பழைய குற்றாலம் அருவிக்கரையில் உள்ள தடுப்புக் கம்பிகள் வெள்ளத்தில் சேதமடைந்துள்ளன.
தென்காசி/ திருநெல்வேலி: தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. நேற்று காலை வரை 24 மணி நேரத்தில் குண்டாறு அணையில் 32 மி.மீ., அடவிநயினார் அணையில் 29 மி.மீ., செங்கோட்டையில் 24 மி.மீ., கடனாநதி அணையில் 16 மி.மீ., கருப்பாநதி அணையில் 19.50 மி.மீ., ஆய்க்குடியில் 12 மி.மீ., சிவகிரியில் 7 மி.மீ., ராமநதி அணை, தென்காசியில் தலா 3 மி.மீ. சங்கரன்கோவிலில் 2 மி.மீ. மழை பதிவானது.
கடனாநதி அணை நீர்மட்டம் 58 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 67 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 57.75 அடியாகவும், அடவிநயினார் அணை நீர்மட்டம் 123.25 அடியாகவும் இருந்தது. குண்டாறு அணை தொடர்ந்து முழு கொள்ளளவில் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பழைய குற்றாலம் அருவிக்கரை, பிரதான அருவிக்கரை பகுதிகளில் தடுப்புக் கம்பிகள் சேதமடைந்தன. இதனால் இந்த அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது.
குற்றாலம் பிரதான அருவிக்கரை பகுதியில் ஏற்பட்ட சேதங்களை சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், ஒரு சில நாட்களில் பணிகள் முடிந்துவிடும் என்றும் பேரூராட்சி தலைவர் கணேசன் தாமோதரன் கூறினார். பராமரிப்பு பணிகள் முடிந்த பின்னர் பிரதான அருவியில் குளிக்க அனுமதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
இதேபோல் பழைய குற்றாலம் அருவி மூடப்பட்டுள்ளது. இப்பகுதியில் ஆய்வு செய்த மாவட்ட வன அலுவலர் ராஜ்மோகன், “பழைய குற்றாலம் அருவிப் பகுதி வெள்ளத்தால் பெரும் சேதம் அடைந்துள்ளது. அருவியின் கீழ் பகுதியில் அமைந்துள்ள தடுப்பு வேலிகள் முற்றிலும் சேதம் அடைந்துள்ளன. தடுப்புக்கு கீழ் உள்ள சுவரும் சேதமடைந்து காணப்படுகிறது. உடை மாற்றும் அறையின் கதவுகளும், கழிப்பறையின் கதவுகள் மற்றும் கோப்பைகளும் வெள்ளத்தால் சேதம் அடைந்துள்ளன.
கழிப்பறைக்கு செல்லும் பைப் லைன் முற்றிலும் சேதம் அடைந்துள்ளது. அருவிக்கு செல்லும் சாலையின் இருபுறமும் காட்டாற்று வெள்ளத்தால் அரிப்பு ஏற்பட்டு மிகப்பெரிய பள்ளம் காணப்படுகிறது. மழைநீர் வடிந்த பின்பு தான் முழுமையான சேதம் மதிப்பு தெரியவரும். தற்போது தண்ணீர் அதிகமாக விழுவதால் சேத மதிப்பை கணக்கிட முடியவில்லை.
எனவே, பொதுமக்களின் நலன் கருதி அருவியில் குளிக்க தடை நீடிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இப்பகுதியில் வனவிலங்கு நடமாட்டம் இருப்பதால் தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வடகிழக்கு பருவமழை தீவிரம் குறைந்தவுடன் தக்க பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு மீண்டும் தக்க பாதுகாப்புடன் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்காக அனுமதிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.