போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வர நேட்டோவில் உக்ரைன் இணையக்கூடாது: டிரம்ப் அதிரடி

போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வர நேட்டோவில் உக்ரைன் இணையக்கூடாது: டிரம்ப் அதிரடி

வாஷிங்டன், ஆக. 18–


அமெரிக்க அதிபர் டிரம்ப் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு முக்கிய அறிவுறுத்தல் ஒன்றை வழங்கி உள்ளார். நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணையக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.


கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷ்யா தங்கள் நாட்டை ஆக்கிரமிக்கும் என்று அஞ்சி, நேட்டோ ராணுவ கூட்டமைப்பில் இணைய 2022ல் முயற்சித்தார். இதற்கு ரஷ்ய அதிபர் புதின் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அதனால் தங்கள் நாட்டின் இறையாண்மைக்கு ஆபத்தும் என்றும், இணையும் முயற்சியை கைவிடாவிட்டால் போர் தொடுப்போம் என்றார்.


இதனால் 2022 பிப்ரவரியில் உக்ரைன் மீது ரஷ்யா போரை துவங்கியது. 3 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் இந்த போரில் இதுவரை 13,000க்கும் மேற்பட்ட உக்ரைன் மக்கள் இறந்து உள்ளனர்.


உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மத்தியஸ்தம் செய்து வருகிறார்.


இதன் ஒரு பகுதியாக, கடந்த 16–ந்தேதி அலாஸ்காவில் ரஷிய அதிபர் புதினை டிரம்ப் சந்தித்தார். இந்த சந்திப்பில் பேச்சுவார்த்தை இணக்கமான முறையில் நடைபெற்றதாக இரு நாட்டுத் தலைவர்களும் அறிவித்தனர். ஆனால் போர் நிறுத்தம் குறித்த முடிவு எதுவும் எட்டப்படவில்லை. போரை நிறுத்த புதின் பல நிபந்தனைகளை விதித்துள்ளதாக கூறப்படுகிறது.


இந்த சந்திப்புக்குப் பிறகு இன்று (அமெரிக்க நேரப்படி) உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை நேரில் சந்தித்து பேச்சு நடத்த உள்ளார்.


இந்நிலையில், சமூக வலைதளத்தில் அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:–


உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி விரும்பினால் ரஷ்யாவுடனான போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர முடியும். இல்லையென்றால் அவர் தொடர்ந்து போராடலாம்.


அது எப்படி தொடங்கியது என்பதை நினைவில் கொள்ளுங்கள். நேட்டோ அமைப்பில் உக்ரைனை இணைக்க கூடாது. சில விஷயங்கள் ஒருபோதும் மாறாது.


ரஷ்யா கைப்பற்றியுள்ள க்ரிமியா பகுதியை உக்ரைன் உரிமை கொண்டாடக் கூடாது. நேட்டோவில் உக்ரைன் உறுப்பினராக முடியாது என்று தெரிவித்துள்ளார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%