நீதி கதைகள்

நீதி கதைகள்



வாழ்க்கை..! 

ஒரு ஊரில் சண்முகம் என்பவர் தன் மனைவி, மகன் மற்றும் பெற்றோருடன் வாழ்ந்து வந்தார். சண்முகம் உடல்நலக் குறைவால் பல மருத்துவமனைகளுக்குச் சென்றும் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். அவருக்கு வயது 40 கூட ஆகவில்லை. அவரது மனைவி, 9 வயதான மகன், பெற்றோர் அனைவரும் சண்முகத்தின் உடல் அருகே அமர்ந்து கதறி அழுது கொண்டிருந்தனர்.


இந்தக் குடும்பத்துக்கே குருவாக விளங்குபவர் அப்போது அங்கு வந்தார். அவரைக் கண்டதும் அவர்கள் மேலும் அழ ஆரம்பித்தனர்.


இறந்தவரின் மனைவி குருவைப் பார்த்து, ' குருஜி.! இவ்வளவு இளம் வயதில் என்னையும் என் மகனையும் நிர்க்கதியாக விட்டுப் போய் விட்டாரே..? நான் என்ன செய்வேன்..? அவர் உயிருடன் வருவாரறென்றால் அதற்காக நான் எதுவும் செய்வேன்.!" என்றார்.!


குருஜி அவர்கள் அனைவருக்கும் ஆறுதல் சொல்லி சமாதானப்படுத்த முயன்றார். ஆனால் அவர்களின் சோகம் குறையவில்லை. குருஜி சற்று நேரம் சிந்தித்து ' ஒரு கோப்பையில் தண்ணீர் கொண்டு வாருங்கள் என்றார்." அருகிலிருந்தவர்கள் தண்ணீர் கொண்டு வந்து தந்தனர். 


அவர் கோப்பையை சண்முகத்தின் உடல் அருகில் வைத்துத் தானும் அமர்ந்தார். பின்னர், ' இறந்தவர் உயிருடன் திரும்பி வர வேண்டும் என நினைப்பவர், இந்தத் தண்ணீரை அருந்தலாம். இறந்தவர் திரும்பி வருவார். ஆனால் அதற்குப் பதில் நீரை அருந்தியவர் மரணமடைவார்..!" என்றார்..!


அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். ஆனால் யாரும் முன் வரவில்லை. குருஜி இறந்தவரின் தந்தையைக் கேட்டார் ' ஐயா.! நீங்கள் உங்கள் மகனுக்காக உங்கள் உயிரைக் கொடுக்க மாட்டீர்களா?" என்றார்.


தந்தை சொன்னார், ' நான் இறந்து விட்டால் என் மனைவிக்கு யார் ஆதரவு? அவளுக்காக நான் வாழ வேண்டும்" 


தாயைக் கேட்க அவரும், ' அடுத்த மாதம் என் மகளுக்குப் பேறுகாலம். நான் இறந்து விட்டால் அவளுக்கு யார் உதவுவது?" என்று மறுத்துவிட்டார்.


மனைவி சொன்னாள், ' நான் இறந்தால் என் பையனை யார் கவனித்து வளர்ப்பது? அவனுக்காக நான் வாழ வேண்டும்" என்று அவளும் மறுத்துவிட்டாள்.


குருஜி பையனைப் பார்த்துக்கேட்டார் ' குழந்தாய், உன் தந்தைக்காக நீ உயிர் விடுவாயா?" 


அவன் தாய் உடனே அவனை இழுத்து அணைத்துக் கொண்டு சொன்னாள் ' குருஜி, உங்களுக்கென்ன பைத்தியமா? அவன் ஒரு குழந்தை இனிமேல்தான் அவன் வாழ்க்கையே இருக்கிறது. அவனைப் போய் நீங்கள் கேட்கலாமா?" என்றாள்.


குருஜி சொன்னார், ' உங்கள் அனைவருக்கும் ஏதாவது கடமை, பொறுப்பு இருக்கிறது என்று நீங்கள் சொல்கிறீர்கள். அப்படியானால் இவருக்கு இங்கு வேலையில்லை என்றாகிவிட்டது. எனவே தான் கடவுள் இவரை எடுத்துக் கொண்டார். இப்போது இறுதி யாத்திரைக்கான ஏற்பாடுகளைக் கவனியுங்கள்" என்று கூறிவிட்டு அவர் சென்று விட்டார்..!


நீதி:


' உயிர் இருக்கும் வரையே அன்பு, பாசம் எல்லாம்" , ' பின் மிஞ்சுவது மகிழ்ச்சியான நாட்களின் நினைவுகள் மட்டுமே..!!" . எனவே வாழும் வரை புன்னகைக்கும் முகத்தோடு மன மகிழ்ச்சியோடு வாழ முயற்சிப்போம்.

 

Thanks and regards 

A s Govinda rajan 

 

வேடனிடம் அரசர் கற்ற பாடம்..!

ஒரு நாட்டில் பக்திமிக்க அரசர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் தினமும் பூஜை செய்யாமல் உணவு உண்ண மாட்டார். ஒரு சமயம் வேட்டையாடுவதற்காக காட்டிற்கு சென்ற அவர், இரவு நெடுநேரம் ஆகிவிட்டதால், காட்டிலேயே தங்க வேண்டி வந்தது. வீரர்களும் அவருடன் தங்கினார்கள்.


மறுநாள் விடிந்ததும், இறைவனை பூஜிக்கத் தயாரானார். ஒரு மேடான இடத்தில் மண்ணைக் குவித்து அதனை சிவலிங்கமாகக் கருதி, மலர்களால் பூஜித்தார். பின்பு தியானத்தில் ஆழ்ந்தார். 


அச்சமயம் அந்தப் பக்கமாக ஒரு வேடன், மான் ஒன்றைத் துரத்திக் கொண்டு வந்தான். அவசரத்தில் அரசர் இருந்ததையும், அவர் வணங்கிக் கொண்டிருந்த மணல்மேட்டினையும் கவனிக்காமல் மணல்மேட்டினை மிதித்து விட்டு ஓடினான். அவனது எண்ணமெல்லாம், மானைப் பிடிப்பதில் மட்டுமே இருந்தது.


சத்தம் கேட்டு கண்விழித்த அரசர், மணல்மேடு கலைந்து கிடந்ததைக் கண்டு கோபமடைந்தார். லிங்கத்தை மிதித்ததோடு, இங்கே ஒருவன் இருப்பதையே கண்டு கொள்ளாமல் போகிறானே! நான் அரசர் என்பதாவது அவனுக்குத் தெரியுமா என்ன? ஆணவம் பிடித்த அவனைப் பிடியுங்கள், என்று ஆணையிட்டார்.


வீரர்கள் வேடனைப் பிடிக்க அவன் பின்னால் ஓடினர். ஆனால், காட்டில் ஓடிப் பழக்கப்படாததால் வேடனின் வேகத்துக்கு ஈடுதர முடியாமல் தோல்வியோடு வீரர்கள் திரும்பினார்கள். இதனால் அரசரின் கோபம் மேலும் அதிகரித்தது. 


சிறிதுநேரத்திற்குப் பின் வேடன், தான் துரத்திய மானை சுமந்து கொண்டு வருவதைப் பார்த்தனர். உடனே அவனைப் பிடித்து அரசர் முன் நிறுத்தினார்கள். அப்போதுதான் வேடன் அரசரைப் பார்த்தான். வேந்தே! வணக்கம். வேடர்களின் வசிப்பிடமான இங்கே வந்திருக்கும் உங்களை வரவேற்கிறேன். வணங்குகிறேன்! என்று அரசரைப் பணிந்தான்.


அரசர் அவனை எரித்துவிடுவது போல் பார்த்தார். இதே வழியாக மானைத் துரத்தியபடி சென்ற நீ, நான் இறைவனாகப் பாவித்து வணங்கிய மணல்மேட்டை மிதித்தாய். என்னை கவனிக்காதவன் போல் அவமானப்படுத்தி சென்றாய். இப்போது எங்களிடம் பிடிபட்டதும் பணிவுள்ளவன் போல் நடிக்கிறாயா? என கோபமாகக் கேட்டார். மன்னிக்க வேண்டும் அரசே! வேட்டையின் போது என் கவனம் முழுவதும் மான் மேல் மட்டும்தான் இருந்தது.


ஒருவன் ஒரு தொழிலைச் செய்யும் போது, அதன் மேல் முழுக்கவனம் வைத்தால் தானே வெற்றி பெறுவான். அதனால் தான் நான் எதையும் கவனிக்கவில்லை என்று கூறினான். வேடனின் பதில் நியாயமானதாக அரசருக்குத் தோன்றியது.


அரசர் மனதில் ஏதோ உறுத்தியது. வேட்டையில் இருந்த வேடனின் கவனம் இரை மீது இருந்திருக்கிறது. ஆனால் தியானத்தில் ஆழ்ந்திருந்த நம் கவனம் முழுவதும் இறை மீது இல்லையே. அதனால் தான், வேடன் மணல்மேட்டைக் கடந்த போது அவனைக் கவனிக்க முடிந்தது. இந்த வேடனின் தொழில் பக்தியின் முன்னால், என் இறைபக்தி தோற்று விட்டதே! என்று என்ணினார் அரசர். தனக்கு அறிவுப்பாடம் புகட்டிய வேடனுக்கு, அரசர் வெகுமதியளித்து அனுப்பினார். 


பிறகு மௌனமாக அமர்ந்து யோசிக்க ஆரம்பித்தார். தன் மனம் இறை நினைவில் இருந்து விலகியது ஏன்? வழக்கம்போல் தன்னால் இறை தியானத்தில் ஆழ முடியாமல் போனது எதனால்? என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டார். இடம் எதுவாக இருந்தாலும், இறைவன் மீது முழு நம்பிக்கை இல்லாததால் தான் இப்படி நிகழ்ந்தது என அரசருக்குப் புரிந்தது. 


நீதி 


அரசரைப் போன்றுதான் நாம் ஒவ்வொருவரும் லட்சியப் பாதையில் இருந்து, சிறு இடைஞ்சல்களுக்கு அஞ்சி விலகி விடுகிறோம். நம் லட்சியத்திற்குத் தடையாக இருக்கும் குறைபாடுகளைக் கண்டறிந்து அதனை நீக்கிவிட்டால் போதும், வெற்றி நிச்சயம்.

 

Thanks and regards 

A s Govinda rajan 

 

நம்பிக்கை..!

ஒருநாள் சிவா, சுந்தர் என்ற இரண்டு நண்பர்கள் வேலை சம்மந்தமாக பக்கத்து ஊருக்கு சென்றார்கள். அப்போது, இரவு நெருங்கிவிட்டதால் குளிரவும் தொடங்கி விட்டது. இருந்தாலும் இருவரும் பல விஷயங்களைப் பற்றி பேசியபடியே பயம் தெரியாமல் நடந்தார்கள். 


பிறகு, ஒரு மரத்தில் ஏறி இரவைக் கழித்துவிடலாம் என்று அவர்கள் நினைத்தார்கள். அந்த சமயத்தில், அவர்கள் எதன்மீதோ கால்தடுக்கி எப்படியோ உருண்டு ஆழமான கிணறு ஒன்றில் விழுந்துவிட்டார்கள். இருவருக்கும் நீச்சல் தெரியும் என்பதால் நீரில் மூழ்கவில்லை. ஆனால், மிக ஆழமான பாசிபடர்ந்த கிணறு என்பதாலும், இருட்டு என்பதாலும் அவர்களால் வெளியே வரமுடியவில்லை. 


கிணற்றில் விழுந்த நிலவின் பிம்பம் மட்டுமே துணையாக இருக்க இருவரும் விடியும்வரை கிணற்றுக்குள்ளேயே இருந்தார்கள். விடிந்த பிறகு வெளிச்சம் பரவ ஆரம்பித்ததும் அவர்களுக்கு இருந்த கொஞ்சம் நம்பிக்கையும் இருண்டுபோனது.


ஏனென்றால், அவர்கள் நினைத்ததைவிட கிணறு மிக மிக ஆழமாக இருந்தது. அதைவிட மோசமாக, அதிலிருந்து ஏறி வர எந்தப் பிடிப்போ, படிகளோ எதுவுமே இல்லை. சேறும் சகதியும் நிறைந்திருந்ததால், அதிலிருந்து வெளியேறுவது கடினமாக இருந்தது. 


அதனால், சுந்தர் மிகவும் சோர்ந்து போனார். ஆனால், சிவா சற்று நேரம் அமைதியாக தியானத்தில் அமர்ந்தார். பிறகு யோசிக்க ஆரம்பித்தார். அப்போது, கிணற்றின் ஒரு மூலையில் காட்டு மரம் ஒன்றின் கனமான வேர் பரவி இருப்பது அவர் கண்ணில்பட்டது. 


அதைப் பார்த்ததும், சட்டென்று கிணற்றுக்குள் மூழ்கி, அடியில் இருந்து ஒரு கல்லை எடுத்து வந்தார். அந்தக் கல்லால் வேரைத் தட்டித்தட்டி சிறு மூங்கில் கழி போல் இரு துண்டுகளாக வெட்டி எடுத்தார். 


இந்த வேர்க்குச்சிகளை பிடிமானமாகப் பயன்படுத்தி மேலே ஏறுவோம் என்று சுந்தரை அழைத்தார். ஆனால் அவர் பயந்து நடுங்கி வர மறுத்துவிட்டார். சிவாவிற்கு அவரைச் சுமந்து கொண்டு வெளியேறுவது முடியாத விஷயம். அதே சமயம் நண்பனை கிணற்றுக்குள்ளேயே விட்டுவிட்டுப் போகவும் முடியாது. 


அதனால், சிவா ஒரு சில நிமிடங்கள் யோசித்து, பின் சுந்தரிடம் எனக்கு ஒரு மந்திர வார்த்தை தெரியும். அதைச் சொன்னால் எந்தவித பயமும் வராது. அதைத்தான் நான் இவ்வளவு நேரம் சொல்லி தியானம் செய்தேன். நீயும் சொல். உனக்கும் அச்சம் இருக்காது. சுலபமாக நாம் வெளியேறிவிடலாம் என்றார்.


அதைக் கேட்டதுமே சுந்தர் முகத்தில் ஒரு மலர்ச்சி வந்தது. அவசர அவசரமாக என்ன மந்திரம் அது, சொல் என்றார். உடனே சிவா நமஇவெயா என்று கூறினார். நமச்சிவாய தெரியும்.. இது என்ன நமஇவெயா... ? என்று சுந்தர் கேட்டார்.


உனக்கு கிணற்றை விட்டு வெளியேற ஆசை இருக்கிறதா இல்லையா? என்று சிவா கேட்டதும், இருக்கிறது என்று சுந்தர் கூறினார். அப்படியானால் கேள்வி எதுவும் கேட்காமல் மந்திரத்தைச் சொல் என்று சிவா கூறினார்.


அதனால், சுந்தரும் மந்திரத்தை சொல்ல ஆரம்பித்தார். உடனே அவர் மனதிலும் நம்பிக்கை உண்டானது. பிறகு இருவரும் சிரமப்பட்டு வெளியில் வந்தார்கள். சிறிது நேர ஓய்வுக்குப் பின் அவர்கள் பயணம் தொடர்ந்தது. 


வழியில் சுந்தர், சிவாவிடம் எனக்குத் தெரியாமல் நீ எப்போது மந்திர தந்திரங்களைக் கற்றாய்? நீ சொன்ன மந்திர வார்த்தையைச் சொன்னபோது எனக்குள் ஒருவித ஆற்றல் பொங்கி எழுந்தது. அபூர்வமான இந்த மந்திரத்தைப்போல் இன்னும் ஏதாவது உனக்கு தெரியுமா? அவற்றையும் சொல்லித்தருகிறாயா? என்று கேட்டார். 


அதற்கு சிவா, சிரித்துக் கொண்டே, நண்பா என்னை மன்னித்துவிடு. எனக்கு மந்திரம் எதுவும் தெரியாது. நான் உனக்கு சொல்லித் தந்தது மந்திர வார்த்தை இல்லை. உன் மனதில் இருந்த எதிர்மறை எண்ணத்தை வெளியே தள்ளி, நீ நம்பிக்கையுடன் செயல்பட உதவி செய்தேன். 


நீ சொன்ன மந்திர வார்த்தை.... நம்பிக்கை மனதில் இருந்தால் வெல்லலாம் யாவரும் ன்ற வார்த்தையின் முதல் எழுத்துக்கள்தான் என்று கூறினார். 

 


Thanks and regards 

A s Govinda rajan 


மிருக மனதுக்குள் ஈரம்..! 

ஒரு ஊரில் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த சேகர் என்பவர் தனது ஆடு மாடுகளுடன் ஆசையாக ஒரு புலிக்குட்டியையும் வளர்த்து வந்தார். அந்த புலிக்குட்டியும் சாதாரணமாக அந்த ஆடு, மாடுகளுடனும் அதன் குட்டிகளுடனும் விளையாடி கொண்டிருக்கும்.


அந்த புலிக்குட்டிக்கு அந்த ஆடு மற்றும் குட்டிகளின் மேல் மாமிச ஆசை வராமல் இருக்க அதனை ஒன்றாகவே வளர்த்தார். புலிக்குட்டியும் அவ்வாறே எந்த எண்ணமும் இல்லாமல் ஆடு, மாடுகளுடன் விளையாடி வந்தது.


ஒரு நாள் அந்த புலிக்குட்டிக்கு மாமிச ஆசை வந்துவிட்டது. அதனால், தன் முதலாளியிடம் சென்று கேட்டது. அதைக்கேட்டதும் சேகர், ஒரு ஆட்டுக்குட்டியை மட்டும் ஒரு தனி குடிலில் வைத்து வளர்த்து வந்தார்.


பின் புலிக்குட்டியிடம் சென்று, என்றாவது ஒரு நாள் உனக்கு மாமிச ஆசை தலைக்கேறும் போது இந்த குடிலின் கதவை உடைத்துவிட்டு அந்த ஆட்டுக்குட்டியை தின்றுவிடு என்றார். புலிக்குட்டியும் சரி என்று ஒப்புக்கொண்டது.


நாட்கள் சென்றன. ஒரு நாள் சேகர் வெளியூர் சென்ற நேரத்தில் அந்த புலிக்குட்டிக்கு மாமிச ஆசை தலைக்கேறியது. உடனே புலிக்குட்டிக்கு முதலாளி கூறியது நினைவுக்கு வந்தது. அந்த குடிலின் கதவை உடைத்து உள்ளே இருந்த ஆட்டுக்குட்டியை (இருள் சூழ்ந்த அறையில் சாப்பிட்டு பழக்கமில்லாமல்) வெளியே இழுத்து வந்தது. 


அப்படி வந்த புலிக்குட்டிக்கு வெளியே துள்ளி விளையாடித்திரிந்த ஆட்டுக்குட்டியைப் பார்த்ததும், சந்தேகத்தில் தலை சுற்றியது. இரண்டு குட்டிகளும் ஒரே மாதிரி தோற்றத்தில் இருந்ததால் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றது.


உடனே புலிக்குட்டியின் மனதில் ஒரு சிந்தனை தோன்றியது. நாம் ஒன்றாக விளையாடி இருக்கிறோம் எனவே அவ்விரண்டையும் நுகர்ந்து பார்த்தால் வித்தியாசம் கண்டுகொள்ளலாம் என்று முடிவு செய்தது. அதனால், வெளியே இழுத்து வந்த ஆட்டுக்குட்டியை நுகர்ந்து பார்த்தது. அது அந்த புலிக்குட்டிக்கு பழகிய வாசமாக தெரிந்தது.


அதனால், அந்த ஆட்டுக்குட்டியை தன் பிடியில் இருந்து விட்டுவிட்டு வீட்டு வாயில் அருகே வந்து, அங்கும் இங்குமாய் புலிக்குட்டி உலாவிக் கொண்டிருந்தது. தன் முதலாளி எப்பொழுது வருவார் என்று எதிர்பார்த்திருந்தது.


நீண்ட நேரம் கழித்து சேகர் வந்தார். அவர் வந்ததும் அவரிடம், இரண்டு ஆட்டுக்குட்டிகளுமே ஒரே நிறம் மற்றும் ஒரே மாதிரியான வாசமாக இருக்கிறது. அதனால் நான் குழப்பத்தில் அவைகளை விட்டுவிட்டேன். இதற்கு என்ன காரணம் என்று தன் முதலாளியிடம் புலிக்குட்டி கேட்டது.


அதற்கு சேகர் புலிக்குட்டியிடம், ஒரே ஆட்டின் இரண்டு குட்டிகளை வித்தியாசம் தெரியாமல் இயற்கை வண்ணம் தீட்டி, வாரம் ஒரு ஆட்டுக்குட்டி உள்ளே, இன்னொரு ஆட்டுக்குட்டி வெளியே, அடுத்த வாரம் அப்படியே இடம் மாற்றி வைத்து உன்னிடம் பழக விட்டேன் என்று கூறினார். 


அதனாலேயே உனக்கு இரண்டும் ஒரே நிறம் மற்றும் வாசமாக தோன்றியதாக கூறினார். ' புலிக்குட்டியின் மிருகத்தனமான மாமிச ஆசைக்கு முன்னால் பழகிய பாசம் வென்றுவிட்டதாக அவர் கூறினார்" .


நீதி : 


மனிதனின் மனமும் அப்படித்தான். நாம் பழகியவர்களிடம் ஒரு விதமாகவும், புதிய நபர்களை கண்டால் ஒருவிதமாகவும் நடந்துகொள்கிறோம். அதுபோல் இல்லாமல், அனைவரையும் சமமாக எண்ணி பழக வேண்டும்.

 

Thanks and regards 

A s Govinda rajan 

 

எலியும், பூனையும்..!

ரோமாபுரி நாட்டை அதியமான் என்ற இளவரசர் ஆண்டு வந்தார். அவர் ஓர் மிகச் சிறந்த போர் வீரர் ஆவார். அவருடைய வாள்வீச்சு போருக்கு அந்த நாட்டில் வேறுயாறும் ஈடு இணையாக இருக்க முடியாது. அந்த அளவிற்கு அவர் வாள்வீசி போர் புரிவதில் வல்லவர் ஆவார். 


அவர் ஒருமுறை அரண்மனையில் வாள் வீசி பயிற்சி செய்துக் கொண்டிருக்கும் போது எலி ஒன்று குறுக்கே ஓடியது. அதைப் பார்த்த இளவரசர் உடனே அதன் மீது வாளை வீசினார். ஆனால், அந்த எலி தப்பித்துச் சென்றது.


ஆனால், இளவரசரோ விடாமல், அதனைத் துரத்தி வாளை வீசினார், மீண்டும் அந்த எலி தப்பித்து அதன் வளைக்குள் புகுந்து கொண்டது. ஒரு எலியின் மேல் வாள்வீசி நம்மால் ஜெயிக்க முடியவில்லையே என்று நினைத்து இளவரசர் மிகவும் வருத்தம் கொண்டார். 


அப்போது அங்கு வந்த அரசர், ஏன் சோகமாக இருக்கிறாய்? என்று இளவரசரிடம் கேட்டார். இந்த நாடே எனது வாள் வீசும் திறமைக்கு ஈடு கொடுக்க முடியாத போது, ஒரு சாதாரண எலியை என்னால் கொல்ல முடியவில்லை, என நடந்ததை இளவரசர் விவரித்து கூறினார்.


அதற்கு அரசர் சிரித்துக் கொண்டே, எலியைக் கொல்ல வாள் பயிற்சி எதற்கு? அரண்மனைப் பூனையைக் கொண்டு வந்தாலே போதுமே! அது எலியை பிடித்து விடும் என்றார். உடனே அரண்மனை பூனை வரவழைக்கப்பட்டது. அந்தப் பூனையும் எலியை வேட்டையாட முயன்றது.


ஆனால், அந்த எலி எளிதாக பூனையிடம் இருந்து தப்பித்துச் சென்றது. மீண்டும் இளவரசருடன் அரசரும் சோகமானார். அச்சமயம் அமைச்சர் அங்கு வந்து, என்ன அரசே? நீங்களும், இளவரசரும் சோகமாக இருக்கிறீர்கள்? என்று கேட்டார்.


அதற்கு அரசர் நடந்ததைப் பற்றி விரிவாக அமைச்சரிடம் கூறினார். உடனே அமைச்சர், நம் நாட்டு பூனைகள் எதற்கும் உபயோகம் ஆகாது போல, அயல் நாடுகளில் உள்ள பூனைகள், புலி உயரம் உள்ளன. அதனால் பூனைகளை அங்கிருந்து வரவழைப்போம் என்றார். அதேபோல் அயல்நாடுகளில் இருந்து பூனைகள் வரவழைக்கப்பட்டன.


ஆனால் அந்த எலி அந்தப் பூனைகளிடமிருந்தும் சாமர்த்தியமாகத் தப்பித்துச் சென்று வளைக்குள் புகுந்து கொண்டது. எலிக்கு இவ்வளவு திறமையா? என அனைவரும் வியந்து கொண்டிருக்கையில், அங்கே இருந்த அரண்மனைக் காவலன் இளவரசே! இந்த எலிக்குப் போய் மற்ற நாட்டு பூனையெல்லாம் எதுக்கு? எங்க வீட்டுப் பூனையே போதும் என்றார். 


ஆனால், அரசருக்கு அக்காவலன் கூறியதில் நம்பிக்கை ஏற்படவில்லை. அரண்மனையில் வளர்ந்து வரும் பூனையால் முடியாதது சாதாரண பூனையால் முடியுமா? என்று கேட்டார். சிறிது நேரம் கழித்து இளவரசர் அக்காவலனிடம், அவருடைய பூனையை எடுத்து வருமாறு கூறினார். 


காவலாளியும் வீட்டிற்குச் சென்று பூனையைக் கொண்டு வந்தார். அந்தப் பூனை அந்த எலியை ஒரே தாவலில் 'லபக்" என்று கவ்விச் சென்றது. இதனைப் பார்த்த இளவரசருக்கு ரொம்ப ஆச்சரியமாக இருந்தது. 


என்ன இது அதிசயம்! அரண்மனையில் வளர்ந்த பூனைகளிடம் இல்லாத திறமை எப்படி இந்தச் சாதாரண பூனைக்கு ஏற்பட்டது? எப்படி சாத்தியம்? என்ன பயிற்சி கொடுத்துப் பூனையை வளர்க்கிறீர்கள்? என்று வியந்தவாறே கேள்விகளை கேட்க தொடங்கினார்.


அதற்குக் காவலாளி, பெரிதாக என் பூனைக்குத் திறமையோ, பயிற்சிகளோ எதுவும் இல்லை இளவரசே. என் பூனைக்கு இப்போது ரொம்பப் பசியாக இருக்கிறது, அவ்வளவுதான் என்றார். அதைக்கேட்ட அரசரும், இளவரரும் எதுவும் கூறாமல் வாயடைத்து நின்றனர். 


அரண்மனைக்குள் பூனைகள் நன்கு தின்று கொழுத்திருப்பதால் அவற்றுக்கு பசி என்றால் என்னவென்றே தெரிய வாய்ப்பில்லை. எனவே, அவற்றால் எலியை எப்படி பிடிக்க முடியும்?


நீதி : 


எந்த ஒரு வேலையையும் வெற்றிகரமாகச் செய்து முடிக்க வேண்டுமென்றால், நாம் செய்கின்ற வேலையில் ஒரு குறிக்கோள் இருக்க வேண்டும். மேலும், அதனுடைய தேவையை உணர்ந்து செயல்பட வேண்டும். அப்போதுதான் அந்தக் காரியத்தை சரியாக செய்து முடிக்க முடியும்.

 


 Thanks and regards 

A s Govinda rajan 


இறைவனின் தரிசனம்..!

சந்நியாசி ஒருவர் ஊர் ஊராக திருத்தலப் பயணம் சென்று கொண்டிருந்தார். ஒரு முறை அவர் ஆற்றில் நீராடிவிட்டு, ஆற்றங்கரையிலிருந்த மரத்தடியில் அமர்ந்து தியானம் செய்தார். அவர் செய்ததை, மாடு மேய்க்கும் சிறுவன் ஒருவன் பார்த்துக்கொண்டிருந்தான்.


சந்நியாசி என்ன செய்யப் போகிறார் என்பதை அறிவதற்காக அவரையே அச்சிறுவன் கவனித்தான். நீண்ட நேரத்திற்குப் பின் சந்நியாசி தியானம் கலைந்து எழுந்ததும் அவர் அருகில் சிறுவன் சென்று சுவாமி! நீங்கள் இது வரையில் என்ன செய்துகொண்டிருந்தீர்கள்? என்றான்.


அதற்குத் துறவி, நான் இறைவனைப் பார்க்க வேண்டும் என்று தியானம் செய்தேன் எனக்கூறி அங்கிருந்து சென்றார். பின் சிறுவன், இந்த ஆற்றில் நீராடி, இந்த மரத்தடியில் உட்கார்ந்து தியானம் செய்தால் இறைவனைப் பார்க்க முடியும் என எண்ணினான். 


உடனே அந்த சிறுவனும் இறைவனை பார்க்க எண்ணி உடனடியாக ஆற்றில் நீராடி, மரத்தடியில் கண்களை மூடி அமர்ந்து இறைவனை நினைத்து, இறைவனே! நீ என் முன்னால் தோன்றி, எனக்குத் தரிசனம் தர வேண்டும் என்று, மனதிற்குள் திரும்பத் திரும்ப கூறினான்.


கள்ளம் கபடமில்லாத சிறுவன் தன்னை நினைத்து பிரார்த்தனை செய்ததால் கடவுளும் சிறுவன் முன் தோன்றினார். சிறுவன் அதற்கு முன் இறைவனை நேரில் பார்த்ததில்லை. அதனால் அவன் இறைவனிடம், நீங்கள் யார்? என்று கேட்டான். நான்தான் இறைவன். நீ என்னை பார்க்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்தாய். அதனால் தான், இப்போது உனக்குக் காட்சி தருகிறேன் என்றார். ஆனால், சிறுவன் நீங்கள் இறைவன் என்று நான் எப்படி நம்புவது? உங்களைப் பார்த்த ஒருவர் இங்கு வந்து, இவர்தான் இறைவன்! என்று கூறினால்தான் நீங்கள் இறைவன் என்று நம்புவேன்! என்றான்.


என்னை இதற்கு முன் பார்த்த யாரையாவது உனக்கு தெரியுமா? என்று இறைவன் கேட்டார். இங்கு சற்று முன் அமர்ந்து தியானம் செய்த துறவிக்கு உங்களைத் தெரியும். நான் அவரைத் தேடி இங்கு அழைத்து வருகிறேன். அதுவரை நீங்கள் இங்கேயே இருக்க வேண்டும் என்றான். 


அதற்கு இறைவனும், சரி என்றார். ஆனால், சிறுவன், இறைவனிடம் நான் இங்கிருந்து சென்றதும் போய்விடலாம் என்று நினைக்கிறாயா? என்னை ஏமாற்ற முடியாது என்று மாடுகளின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த கயிறுகளை அவிழ்த்து இறைவனை மரத்தில் நன்றாகக் கட்டினான். 


பிறகு சிறுவன் துறவி சென்ற திசையை நோக்கி வேகமாக ஓடி துறவியை நெருங்கி, சுவாமி! நீங்கள் கூறியபடி நான் செய்தேன். அப்போது என் முன்னால் ஒருவர் தோன்றி, நான்தான் இறைவன். நீ பிரார்த்தனை செய்ததால், உனக்குக் காட்சி கொடுத்திருக்கிறேன் என்றார். அவர் கூறியதை நான் நம்பவில்லை. அதனால், அவரை நான் ஒரு மரத்தில் கட்டிப் போட்டு உள்ளேன். 


நீங்கள் வந்து அவர் இறைவனா, இல்லையா? எனச் சொல்லுங்கள் என்று கூறி அழைத்தான். அதிர்ந்து போன துறவி சிறுவனுடன் வந்தார். சிறுவன் மரத்தில் கட்டப்பட்டிருந்த இறைவனை காட்டி துறவியிடம், பாருங்கள்! நான் இவரைத்தான் மரத்தில் கட்டிப்போட்டேன். இவர்தான் இறைவனா? என்று கேட்டான்.


துறவியின் கண்களுக்கு மரத்தில் கட்டியிருந்த இறைவன் தெரியவில்லை. நீ என்ன சொல்கிறாய்? இங்கு யாருமே இல்லையே! என்றார். அதற்குச் சிறுவன், நன்றாகப் பாருங்கள்!. இங்கு நான் மரத்தில் கட்டியவர் இருக்கிறாரே! என்றான்.


துறவிக்கோ ஒன்றும் புரியவில்லை. அப்போது இறைவன், சிறுவனே! நீ கள்ளம் கபடமற்ற தூய உள்ளத்துடன், நம்பிக்கையோடு என்னை அழைத்தாய். அதனால் உனக்குத் தரிசனம் கொடுத்தேன். உனக்கு இருக்கும் நம்பிக்கை இத்துறவிக்கு இல்லை. 



Thanks and regards 

A s Govinda rajan 

Kodambakkam Chennai 600024

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%