பருவதமலை மழை வெள்ளத்தில் அடித்துச்சென்ற பெண்கள் உடல் மீட்பு
Aug 14 2025
108

திருவண்ணாமலை, ஆக. 11-
திருவண்ணாமலை மாவட்டம், கலசப் பாக்கம் அடுத்த தென் மகாதேவ மங்கலம் கிராமம் அருகே உள்ள 4,586 அடி உயர முள்ள பருவத மலையில் பெய்த மழை வெள்ள விபத்தில் அடித்து செல்லப்பட்ட இரண்டு பெண்களின் உடல் மீட்கப்பட்டது. பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் ஏராளமான பக்தர்கள் வருகை தரும் பருவதமலையில், கடந்த சனிக்கிழமை (ஆக.19) பவுர்ணமி தினத்தை முன்னிட்டு, பல்வேறு மாவட்டங்களிலிருந்து மக்கள் வந்திருந்தனர். ஞாயிறன்று (ஆக.10) மலை யிலிருந்து திரும்பி வரும்போது கனமழை பெய்தது. இதனால் மலையடிவார தரைக்காட்டில் பச்சையம்மன் கோவில் அருகில் உள்ள ஓடையில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சென்னையைச் சேர்ந்த ஒரு குழுவினர் ஒருவருக்கொருவர் கைகளைப் பிடித்துக் கொண்டு ஓடையைக் கடந்து வந்த போது, சென்னை திருவேற்காடு பகுதியைச் சேர்ந்த தங்க தமிழ்ச்செல்வி (36) மற்றும் கோயம்பேடு பகுதியைச் சேர்ந்த இந்திரா (51) ஆகிய இரண்டு பெண்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் மழை வெள்ளத்தில் சிக்கிய சுமார் 50க்கும் மேற்பட்டவர்களை கயிறு மூலம் பத்திரமாக மீட்டனர். திங்கள் காலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர், கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன், போளூர் சட்டமன்ற உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர். அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?