பணி நியமனங்களுக்கு தலா ரூ.35 லட்சம் வசூலித்ததாக புகார்: தமிழக டி.ஜி.பி.க்கு அமலாக்கத்துறை கடிதம்
பணி நியமனங்களுக்கு தலா ரூ.35 லட்சம் வசூலித்ததாக புகார்: தமிழக டி.ஜி.பி.க்கு அமலாக்கத்துறை கடிதம்
‘அரசியல் உள்நோக்கம் கொண்டது’ என தமிழக அரசு பதிலடி
சென்னை, அக்.30-
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் நகரமைப்பு அதிகாரி, உதவி என்ஜினீயர், இளநிலை என்ஜினீயர், துப்புரவு ஆய்வாளர் நியமனத்துக்கு தலா ரூ.35 லட்சம் வசூலித்ததாக புகார் தெரிவித்து தமிழக டி.ஜி.பி.க்கு, அமலாக்கத்துறை பரபரப்பு கடிதம் எழுதியது. இந்த குற்றச்சாட்டு ‘அரசியல் உள்நோக்கம் கொண்டது’ என்று தமிழக அரசு பதிலடி கொடுத்துள்ளது.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் நகரமைப்பு அதிகாரி, உதவி என்ஜினீயர், இளநிலை என்ஜினீயர், துப்புரவு ஆய்வாளர் ஆகிய பதவிகளுக்கு 2 ஆயிரத்து 538 பேரை தேர்வு செய்வதற்கு கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த பதவிகளுக்கு மொத்தம் 1 லட்சத்து 12 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். இதற்கான தேர்வை நகராட்சி நிர்வாகத்துறை அறிவுறுத்தலின்பேரில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தியது. தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு கடந்த ஆகஸ்டு மாதம் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.இதில் சுமார் 150 பணியிடங்கள் லஞ்சம் பெற்றுக்கொண்டு நிரப்பப் பட்டு உள்ளதாக அமலாக்கத்துறை குற்றச்சாட்டியுள்ளது. அதாவது, நகராட்சி நிர்வாகத்துறையின் அமைச்சராக பதவி வகித்து வரும் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் நடத்தி வரும் ‘ட்ரூ வேல்யூ ஹோம்ஸ்' எனும் நிறுவனம் நிதி மோசடியில் ஈடுபட்டதாக வெளியான குற்றச்சாட்டை அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வரும் நிலையில், அந்த விசாரணையின்போது இந்த மோசடி தொடர்பான ஆவணங்கள் கிடைத்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என தமிழக டி.ஜி.பி. (பொறுப்பு) வெங்கட ராமனுக்கு அமலாக்கத்துறை கடிதமும் எழுதி உள்ளது.
அமலாக்கத்துறை விசாரணை யின்போது, மற்றொரு சட்ட விதிகள் மீறப்பட்டதாக அதிகாரிகள் கருதினால் அது தொடர்புடைய அமைப்பு அல்லது அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரலாம் என சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட விதிகள் கூறுவதை சுட்டிக்காட்டி இந்த கடிதத்தை அமலாக்கத்துறை டி.ஜி.பி.க்கு அனுப்பி உள்ளது.
அந்த கடிதத்துடன் 232 பக்கங்களை கொண்ட ஆதாரங்களையும் சேர்த்து அனுப்பியுள்ளது. அந்த ஆவணங்களில், இந்த பணி யிடங்களுக்கு யார், யாரிடம் இருந்து எவ்வளவு பணம் பெறப்பட்டது, அவர்களிடம் இருந்து பணத்தை பெற்றுக்கொண்ட நபர்கள் யார்?, விண்ணப்பதாரர்களிடம் இருந்து பணம் பெற்றவர்களின் பங்களிப்பு என்ன? என்பது போன்ற விவரங்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இடைத்தரகர்கள் மூலம்
பணம் கைமாறியது
செல்வாக்குமிக்க அரசியல்வாதிகள் மற்றும் அவர்களுக்கு மிக நெருக்கமான வர்கள் ஒரு பணியிடத்துக்கு ரூ.25 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை லஞ்சமாக வசூலித்துள்ளனர் என்றும், இடைத்தரகர்கள் மூலம் இந்த பணம் கைமாறி உள்ளதாகவும் அமலாக்கத்துறை சுட்டிக்காட்டி உள்ளது. குறிப்பிட்ட அந்த 150 பேருக்கும் தேர்வின்போது சலுகை காட்டப்பட்டுள்ள தாகவும், அந்த வகையில் தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாகவும், இதுதொடர்பாக தேர்வு நடத்திய அண்ணா பல்கலைக்கழகத்தின் மீதும் உரிய விசாரணை நடத்த வேண்டும் என தமிழக போலீசாரை கேட்டுக்கொண்டுள்ளது.
மிக ரகசியமாக மேற்கொள்ளப்பட வேண்டிய, அரசின் தேர்வு நடைமுறையில் தனிநபர்கள் எப்படி தலையிட்டார்கள்? என்றும் அமலாக்கத்துறை கேள்வி எழுப்பி உள்ளது.
 
                     
                                 
    
 
                                                             
                                                             
                                                             
             
                             
                             
                             
                             
                             
                             
                     
                     
                  
                  
                  
                  
                  
                 