மதுரை நகைக்கடை ஊழியரிடம் 1.5 கிலோ தங்கத்தை வழிப்பறி செய்த சக ஊழியர் கைது!
Aug 09 2025
26

காரைக்குடியில் மதுரை நகைக்கடை ஊழியரிடம் 1.5 கிலோ தங்கத்தை வழிப்பறி செய்த வழக்கில் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த சக ஊழியரை போலீஸார் கைது செய்தனர்.
மதுரையைச் சேர்ந்தவர் விஜயராஜா (40). இவர் அங்குள்ள நகைக்கடையில் பணிபுரிகிறார். ஆக. 4-ம் தேதி இரவு மதுரை நகைக் கடை வியாபாரிக ளிடம் வாங்கிய 1.5 கிலோ தங்கக் கட்டியின் தரத்தை கூட்டுவதற்காக காரைக்குடிக்கு தனியார் பேருந்தில் வந்தார்.
பழைய பேருந்து நிலையத்தில் இறங்கிய அவர், தனியார் திரையரங்கு அருகே நடந்து சென்றார். அப்போது காரில் வந்த 4 பேர் அவரை வழிமறித்து, தாங்கள் சுங்கத் துறை அதிகாரிகள் என்றும், விசாரிக்க வேண்டுமென்றும் கூறினர். இதைத்தொடர்ந்து காரில் விஜயராஜாவை ஏற்றி அழைத்துச் சென்றனர். பின்னர் அவரிடமிருந்த 1.5 கிலோ தங்கக் கட்டியை பறித்துக் கொண்டு, கானாடுகாத்தான் அருகே இறக்கிவிட்டுச் சென்றனர். விஜயராஜா அளித்த புகாரின் பேரில் காரைக்குடி வடக்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.
கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பிரான்சிஸ் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. விசாரணையில், விஜயராகவன் பணிபுரியும் மதுரை நகைக் கடையில் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த மனோஜ் (35) பணிபுரிந்து வருகிறார். அவர் மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து 4 பேரை வரவழைத்து தங்கக் கட்டியை கொள்ளையடித்தது தெரியவந்தது.
இதையடுத்து மனோஜை போலீஸார் கைது செய்தனர். மேலும் கொள்ளையர்களை பிடிக்க 3 தனிப்படையினர் மகாராஷ்டிரா மாநிலத்துக்குச் சென்றுள்ளனர்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?