ஆடி அமாவாசை திதி, தர்ப்பணம் கொடுப்பவர்கள் காலை 07.35 மணிக்கு பிறகு, பகல் 12 மணிக்குள் தர்ப்பணம் கொடுக்கலாம்.
ஆடி மாத அமாவாசை, தெய்வங்களின் அருளையும், முன்னோர்களின் ஆசியையும் பெறுவதற்கான மிக முக்கியமான நாளாகும்.
தட்சணாயன புண்ணிய காலத்தில் வரும் முதல் அமாவாசை என்பதால் ஆடி அமாவாசைக்கு தனி சிறப்பு உண்டு. இந்த நாளில் தான் பித்ருலோகத்தில் இருக்கும் நம்முடைய முன்னோர்கள், பூமிக்கு நேரடியாக வருவதாக ஐதீகம்.
ஆடி அமாவாசையில் நாம் செய்யும் தர்ப்பணம், திதி, தானம் ஆகியவற்றை முன்னோர்கள் நேரடியாக வந்து பெற்றுக் கொள்வதாக நம்பிக்கை. அதனால் முன்னோர்களின் மனங்களை மகிழ்வித்து, அவர்களின் ஆசிகளை பெறுவதற்கு இது மிகவும் ஏற்ற நாளாகும்.
இந்த வருடம் ஆடி அமாவாசை ஆடி 8 ஜூலை 24ஆம் தேதி வியாழக்கிழமை வருகிறது. அன்று புனித நதிகளில் நீராடி முன்னோர்களுக்கு ஆடி அமாவாசை தர்ப்பணம் கொடுக்கலாம்.
நீர் நிலைகளுக்கு சென்று, அந்தணர்களை வைத்து தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள், வீட்டிலேயே எளிமையாக எள்ளும் தண்ணீரும் இறைத்து வழிபடலாம்.
அதுவும் முடியாதவர்கள் அன்னதானம் செய்யலாம். இதனால் பித்ரு தோஷம் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.
இந்த ஆண்டு ஆடி 8 ஜூலை 24ம் தேதி அதிகாலை 03.06 மணிக்கு துவங்கி, ஜூலை 25 ம் தேதி அதிகாலை 01.48 வரை அமாவாசை திதி உள்ளது.
இருந்தாலும் ராகு காலம், எமகண்டத்தில் திதி, தர்ப்பணம் கொடுக்க கூடாது. சூரிய உதயத்திற்கு முன்பும், பகலில் உச்சிவேளைக்கு பிறகும் திதி, தர்ப்பணம் கொடுக்கக் கூடாது என்பது நியதி.
ஆடி 8 ஜூலை 24ம் தேதி வியாழக்கிழமை காலை 6 முதல் 07.30 மணி வரை எமகண்டமும், பகல் 01.30 முதல் 3 வரை ராகு காலமும் உள்ளது. இதனால் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுப்பவர்கள் காலை 07.35 மணிக்கு பிறகு, பகல் 12 மணிக்குள் தர்ப்பணம் கொடுக்கலாம்.
அதே போல் ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஆடி அமாவாசை அன்று தானம் கொடுப்பது, காகத்திற்கு உணவு அளிப்பது போன்ற செயல்கள் முன்னோர்களின் ஆசியை பெற்றுத் தரும். இதனால் குடும்பத்தில் நன்மை உண்டாகும்.
மேலும், அன்றைய தினம் முன்னோர்களுக்கு திதி கொடுத்த பிறகே வழக்கமான இறை வழிபாட்டினை மேற்கொள்ள வேண்டும்.
பகலில் முன்னோர்களுக்கு இலை போட்டு படையல் வைத்து வழிபடுபவர்கள் பகல் 01.25 மணிக்கு முன்பாக படையல் போட்டு, விரதத்தை நிறைவு செய்து விடலாம்.
அன்றைய தினம் யாராவது ஒருவருக்காவது அன்னதானம் வழங்குவது சிறப்பு. அதே போல் வீடு தேடி யார் வந்தாலும் அவர்களை உபசரித்து அனுப்ப வேண்டும். முன்னோர்கள் யாரின் வடிவத்திலும் வரலாம் என்பதால் உணவு அளித்து அனுப்புவது நல்லது.
யாருக்கும் உணவு அளிக்க முடியாதவர்கள் காகத்திற்கு உணவு அளிக்கலாம். பசு மாட்டிற்கு அகத்திக்கீரை, வெல்லம் கலந்த பச்சரிசி ஆகியவற்றை உணவாக அளிக்கலாம்.
முன்னோர்களுக்கு புதிய துணிகள் வைத்து படைக்கும் வழக்கம் உள்ளவர்கள், அதை வழிபட்ட பிறகு யாராவது வயதானவர்களுக்கு தானமாக அளிக்கலாம்.
ஆடி அமாவாசையில் மறந்தும் இவற்றை செஞ்சிடாதீங்க!
-------------------------------------------------------------------
வாசலில் கோலமிடக் கூடாது
வீட்டை சுத்தம் செய்யவோ, சமையல் அறை & பூஜை அறையை சுத்தம் செய்யவோ கூடாது
நெற்றியில் குங்குமம், திருநீறு இல்லாமல் இருக்கக் கூடாது.
காகத்திற்கு சாதம் வைத்த பிறகு தான் பித்ருக்களுக்கு படையில் இட வேண்டும்.
வெளி ஆட்களை வீட்டிற்கு அழைத்து உணவளிக்க கூடாது
முன்னோர்களுக்கு படையல் போட்ட உணவை வீட்டில் உள்ளவர்கள் மட்டுமே சாப்பிட வேண்டும்
கவிதா சரவணன்.