போதைக்கு மருந்து வேண்டும் எனில்... பல பெண்களை பாலியல் உறவுக்கு பயன்படுத்தி கொண்ட டாக்டர்
நியூ ஜெர்சி,
அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தின் செகாகஸ் பகுதியை சேர்ந்தவர் ரித்தேஷ் கல்ரா (வயது 51). இந்திய வம்சாவளியை சேர்ந்தவரான இவர் மீது பெண்கள் பலர் அதிர்ச்சி அளிக்கும் குற்றச்சாட்டுகளை கூறியுள்ளனர்.
அவர் மருத்துவ உரிமம் பெற்று நடத்தி வரும் கிளினிக்கை மக்கள் நலனிற்காக பயன்படுத்துவதற்கு பதிலாக, பாலியல் விருப்பங்களை நிறைவேற்றி கொள்ள பயன்படுத்தி வந்துள்ளார் என நோயாளிகளும், கிளினிக்கின் முன்னாள் பணியாளர்களும் குற்றச்சாட்டாக தெரிவித்தனர்.
இதன்படி, போதைக்கு அடிமையானவர்களுக்கு மருந்து கொடுப்பதில் அவருடைய லீலைகள் ஆரம்பித்தன. அவர்களுக்கு அதிக வீரியம் நிறைந்த ஆக்சிகோடன் என்ற வகை மருந்துகளை கொடுத்திருக்கிறார். அதிக அளவில் ஓபியாய்டும் கொடுத்துள்ளார்.
இது நோயாளிகளிடையே வீரியம் அதிகரித்த செய்ததுடன், அவர்கள் நோயாளிகளாகவே நீடிக்க வழி செய்துள்ளது. போதைக்கு அடிமையானவர்களிடம் மருந்து தருகிறேன் என கூறி அவர்களை பாலியல் ரீதியாக பயன்படுத்தி கொண்டார். இதில், பல்வேறு வடிவிலான பாலியல் உறவில் அவர் ஈடுபட்டு உள்ளார்.
பெண் ஒருவர், இவருடைய கிளினிக்கிற்கு பல முறை மருந்து வாங்க சென்றுள்ளார். அப்போது ஒவ்வொரு முறையும், அவரை பாலியல் விருப்பத்திற்கு கல்ரா பயன்படுத்தி கொண்டார் என அந்த பெண் அதிர்ச்சி தரும் குற்றச்சாட்டை கூறியுள்ளார். இதுபோன்று பல பெண்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த விவகாரம் அமெரிக்க கோர்ட்டில் விசாரணைக்கு சென்றது.
அப்போது வாதிட்ட அரசு வழக்கறிஞர் அலீனா ஹப்பா, பொறுப்புடன் இருக்க வேண்டிய தொழிலில் மருத்துவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், டாக்டர் கல்ராவோ, போதைக்கு அடிமையான நோயாளிகளை மீண்டு வர செய்வதற்கு பதிலாக, அதிலேயே நீடித்து இருக்கும் வகையில் வீரியமிக்க மருந்துகளை கொடுத்தும், நோயாளிகளை பாலியல் உறவுக்கு பயன்படுத்தி சுரண்டலில் ஈடுபட்டும், நியூ ஜெர்சியின் பொது சுகாதார நல திட்டத்தில் மோசடியும் செய்துள்ளார் என கூறினார்.
இதனால், மக்களின் வாழ்வு ஆபத்தில் தள்ளப்பட்டு உள்ளது. இந்த வழக்கில், 1 லட்சம் அமெரிக்க டாலர் மதிப்பில் (ரூ.86 லட்சம்) பிணையில் அவர் விடுவிக்கப்பட்டு இருக்கிறார். எனினும், வீட்டு காவலில் வைக்கப்பட்டு உள்ளார். மருத்துவ உரிமமும் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளது. மருத்துவ பணியிலோ அல்லது மருந்துகளை எழுதி கொடுப்பதோ கூடாது என தடையும் விதிக்கப்பட்டது.
இந்த வழக்கில் அவர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டால், ஒவ்வொரு சட்டவிரோத மருந்து விநியோகத்திற்கும் தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், சுகாதார நலன் மோசடிக்காக தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்க வாய்ப்புள்ளது. இதேபோன்று முறையே 10 லட்சம் அமெரிக்க டாலர் (ரூ.8.6 கோடி) மற்றும் 2.5 லட்சம் அமெரிக்க டாலர் (ரூ.2.1 கோடி) அளவிலான அபராதமும் விதிக்கப்பட கூடும்.