மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு: ஒரு லட்சம் கனஅடி தண்ணீர் திறப்பு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு: ஒரு லட்சம் கனஅடி தண்ணீர் திறப்பு

கர்நாடகாவில் கனமழை பெய்து வரும் நிலையில், அங்குள்ள கபினி, கேஆர்எஸ் அணைகள் நிரம்பி, உபரி நீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மேட்டூர் அணை நடப்பாண்டில் 4வது முறையாக கடந்த 25-ம் தேதி முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. இதனால் அணைக்கு வரும் நீர் முழுவதும் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது.


மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 35,400 கனஅடியாகவும், நேற்று காலை 45,400 கன அடியாகவும் இருந்த நீர்வரத்து, மதியம் 12 மணிக்கு 75,400 கனஅடியாகவும், மாலை ஒரு லட்சத்து 400 கனஅடியாகவும் அதிகரித்தது. இதையடுத்து அணையிலிருந்து ஒரு லட்சம் கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.


அணியின் சுரங்க மின் நிலையம் வழியாக விநாடிக்கு 18,000 கன அடியும், 16 கண் மதகுகள் வழியாக 82,000 கனஅடியும் நீர் திறக்கப்பட்டு வருகிறது. கால்வாய் பாசனத்துக்கு விநாடிக்கு 400 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டிஎம்சியாகவும் இருந்தது.


அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் வெள்ள கட்டுப்பாட்டு மையத்தில் 24 மணி நேரமும் நீரின் அளவை அதிகாரிகள் கண்காணித்தும், தேவைக்கேற்ப நீரை வெளியேற்றியும் வருகின்றனர்.


சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர் ஆகிய 11 மாவட்ட ஆட்சியர்களுக்கு மேட்டூர் அணை உதவி செயற்பொறியாளர் செல்வராஜ் கடிதம் அனுப்பியுள்ளார்.


அதில், மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியாக உள்ளது. அணைக்கு வரும் நீர் முழுவதும் அப்படியே காவிரியில் வெளியேற்றப்படுகிறது. அணையிலிருந்து காவிரியில் விநாடிக்கு ஒரு லட்சம் கனஅடி உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளது. எனவே, காவிரி கரையோரம் வசிக்கும் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்துக்குச் செல்ல வேண்டும். உடைமைகளின் பாதுகாப்பு மற்றும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.


ஒகேனக்கல்லில்... தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம் விநாடிக்கு 32 ஆயிரம் கனஅடியாக இருந்த நீ்ரவரத்து நேற்று காலை முதல் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது. ஒகேனக்கல் காவிரியில் மாலை 5 மணி நிலவரப்படி நீர்வரத்து விநாடிக்கு 88,000 கனஅடியாக அதிகரித்தது. சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும், பரிசல் ஓட்டிகள் பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒகேனக்கல் அருவிப் பகுதிக்குச் செல்லும் நடைபாதையை மூழ்கடித்தபடி தண்ணீர் பெருக்கெடுத்துச் சென்ற நிலையில், அப்பகுதியில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%