பழகிப் பார்த்ததில் இவர்கள்

பழகிப் பார்த்ததில் இவர்கள்


ஆசிரியர்: மரபின் மைந்தன் முத்தையா 

வெளியீடு: விஜயா பதிப்பகம் 

விலை : ₹250

தொடர்புக்கு: 9047087053


ஆசிரியர் மரபின் மைந்தன் முத்தையா சந்தித்த 33 ஆளுமைகளைப் பற்றிய தொகுப்பு இது.


இவர்களில் அறிவொளி, பேராசிரியர் சத்யசீலன், பா.நமசிவாயம் , நூல் ஆசிரியர் உட்பட அடியேனும் சிலரை நேரில் இலக்கிய கூட்டங்களில் ஒரு பார்வையாளராக சந்தித்திருக்கிறேன்.


நூலில் இருந்து சில பகுதிகள்:


2. அறிவொளி

 மரபின் மைந்தன் முத்தையா தன் 50 வது நூலான "திருக்கடவூர் " எழுதும் போது, ராஜ ராஜ சோழன் காலத்து கல்வெட்டு ஒன்றில் " படையேவிய திருக்கடவூர்" என்று குறிப்பிட்டிருப்பதை அறிந்து, திருக்கடவூரில் இருந்து எந்த நாட்டிற்கு எப்போது படை ஏவப்பட்டது என்கிற விபரத்தை தேடியபோது அது எந்த விதத்திலும் கிடைக்கவில்லையாம்.


அறிவொளி அவர்களிடம் கேட்ட போதுதான், திருக்கடவூர் கடலுக்கு அருகே இருப்பதால் ராஜ ராஜ சோழன் பெரிய கடற்படை ஒன்றை அந்த ஊரில் நிறுவியிருக்க வேண்டும் (regiment) என்றாராம். தனக்கும் அது சரியெனப்பட்டதால், அந்த அடிப்படையில் அந்நூலில் ஓர் அத்தியாயமே எழுதினாராம்.



4. கவிக்கோ அப்துல் ரகுமான் 

டாக்டர் மெ‌சுந்தரம் எழுதிய "கலைஞரின் கவிதை வளம்" நூலில் ஒரு கவியரங்கத்தில் கலைஞர் "கவிக்கோவை" அறிமுகப்படுத்தி பாடிய வரிகளை இங்கே குறிப்பிடுகிறார்:


" அவைகூட்டும் அரங்கிற்கு 

சுவை கூட்ட வேண்டாமோ?

அதற்காக வருகின்றார்

அப்துல் ரகுமான்;

இவரொரு வானம்பாடி 

இருக்குமிடம் வாணியம்பாடி '


9. கவிஞர் இளந்தேவன் 

இவரை இவர் கவிதை வழி நமக்கு அறிமுகம் செய்கிறார்.


" சொல்லை சிந்திப்பவன்

மரபுக்கவிஞன் ஆகின்றான்

பொருளை சிந்திப்பவன்

புதுக்கவிஞன் ஆகின்றான் 

இரண்டையும் சிந்திப்பவன் 

இளந்தேவன் ஆகின்றான்"


மலேசியாவில் , கம்பன் கழகத் தலைவர் டத்தோ ஶ்ரீ சரவணன் உறுதியாக இருந்ததால் தலைமை ஏற்க இளந்தேவன் பல்வலியோடு வந்தாராம்.


" சொல்வலிக்க மாட்டாமல் சுகக்கவிதை தருபவரே பல்வலிக்கு மத்தியிலும் பாட்டரங்கம் வந்தவரே" என முத்தையா சிநேகமாய் சீண்ட


" கன்னத்தில் வைத்த கரம் கவிஞன் சிந்தனைக்கு 

சின்னமென அவையோர் சொல்லட்டும் என்றிருந்தேன்

அண்மையிலே இருந்தபடி அவதிநான் படுகின்ற

உண்மையினைப் போட்டு உடைத்தீரே" என அவர் பதில் கவிதை பாடினாராம்‌.


27. பெரும்புலவர் பா.நமசிவாயம்

கலைஞர் முதல்வராக இருந்த போது நடைபெற்ற கூட்டத்தில் இவர் பேசும்போது , " முதல்வர் அவர்களே உங்கள் அமைச்சரவை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. ஏனென்றால், இந்த அமைச்சரவையில் தான் என் ஆசிரியரும் அமைச்சராக இருக்கிறார். என் மாணவரும் அமைச்சராக இருக்கிறார்" எனக் குறிப்பிட்டாராம்.


ஆம். நமசிவாயம் அவர்களுக்கு பேராசிரியர் அன்பழகன் ஆசிரியர். மேனாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி அவருடைய மாணவர்.


பெரும்புலவர் நமசிவாயம் மறைவிற்கு சில ஆண்டுகள் முன்பாக "திருச்சி நகைச்சுவை மன்றம்" சார்பில் பாராட்டு விழா நடைபெற்றபோது அவர் ஹோம் டயாலிஸிஸ் முறையில் சிகிச்சை மேற்கொண்டிருந்த நேரம், தன் மனைவியைக் காட்டி " இன்று நான் நன்றாக இருக்கிறேன் என்றால் இவர்தான் காரணம்" என்றதும் அவை உணர்ச்சிவயப்பட்டு கரவொலி செய்தது. அடுத்து தன் மனைவி, " குற்றாலக் குறவஞ்சி பாடிய திரிகூட ராசப்ப கவிராயர் கொள்ளுப் பேத்தி" என்று சொன்னதோடு நில்லாது " அதற்காக அவர்கிட்ட குற்றாலக் குறவஞ்சி பாட்டெல்லாம் கேட்காதீங்க அதெல்லாம் ஒன்னும் தெரியாது" என கலகலப்பூட்டினார்.

அவையில் அடியேனும் பார்வையாளராக இருந்தேன்.


33. பாலரிஷி ஸ்ரீ விஸ்வசிராஷினி 

சித்தர் வழிபாட்டில் நாட்டமுடைய நண்பர் யானிதேஷ் இவரைப்பற்றி விரிவாகச் சொன்னாராம். 10 வயதில் அவருக்கு உள்ளிருந்து சில மந்திரங்கள் வெளிப்படத் தொடங்கின. அவை எந்த ஏட்டிலும் இல்லாதவை. அவ்வப்போது அவரிடம் தோன்றுபவை என்றாராம்.


பாலரிஷியை இவர் முதன்முதலாக சந்தித்த போது அவருக்கு வயது 16 என்கிறார்.


பால ரிஷி பிறந்த நாள் அக்டோபர் 1 , அதற்கு முன்பாக சந்திக்க நினைத்து பரிசளிக்க இவர் ஒரு லிங்கம் வாங்க, கடைக்காரர் பீடத்தையும் வாங்கிக் கொள்ளுங்கள் என்றாராம்.


ஆஸ்ரமத்தில் அவரது தாயார் இவர் கையில் உள்ள பொட்டலத்தில் என்ன உள்ளது எனத் தெரியாமலே, இம்முறை பிறந்த நாளுக்கு யாரேனும் பரிசளித்தால் லிங்கம் தான் கொடுக்க வேண்டுமென சுவாமி சொல்லியிருக்கிறார்கள் என்றதும் தூக்கி வாரிப்போட்டதாம்.



ஸ்ரீகாந்த்

திருச்சி

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%