ரஷ்யா–உக்ரைன் போரை நிறுத்தவே இந்தியா மீது டிரம்ப் வரி விதிப்பு’’: அமெரிக்கா விளக்கம்
Aug 21 2025
12

வாஷிங்டன், ஆக. 20–
‘‘உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தொடர்வதைத் தடுக்கவே இந்தியா மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூடுதல் வரிகளை விதித்ததாக’’ வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருள்களுக்கு 25% பரஸ்பர வரி விதிக்கப்பட்ட நிலையில், எச்சரிக்கையை மீறி ரஷியாவுடன் வர்த்தகம் செய்வதாக குற்றச்சாட்டை முன்வைத்து வரியை 50 சதவிகிதமாக டிரம்ப் உயர்த்தினார்.
இதனிடையே, ரஷியா மற்றும் உக்ரைன் அதிபர்களை அடுத்தடுத்து சந்தித்து டிரம்ப் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தினார்.இரு தலைவர்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் எந்த ஒப்பந்தமும் இறுதி செய்யப்படவில்லை என்றாலும் முன்னேற்றம் ஏற்பட்டதாக தெரிவித்த டிரம்ப், போர் நிறுத்தத்துக்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.
இந்த நிலையில் வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் இன்று செய்தியாளர்களுடன் பேசியதாவது:
‘‘ரஷ்யா –- உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு அதிபர் டிரம்ப் வர்த்தகத்தை மிக சக்திவாய்ந்த முறையில் பயன்படுத்தி மிகப்பெரிய அழுத்தத்தைக் கொடுத்துள்ளார். இந்தியா மீது பொருளாதாரத் தடைகள் உள்ளிட்ட பிற நடவடிக்கைகளையும் அவர் எடுத்துள்ளார். இந்தப் போர் முடிவுக்கு வர வேண்டும் என்று அவர் தனக்குள் உறுதிமொழி கொண்டார். டிரம்ப் விரைவாக அமைதியைக் கொண்டு வர விரும்புகிறார்.
‘நேட்டோ’ பொதுச் செயலாளர் உட்பட அனைத்து ஐரோப்பிய தலைவர்களும் இது ஒரு சிறந்த முதல்படி என்று ஒப்புக்கொள்கின்றனர். அமெரிக்க மண்ணில் புதினுடன் டிரம்ப் ஆலோசனை நடத்திய 48 மணி நேரத்தில், ஐரோப்பிய தலைவர்கள் அனைவரையும் வெள்ளை மாளிகையில் டிரம்ப் சந்தித்தார். எனவே ஐரோப்பிய தலைவர்கள், டிரம்ப்பின் அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டதற்கும், இது குறித்த ரஷ்யாவின் நிலைப்பாட்டை தாங்கள் தெரிந்துகொள்ளும் வாய்ப்பை அவர் ஏற்படுத்திக் கொடுத்ததற்கும் அவர்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறார்கள். இது முந்தைய நிர்வாகத்தால் செய்யப்படாத ஒன்று.
ரஷ்யா – உக்ரைன் என இரு நாட்டு தலைவர்களும் சந்தித்துப் பேசுவது சிறந்த முன்னேற்றமாக இருக்கும். அது நடக்கும் என்று டிரம்ப் எதிர்பார்க்கிறார். இதற்கு அமெரிக்க அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் என்று உறுதி அளிக்கிறோம்.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?