பெங்களூருவில் இருந்து சென்னைக்கு மெத்தம்பெட்டமைன் கடத்திய இளம்பெண் கூட்டாளியுடன் கைது

சென்னை:
பெங்களூருவிலிருந்து சென்னைக்கு மெத்தம்பெட்டமைனை கடத்தி வந்த இளம் பெண் கூட்டாளியுடன் கைது செய்யப்பட்டார். இக்கும்பல் சினிமா துறையினரை குறிவைத்து போதைப் பொருளை விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது. சென்னையில் போதைப் பொருள் கடத்தல், பதுக்கல் மற்றும் விற்பனையைத் தடுக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இவர்களுடன் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவினரும் ஒருங்கிணைந்து கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், எம்ஜிஆர் நகர் காவல் நிலைய போலீஸாருக்கு கடந்த 12-ம் தேதி ரகசியத் தகவல் ஒன்று கிடைத்தது. இதையடுத்து அன்று மதியம் எம்ஜிஆர் நகர், கே.கே.சாலையிலுள்ள ஓட்டல் அருகே போலீஸார் கண்காணித்தனர்.
அங்கு மெத்தம் பெட்டமைன் போதைப் பொருள் வைத்திருந்த சங்கர நாராயணன், பிரசாந்த், ஆகாஷ்குமார் மற்றும் மணிகண்டசாமி ஆகிய 4 பேரை கைது செய்து நீதிமன்ற. காவலுக்கு உட்படுத்தினர். முன்னதாக அவர்களிடமிருந்து மெத்தம்பெட்டமைன் மற்றும் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன.
இவர்கள் கொடுத்த தகவலின்பேரில் தலைமறைவாக இருந்த திருவேற்காடு அவினாஷ் (25), குரோம்பேட்டை வினோதினி என்ற ஜாய்ஸ் (24) ஆகிய மேலும் இருவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் வினோதினி பெங்களூருவிலிருந்து சென்னைக்கு அடிக்கடி மெத்தம்பெட்டமைனை பயணி போல் பேருந்தில் கடத்தி வந்து, அதை தனது கூட்டாளிகளிடம் ஒப்படைத்து சினிமா துறையினர், ஐ.டி ஊழியர்கள், இளைஞர்களை குறிவைத்து அதிக விலைக்கு விற்பனை செய்துவந்தது தெரியவந்தது.
மேலும் இவரே போதைப் பொருள் கடத்தலுக்கு மூளையாகவும் செயல்பட்டுள்ளார். இந்த கும்பலின் பின்னணி குறித்து தொடர்ந்து விசாரித்து வருகிறோம் என்று போலீஸார் தெரிவித்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை போலீஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?