ராஜஸ்தான் மாநிலத்தில் சிந்து சமவெளி நாகரிகம்: ஹரப்பா காலத்து தொல்பொருட்கள் பாலைவனத்தில் கண்டுபிடிப்பு
Aug 02 2025
195
புதுடெல்லி:
ராஜஸ்தான் மாநிலத்தின் வறண்ட பாலைவனத்தில் சிந்துசமவெளி தொடர்பான நாகரிகம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள ஆழமான பாலைவன பகுதியில் ஹரப்பா காலத்தின் தொல்பொருட்களும் கிடைத்துள்ளன. இந்தகண்டுபிடிப்பு, பண்டைய சிந்து சமவெளி நாகரிக எல்லைகளை மறுவடிவமைக்கும் முக்கிய தடயங்களை வெளிப்படுத்துவதாகக் கருதப்படுகிறது.
இது, ராஜஸ்தானின் ஆழமான பாலைவனத்திலும் சிந்து சமவெளியைப் போன்ற நாகரிக அடையாளம் இருப்பதற்கான முதல் சான்றாகும், மேலும் வடக்கு ராஜஸ்தானுக்கும் குஜராத்துக்கும் நடுவே உள்ள ஹரப்பா தளங்களுக்கு இடையேயான ஒரு முக்கிய இணைப்பாகவும் இது கருதப்படுகிறது. ஜெய்சால்மர் மாவட்டத்தில் உள்ள ராட்டாடி ரிதேரியில் சிந்து சமவெளி நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்டது.
ராம்கர் தாலுகாவிலிருந்து கிட்டத்தட்ட 60 கிமீ தொலைவிலும் பாகிஸ்தானின் சந்தனவாலாவிலிருந்து சுமார் 70 கிமீ தொலைவிலும் உள்ள இது தொலைதூர பாலைவனமாகும். அங்கு ஹரப்பா காலத்திய எச்சங்களும் அதன் அடையாளமான சில தொல்பொருட்களும் காணப்பட்டுள்ளன.
இந்த இடம் பிரபல தொல்பொருள் ஆராய்ச்சியாளர் பங்கஜ் ஜகானி தலைமையில் தோண்டப்பட்டது. இந்த கண்டுபிடிப்புகளை ராஜஸ்தான் பல்கலைக்கழகம் மற்றும் உதய்பூரில் உள்ள ராஜஸ்தான் வித்யாபீடம் ஆகியவற்றின் நிபுணர்கள் சரிபார்த்துள்ளனர்.
இப்பகுதியில் கிடைத்துள்ளவற்றில் பாரம்பரிய ஹரப்பா கலாச்சாரப் பொருட்களாக, சிவப்புப் பாத்திர மட்பாண்டங்கள், துளையிடப்பட்ட ஜாடிகள், டெரகோட்டா கேக்குகள், செர்ட் கத்திகள், களிமண் மற்றும் ஓடுகளாலான வளையல்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
இதன் மையத்தில் நெடுவரிசை, ஆப்பு வடிவ செங்கற்கள் மற்றும் ஹரப்பா கட்டிடக்கலை வடிவங்களுடன் ஒத்துப்போகும் அடித் தளங்களைக் கொண்ட ஒரு சூளையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்கள், வரலாறு மற்றும் தொல்பொருள் ஆய்வாளர்களான முனைவர்.கார்க்வால் மற்றும் ஜகானி ஆகியோரால் எழுதப்பட்ட ஒரு விரிவான ஆய்வுக் கட்டுரையில் இடம்பெற்றுள்ளது.
இது, சர்வதேச சகமதிப்பாய்வு செய்யப்பட்ட தொல்பொருள் ஆய்வு இதழ் ஒன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இது வெளியீட்டிற்கு ஏற்றுக்கொள்ளப்பட்டால், ராஜஸ்தானின் இந்த பாலைவனத் தளம் ஹரப்பா ஆய்வுகளில் ஒரு முக்கிய இடமாக உலகளாவிய அங்கீகாரத்தைப் பெறும் வாய்ப்புகள் உள்ளன.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?