பொன்முடி சர்ச்சை பேச்சு: முழு வீடியோவை கோர்ட்டில் தாக்கல் செய்த காவல்துறை
Sep 05 2025
16

சைவம், வைணவம் குறித்து முன்னாள் அமைச்சர் பொன்முடி பேசிய விடியோ பதிவு ஆதாரங்களை, சென்னை ஐகோர்ட்டில் காவல்துறை தாக்கல் செய்திருக்கிறது
திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது, பெண்கள் குறித்தும் சைவம், வைணவம் குறித்தும் தெரிவித்த கருத்துகள் சர்ச்சையானது. இதையடுத்து பொன்முடிக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டு நீதிபதி என். ஆனந்த வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தார். இந்த வழக்கு நீதிபதி என். சதீஷ்குமார் முன்பு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞர் பி. எஸ். ராமன், பொன்முடிக்கு எதிராக கொடுக்கப்பட்ட புகார்கள் மீது விசாரணை நடத்தி, குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இல்லை எனக் கூறி புகார்கள் போலீஸார் முடித்து வைத்துவிட்டனர் எனத் தெரிவித்து அதுதொடர்பான அறிக்கையை தாக்கல் செய்தார். அதை படித்துப் பார்த்த நீதிபதி, புகார்களில் முகாந்திரம் இல்லை என்று போலீஸார் எப்படி முடிவுக்கு வந்தனர்? இந்த வழக்கில் புகார்கள் முடித்து வைத்த போலீஸார் பிற புகார்களில் வேகம் காட்டுவார்களா? என்று கேள்வி எழுப்பினார்.
அப்போது அரசு தலைமை வழக்கறிஞர், பொன்முடி பேசிய கருத்துகள் அவருடைய சொந்த கருத்துகள் இல்லை. 1972-ஆம் ஆண்டு சமூக சீர்திருத்தவாதி பேசிய கருத்துகளைக் கூறியுள்ளார். எனவே, இந்த புகார்கள் போலீஸார் முடித்து வைத்ததை எதிர்த்து புகார்தாரர்கள் சம்பந்தப்பட்ட குற்றவியல் நீதிமன்றங்களில் மனு தாக்கல் செய்து நிவாரணம் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்தார். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த விவகாரத்தில் பொன்முடி பேசிய முழு வீடியோ பதிவையும், 1972-ஆம் ஆண்டில் சமூக சீர்திருத்தவாதி பேசியதற்கான ஆதாரங்களையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்திருந்தார். இதையடுத்து, பொன்முடி பேசிய முழு வீடியோவையும் காவல்துறை இன்று தாக்கல் செய்தது.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?