தெரு நாய்கள் பிரச்னை: தமிழகம் உள்பட அனைத்து மாநில தலைமை செயலாளர்களும் நவம்பர் 3–ந் தேதி நேரில் ஆஜராக வேண்டும்

தெரு நாய்கள் பிரச்னை: தமிழகம் உள்பட அனைத்து மாநில தலைமை செயலாளர்களும் நவம்பர் 3–ந் தேதி நேரில் ஆஜராக வேண்டும்


சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு


புதுடெல்லி, அக். 27–


தெருநாய்கள் பிரச்னை தொடர்பான வழக்கில் தமிழகம் உள்பட அனைத்து மாநிலத் தலைமைச் செயலாளர்களும் நவம்பர் 3–ந் தேதி நேரில் ஆஜராக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


புதுடெல்லி மற்றும் தேசிய தலைநகர் வலையப் பகுதியில் தெருநாய்கள் தொல்லை தொடர்பாக சுப்ரீம் கோர்ட் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது. இந்தப் பிரச்னை தொடா்பாக தனித்தனியாக 4 மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.


இந்த வழக்கு தொடர்பாக கடந்த ஆகஸ்ட் 22-ந் தேதி சுப்ரீம் கோர்ட் மூன்று நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவில், டெல்லி மற்றும் தேசியத் தலைநகர் வலய (என்சிஆர்) பகுதியில் தெரு நாய்களைப் பிடித்து அவற்றுக்கு கருத்தடை, புழுநீக்கம் செய்து, தடுப்பூசி செலுத்திய பின்னா், பிடிக்கப்பட்ட இடங்களிலேயே மீண்டும் அவற்றை விடுவிக்க வேண்டும் என்று ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவில் மாற்றம் செய்தது.


அப்போது இந்த விவகாரம் தொடர்பாக நாடு முழுவதும் உயர்நீதிமன்றங்களில் உள்ள அனைத்து வழக்குகளையும் சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்ற முடிவு செய்த 3 நீதிபதிகள் அமா்வு, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை வழக்கில் ஒரு தரப்பாகச் சேர்த்தது. அனைத்து மாநிலங்களும் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.


இந்த நிலையில் இந்த வழக்கு இன்று காலை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா, என்.வி.அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு தெலங்கானா, மேற்கு வங்கம் மற்றும் டெல்லி மாநகராட்சி நிர்வாகம் மட்டுமே பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளன. இதனால், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த தலைமைச் செயலாளர்களும் நவம்பர் 3–ந் தேதி நேரில் ஆஜராகி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யாததற்கான விளக்கத்தை அளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%