பரிகாரம்

பரிகாரம்


அருணகிரி அந்த அரசு மருத்துவமனையின் சவக்கிடங்கில், போஸ்ட்மார்ட்டம் முடிந்த சவங்களின் உறுப்புகளை மீண்டும் உடலினுள் உள்ளே திணித்து, ஒரு சாக்குப்பையைத் தைப்பது போல் தைக்கும் பணிபுரிபவர். 


ஒவ்வொரு முறை அதைச் செய்யும் போதும் அவர் கண்களில் கண்ணீர் ஆறாய்ப் பெருகி ஓடும்.


வழக்கம்போல் இன்றும் ஒரு சவத்தைத் தைத்து முடித்த பின் வெளியே உட்கார்ந்து கண்ணீர் விட்டுக் கொண்டிருந்த அருணகிரியிடம் வந்த சக ஊழியன் சிவசைலம் கேட்டான். 


 "ஏம்பா அருணகிரி... யாருன்னு தெரியாத ஒருத்தரோட சவத்தைத் தைக்கும் போது எதுக்கப்பா நீ இப்படி அழறே?"


  "யாராயிருந்தா என்னப்பா?... அவனும் ஒரு தாய்க்குப் பொறந்து... தாய்ப்பால் குடிச்சு... தரையில் தவழ்ந்து.. தாயன்பிலும், தகப்பன் அரவணைப்பிலும் தானே வளர்ந்திருப்பான்!... முந்தாநாள் வரைக்கும் இந்த உலகத்தை முழுசா பார்த்து ரசித்து அனுபவிச்சு வாழ்ந்திட்டு... இன்னைக்கு இப்படி கூறு போடப்பட்டு கிடக்கிறானே?.. வாழும் காலத்துல என்னென்ன ஆசைகளை... கனவுகளை சுமந்திருப்பான்... நினைச்சுப்பாரு! எத்தனை எதிர்பார்ப்புக்கள்... ஏக்கங்கள் இவனுக்குள் இறுகிப் போய்க் கிடக்கோ?" என்று அருணகிரி சொன்ன பதில் சிவசைலத்தை நெகிழச் செய்தது. 


அன்று காலை போலீஸ் என்கௌண்டரில் கொல்லப்பட்ட ஒரு இளைஞனின் சவம் போஸ்ட்மார்ட்டத்திற்கு வந்திருந்தது.

பத்து வயது சிறுமியைச் சிதைத்துக் கொன்ற அந்த காமக்கொடூரனை காவல்துறை என்கௌண்டர் செய்திருந்தது.


வழக்கம் போல் போஸ்ட்மார்ட்டம் முடிந்ததும் அந்த சவத்தின் உள்ளுறுப்புகளை எடுத்து அதற்குள் திணித்துத் தைத்து விட்டு வெளியே வந்தமர்ந்த அருணகிரி வழக்கத்திற்கு மாறாமல் அழாமல் உட்கார்ந்திருந்தார்.


ஆச்சரியமான சிவசைலம் கேட்டான்.


  "இத்தனை நாள் நான் தைச்சது மனித உடல்களை... ஆனா இன்னைக்கு நான் தைச்சது மனித உருவில் இருந்த ஒரு மிருகத்தை அதனாலதான் எனக்கு அழுகை வரலை!


அப்போது வேகமாக ஓடி வந்த அங்கிருந்த துப்புரவுப் பெண்மணி சிவசைலத்தை மட்டும் தனியே அழைத்தாள்.


 "அண்ணே... அந்த என்கௌண்டர் இளைஞன் யாரு தெரியுமா?... நம்ம அருணகிரியோட மகன் பாலுதான்"


அதிர்ந்து போன சிவசைலம் சட்டென்று தலையைத் திருப்பி அருணகிரியைப் பார்த்தார்.


அவர் இறுகிய முகத்துடன் அமர்ந்திருந்தார்.


  "யார் யாரோ பிணத்தைத் தைக்கும் போதெல்லாம் அழுத இந்த அருணகிரி இன்னைக்கு தன்னோட மகன் பிணத்தைத் தைக்கும் போது அழாமல் இருக்கிறார் என்றால்... ஒருவேளை அவருக்கு தன் மகனின் சவத்தை அடையாளம் தெரியலையோ?"


சில நிமிடங்களில் "விருட்"டென்று எழுந்து, அங்கிருந்து கிளம்பிய அருணகிரியை வினோதமாய்ப் பார்த்தான் சிவசைலம்.


அடுத்த அரை மணி நேரத்தில் அந்த தகவல் எல்லோருக்கும் வந்து சேர்ந்தது.


"பாவம் அருணகிரி... பையன் செய்த காரியத்தினால அவமானம் தாங்காமத் தூக்கில் தொங்கிட்டாராம்!"


யாரோ, யாரிடமோ சொல்லிக் கொண்டிருந்தனர்.

(முற்றும்)



முகில் தினகரன்,

கோயமுத்தூர்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%