மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு
Jul 27 2025
81

புதுடெல்லி:
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மைத்தேயி மற்றும் குகி ஆகிய இரு இனக் குழுக்களுக்கு இடையே கடந்த 2023-ம் ஆண்டு மே 3-ம் தேதி தொடங்கிய மோதல் பெரும் வன்முறையாக வெடித்தது. இதில், 250 பேர் உயிரிழந்ததுடன் 60,000-க்கும் மேற்பட்டோர் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறும் சூழல் ஏற்பட்டது.
கலவரத்தை கட்டுப்படுத்த முடியாத நிலையில் மணிப்பூர் முதல்வர் என்.பிரேன் சிங் தனது பதவியை ராஜினமா செய்வதாக அறிவித்தார். இதையடுத்து, கடந்த பிப்ரவரி 13 முதல் மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மேலும், 6 மாதங்களுக்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை நீ்ட்டிக்க வகை செய்யும் தீர்மானத்தை மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிமுகப்படுத்தினார்.
மாநிலங்களவை செய்திக்குறிப்பில் இதுகுறித்து தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 356-ன் கீழ் மணிப்பூர் மாநிலத்தில் 2025, பிப்ரவரி 13-ல் பிரகடனம் செய்யப்பட்ட குடியரசுத் தலைவர் ஆட்சியை மேலும் 6 மாதங்கள் தொடர்ந்து நீட்டிப்பதற்கான ஒப்புதலை அவை வழங்கியுள்ளது. இது, வரும் ஆகஸ்ட் மாதம் 13-ம் தேதியிலிருந்து அமலுக்கு வரும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு மாநிலத்தில் அமல்படுத்தப்படும் குடியரசுத் தலைவர் ஆட்சி வழக்கமாக 6 மாதங்கள் வரை நீடிக்கும். ஆனாலும் இதனை, நாடாளுமன்றத்தின் ஒப்புதலுடன் ஒவ்வொறு ஆறு மாத காலத்துக்கும் 3 ஆண்டுகள் வரை நீடிக்க முடியும்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?