நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவிநீக்க முதலில் மக்களவையில் தீர்மானம் கொண்டு வரப்படும்: மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தகவல்
Jul 28 2025
67

புதுடெல்லி:
டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர் யஷ்வந்த் வர்மா. இவரது வீட்டில் கடந்த மார்ச் மாதம் திடீரென தீப்பற்றியது. அப்போது அவர் வீட்டில் இல்லை. தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீஸார் வீட்டில் தீயை அணைத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அப்போது ஒரு அறையில் பல மூட்டைகளில் கட்டுக்கட்டாக பணம் எரிந்து சாம்பலாகி கிடப்பது தெரியவந்தது.
இதையடுத்து அவரது நேர்மை குறித்து சர்ச்சை எழுந்தது. இதையடுத்து யஷ்வந்த் வர்மாவை பதவியில் இருந்து நீக்க கோரி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா நாடாளுமன்றத்துக்கு பரிந்துரைத்தார். இதை எதிர்த்து நீதிபதி யஷ்வந்த் வர்மா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இதுகுறித்து நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்க தீர்மானம், சட்டவிதிகளின்படி மக்களவையில் முதலில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும். அவரை பதவி நீக்கம் செய்வதற்கு கையெழுத்து பெறப்பட்டுள்ளது.
அதன்பிறகு மாநிலங்களவையில் இந்த தீர்மானம் எடுத்துக் கொள்ளப்படும். பதவி நீக்கத்தை மத்திய அரசு மட்டுமே செய்ய முடியாது. எம்.பி.க்கள் அனைவரின் ஒருமித்த முடிவின் அடிப்படையில்தான் நீதிபதியை பதவி நீக்கம் செய்ய வேண்டும். இதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒப்புக் கொண்டுள்ளன. இவ்வாறு அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறினார்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?