தமிழ்நாடு இ குழும சான்றோருக்கும், வாசக சொந்தங்களுக்கும் வணக்கங்கள்.
04.08.2025 இ இதழில் கவனம் ஈர்த்தவற்றுள் சில :
9 ஆம் வகுப்பு மாணவி அதிவேக ரயில் குறித்த செய்தி மூலம் எழுத்துத் துறையில் அடியெடுத்து வைத்துள்ளார். அவரது பாராட்டுக்கு உரிய ஆர்வத்தையும், முயற்சியையும் வாழ்த்தி வரவேற்போம். நமது இ இதழ், வாசகக் களத்தின் grass root level வரை ஊடுருவியுள்ளதை கண்டு வியக்கிறோம். அனைவருக்கும் ஆதரவு நல்கும் இ இதழ் குழுமத்தின் பரந்த மனதுக்கு வாழ்த்துக்கள்.
நீதித்துறையின் தலைமைப் பதிவாளர் 73,699 பிடி வாரண்டுகள் செயலின்றி நிலுவையில் இருப்பதாகவும், அவற்றுள் 61,000 வழக்குகளின் ஆணைகள் பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ளதாகவும் அறிக்கை அளித்துள்ளார். இது காவல்துறையின் கடமைத் தொய்வைக் காட்டுவதாக உள்ளது.
"மதுவைப் பழக்கி சாமான்ய மக்களைக் கொல்வதும் இனப் படுகொலைதான்" என்ற திரு. சீமான் அவர்களின் பேச்சு சத்தியமான வார்த்தை. (பாஸ்கர் செய்தி) சம்பந்தப்பட்டவர்கள் உணர்ந்தால் சரி.
அமெரிக்காவின் முக்கிய பங்குச்சந்தைகளும், அமெரிக்க டாலர் குறியீடும் பெரும் சரிவு என்பதும்,
இந்தத் தகவலை வெளியிட்ட புள்ளி விவரப் பணியகத் தலைவர் வேலை நீக்கம் என்பதுவும் செய்தி. இதுதான் Make America Great Again என்று முழங்கிய மேதாவியின் சாதனை போலும்.
பக்கம் 4 ல் வெளியாகியுள்ள உடல், மன நலம் சார்ந்த கட்டுரைகளில் காணப்படும் அம்சங்களில் பெரும்பாலானவை அனைவரும் அறிந்திருப்பர். இருப்பினும் பிரபஞ்சத்துடன் ஒத்திசைவு ஏற்படுத்துவது குறித்த விபரம் (point no. 27) அனைவரும் உள்வாங்கிக்கொள்ள வேண்டிய உயரிய கருத்து. கடைபிடிக்கவேண்டிய கருத்துக்கள். பாராட்டுக்கள்.
ஜாமீன் குடும்பத்தில் பிறந்து இடதுசாரி கொள்கைகளில் பிடிப்புண்டு வாழ்நாள் முழுவதையும் ஏழையரின் தொண்டுக்காக அர்ப்பணித்த சாரு மஜூம்தாரின் சரிதம் நல்லதொரு வாசிப்பனுபவம்.
இலங்கை கடற் கொள்ளயர்களால் இந்திய மீனவர்களின் ஐந்து லட்சம் மதிப்பிலான வலைகளும், உபகரணங்களும் கொள்ளை என்ற செய்தி - வாடிக்கை விதியாகிப் போனது. பாவம் விமோச்சனமற்ற மீனவர்கள்.
தமிழ்ச் செம்மல் இரா. இரவி அவர்கள் "உலக உத்தமர் கலாம்" என்ற நூலுக்கு எழுதிய மதிப்புரைக்கு பரிசும், சான்றிதழும் வழங்கி அவர் கோவையில் கௌரவிக்கப் பட்டுள்ளார். (பாஸ்கர் செய்தி). வாழ்த்துக்கள் சார். அவரது தமிழ், தமிழ்நாடு குறித்த கவிதை நமது தாய்மண்ணின் பசுமைப் பக்கங்களைப் பட்டியலிடும் பாங்கு அருமை. "செந்தமிழ் நாடென்னும் போதினிலே, இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே" என்ற பாரதியின் வரிகளின் சாயலான கவிதை. Fine.
கொரட்டூர் நா. பத்மாவதி அவர்களின் பூனைக்கும் புலிக்குமான உவமைக் கவிதை நல்ல கற்பனை. இறுதியில் "வலிமை உருவத்தில் இல்லை. முடிவெடுக்கும் தருணத்தில்தான் தெரியும் யாரெல்லாம் பூனை, யாரெல்லாம் புலியென" என்று சொல்லி "நச்" என்று முடித்துள்ளது அருமை. அது சரி, அது என்ன நெருப்புக் கழல்? கழல் என்றால் பாதம் (கழலடி) என்றல்லவா பொருள்?
திரு. ம. முத்துக்குமாரின் கவிதை "இன்மை" இன்றைய படைப்புகளில் தலை சிறந்த புதுக்கவிதை. அற்புதமான கற்பனைகளில் பிறந்த அபூர்வ உருவகங்கள். சிறந்த தமிழ் நடை. பாராட்டுக்கள்.
திருமதி. மீனா சேகரின் "தேங்காய்" நல்ல முற்றல் கவிதை. திருகத் திருகப் பூ தான். படிக்கப் படிக்க சுவைதான்!
பொறுமையாக வாசித்ததற்கு நன்றிகள். நாளை சந்திப்போம்.
P. கணபதி
பாளையங்கோட்டை.