இன்று நீதிமன்றத்தில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
ஆங்காங்கே மீடியாக் கேமராக்கள் மினுக்கின.
"இன்றுதான் தீர்ப்பு” என்கிற பதற்றம் எல்லோர் முகத்திலும் தெரிந்தது.
நாற்காலியில் தலை குனிந்து அமர்ந்திருந்தான் ரவி. அவன் ஒரு சாதாரண டிரைவர். அவன் மீது
ஒரு குழந்தைக் கொலை வழக்கு.
அரசு வக்கீல் உரக்க சொன்னார்,
“கடைசியாக குழந்தையுடன் காணப்பட்டவர் இவரே.”
தொடர்ந்து சாட்சிகள் பேசினார்கள்.
ரவி குடும்பத்தாரின் ஓயாத அழுகுரல்கள்.
நீதிபதியின் மேஜையில் ஆவணங்கள். ஆதாரங்கள்.
ரவி அமைதியாய் அமர்ந்திருந்தான்.
கைகள்தான் மட்டும் லேசாய் நடுங்கிக் கொண்டிருந்தன.
நீதிபதி தீர்ப்பை அறிவித்தார்.
“சாட்சிகளின் அடிப்படையில்,
குற்றம் நிரூபிக்கப்பட்டதால்
இவருக்கு ஆயுள் தண்டனை”
நீதிமன்றம் ஒரு நொடியில்
சத்தமாயிற்று.
ரவி தலையை உயர்த்தினான். நீதிபதிய அர்த்தபுஷ்டியுடன் பார்த்து வணங்கினான்.
அவனை அழைத்துச் சென்றார்கள்.
அன்று இரவு.
நீதிபதியின் வீட்டில் அமைதி இல்லை.
அவரது மகன் வினோத் பதட்டமாக நடந்து கொண்டிருந்தான்.
“அப்பா…” என்றான் குரல் உடைந்து.
" என்ன வினோத்..."
“வந்து... உண்மையிலேயே அந்தக் குழந்தையை கொன்னது நான்தான்!... நான் செய்த குற்றத்திலிருந்து என்னைக் காப்பாற்றிக் கொள்ள அந்த டிரைவரை கன்வின்ஸ் பண்ணி.. பெரிய தொகை கொடுத்து குற்றத்தை ஒப்புக்க வெச்சேன்!... நீங்களும் அவனுக்கு சட்டப்படி ஆயுள் தண்டனை குடுத்திட்டீங்க... ரொம்ப நன்றிங்கப்பா" என்றான் வினோத்.
நீதிபதியின் முகம் வெளிறியது.
திரும்பி டிவியை பார்த்தார்.
“குழந்தை கொலை வழக்கில்
தீர்ப்பு நிறைவேற்றப்பட்டது.”
நிதானமாய் நாற்காலியில் சாய்ந்தார்.
கண்களில் நீர் இல்லை. நெஞ்சு மட்டும் கனத்தது.
பிறகு மெதுவாக சொன்னார், "ஒரு நிரபராதிக்கு அங்கே ஆயுள் தண்டனை குடுத்தேன்... ஒரு குற்றவாளிக்கு இங்கே மரண தண்டனை குடுக்கப் போறேன்"
"அப்பா...நீங்க என்ன சொல்றீங்க?" வினோத் அலற, தன் மடியிலிருந்த துப்பாக்கியை எடுத்து வினோத்தை நோக்கி....
"டுமீல்"
(முற்றும்)
முகில் தினகரன்,
கோயமுத்தூர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?