் காற்றில் கலந்த அங்கம்மா கேட்டு அவனையே சுற்றி சுற்றி வந்தாள்,அசைவின்றி இருந்தவளையே பார்த்துக் கொண்டு இருந்தான் அங்கப்பன்.
நல.ஞானபண்டிதன்
திருப்புவனம்
புதூர்