நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயில் தேருக்கு 9.50 கிலோ தங்கத்தில் ‘ரேக்’ பதிக்கும் பணி : அமைச்சர்கள் அன்பரசன், சேகர்பாபு துவக்கினார்கள்
சென்னை, ஆக 11–
தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் இன்று சென்னை, நங்கநல்லூர் ஆதிவ்யாதிஹர பக்த ஆஞ்சநேயர் கோயிலில் புதிய தங்கத் தேருக்கு 9.5 கிலோ கிராம் எடை கொண்ட தங்கத்தை கொண்டு தங்க ரேக் பதிக்கும் பணிகளை தொடங்கி வைத்தனர். பின்னர், அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:–
‘‘நங்கநல்லூர் ஆதிவ்யாதிஹர பக்த ஆஞ்சநேயர் கோயிலுக்கு ரூ.8 கோடி மதிப்பீட்டில் புதிய தங்கத்தேர் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. புதிய தங்கத்தேருக்கு ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் மரத்தேர் செய்யப்பட்டு, அதற்கு ரூ.12.31 லட்சம் செலவில் செப்புத்தகடு வேயும் பணி நிறைவுபெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து உபயதாரர் பங்களிப்போடு 9 கிலோ 500 கிராம் எடை கொண்ட தங்கத்தை கொண்டு தங்க ரேக் பதிக்கும் பணி இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்த அரசு பொறுப்பேற்றபின், ரூ.75.55 கோடி மதிப்பீட்டில் 130 கோயில்களுக்கு 134 மரத்தேர்கள் உருவாக்கப்பட்டு வருவதோடு, ரூ.19.20 கோடி மதிப்பீட்டில் 72 கோயில்களில் உள்ள 75 மரத்தேர்கள் மராமத்து செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
தேர்களை பாதுகாக்கும் வகையில் ரூ.30.31 கோடி மதிப்பீட்டில் 197 தேர் பாதுகாப்பு கொட்டகைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்தாண்டு சட்டமன்ற அறிவிப்பின்படி வேலூர் மாவட்டம், வெட்டுவானம் எல்லையம்மன் கோயிலுக்கு ரூ.1 கோடி மதிப்பீட்டில் புதிய வெள்ளித்தேர் உருவாக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
நீண்ட ஆண்டுகளாக பழுதடைந்து ஓடாமல் இருந்த மரத்தேர்கள், தங்கத்தேர்கள் மற்றும் வெள்ளித்தேர்கள் பழுதுநீக்கப்பட்டு உலா வரச்செய்யப்பட்டுள்ளன. 150 ஆண்டுகளுக்கு பின் விழுப்புரம் மாவட்டம், பூவரசன்குப்பம், லட்சுமி நரசிம்மர் சுவாமி திருக்கோயில் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டம், ஆதிதிருவரங்கம், அரங்கநாத சுவாமி திருக்கோயில் திருத்தேர்களும்,
100 ஆண்டுகளுக்கு பின் தஞ்சாவூர் மாவட்டம், பட்டீஸ்வரம், தேனுபுரீஸ்வரர் கோயில் திருத்தேர், 87 ஆண்டுகளுக்கு பின் சென்னை, சிந்தாதரிப்பேட்டை ஆதிகேசவப் பெருமாள் மற்றும் ஆதிபுரீஸ்வரர் திருக்கோயில் திருத்தேர், 80 ஆண்டுகளுக்கு பின் காஞ்சிபுரம் மாவட்டம், சீட்டனஞ்சேரி, காளீஸ்வரர் திருக்கோயில் திருத்தேர் பழுது நீக்கப்பட்டும், 11 ஆண்டுகளுக்கு பின் ராமேசுவரம் மற்றும் சமயபுரம் தங்கத்தேர்களும், 9 ஆண்டுகளுக்கு பின் சேலம், கோட்டை மாரியம்மன் திருக்கோயில் தங்கத்தேரும் சீரமைக்கப்பட்டு நேர்த்திக்கடன் செலுத்திடும் வகையில் பக்தர்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
இந்நிகழ்வின்போது, சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி, அறநிலையத்துறை ஆணையர் பி.என். ஸ்ரீதர், கூடுதல் ஆணையர் சி.பழனி, இணை ஆணையர்கள் இரா. வான்மதி, கி.ரேணுகாதேவி, மாநகராட்சி மண்டல குழுத் தலைவர் என். சந்திரன், துணை ஆணையர் இரா.ஹரிஹரன், உதவி ஆணையர் கி.பாரதிராஜா, திருக்கோயில் தக்கார் எம்.கோதண்டராமன், செயல் அலுவலர் ஆ.குமரேசன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.