பெண்கள் மூலம் பேசி ஆன்லைன் டிரேடிங் மோசடி நடப்பது எப்படி? - மதுரை சைபர் க்ரைம் போலீஸ் எச்சரிக்கை
மதுரை:
மதுரையில் போலி செயலி மூலம் ஆன்லைன் டிரேடிங் மோசடி அதிகரித்துள்ளது என்றும், விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் சைபர் க்ரைம் போலீஸார் எச்சரித்துள்ளனர்.
சமீப காலமாக போலி செயலிகளால் ஆன்லைன் டிரேடிங் என்ற பெயரில் மோசடிகள் அதிகரிக்கின்றன. இதில் ஈடுபடுவோர் சமூக வலைதளங்களில் புதிய முதலீடு கம்பெனிகள் தொடங்கி இருப்பதாகவும், அதற்கான புதிய திட்டங்களை அறிமுகம் செய்தும் அப்பாவி மக்களின் ஆசையை தூண்டுகின்றனர். குறிப்பிட்ட தொகை முதலீடு செய்தால் குறிப்பிட்ட நேரத்தில் மார்க்கெட் நிலவரத்திற்கு ஏற்ப கூடுதல் லாபம் கிடைக்கும் என, நம்ப வைக்கின்றனர். இதை நம்பி ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது போன்ற மோசடியில் பணி ஓய்வு பெற்றவர்களும் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். மதுரையிலும் கடந்த ஓராண்டில் மட்டும் 15-க்கும் மேற்பட்டோர் இந்த மோசடியால் பாதிக்கப்பட்டதாக புகார் தெரிவித்து இருப்பதாக சைபர் க்ரைம் போலீஸார் தரப்பில் தெரிவிக்கின்றனர். இது பற்றி போலீஸார் கூறியது; ”பெரும்பாலும் இதுபோன்ற மோசடியில் ஈடுபடுவோர் வெளிநாடுகளை சேர்ந்தவர்களாகவே இருக்கின்றனர். இவர்கள் முதலீடு செய்யும் நபர்களை தொடர்பு கொள்ளும்போது, நுனி நாக்கில் ஆங்கிலம் பேசுகின்றனர். குறிப்பிட்ட பெண் பெயரை சொல்லி அவரை மட்டுமே பேச வைத்து ஏமாற்றுகின்றனர்.
முதலில் முதலீட்டாளர்கள் எங்கு இருக்கிறார்கள் என தெரிந்து கொண்டு அதற்கேற்ப பதில் அளிக்கின்றனர். முதலீடுக்கு சம்மதித்தால் தமிழ்நாட்டைச் சேர்ந்த வங்கி அக்கவுண்ட் எண்கள் கொடுப்பதில்லை. குஜராத், ராஜஸ்தான், அசாம், கர்நாடகா போன்ற மாநிலங்களிலுள்ள வங்கி எண்களை வழங்குகின்றனர். குறைந்த தொகை முதலீடு செய்ய வைத்து, அதற்கான கூடுதல் தொகையுடன் திரும்பி வழங்கி நம்ப வைக்கின்றனர்.
இதன்பின், பெரிய தொகையை முதலீடு செய்ய வைக்கின்றனர். பணம் அவர்களது அக்கவுண்டில் கிடைத்தவுடன் எடுத்துக் கொள்கின்றனர். பிறகு சம்பந்தப்பட்ட வங்கியில் கொடுத்த சிம் கார்டு எண்களை தூக்கி வீசிவிட்டு புதிய எண்களை வாங்கி கொள்கின்றனர். இது குறித்த புகார்களை விசாரிக்கும் போது, மோசடிக்காரர்களின் பழைய எண்களை தொடர்பு கொள்ள முடியாது. அந்த சிம் கார்டு போலி முகவரியில் இருக்கும்.
இது போன்ற மோசடிகளை விசாரிப்பதில் பெரும் சவால் உள்ளது. குறிப்பாக இதில் பென்ஷனர்கள் அதிகம் ஏமாறு கின்றனர். ரூ.5 முதல் 15 லட்சம் வரையிலும் முதலீடு ஏமாந்து இருக்கின்றனர். மதுரையில் ரூ.50 லட்சம் மற்றும் அதற்கு மேலும், ரூ.50 லட்சத்திற்கு குறைவாக ஏமாந்தவர்கள் என, கடந்த ஒன்றரை ஆண்டில் மட்டும் 30-க்கும் மேற்பட்டோர் புகார் அளித்துள்ளனர்.
பெரும்பாலும் அரசு, தனியார் துறையில் ஓய்வு பெற்ற அதிகாரிகளும், ஒரு குடும்பத்தில் இருவர் வேலை பார்த்தால் ஒருவரின் வருவாயை சேமிக்கலாம் என, திட்டமிட்டு முதலீடு செய்தவர்கள் ஏமாந்துள்ளனர். வாட்ஸ் ஆப், இன்ஸ்ட் கிராம் போன்ற சமூக ஊடகங்களில் வெளிவரும் போலி செயலிகளில் வரும் முதலீடு நிறுவனங்களை நம்பக் கூடாது. விழிப்புணர் வுடன் இருக்க வேண்டும்” என்று போலீஸார் கூறினர்.