வாசகர் கடிதம் (P. கணபதி) 09.08.25

வாசகர் கடிதம் (P. கணபதி) 09.08.25


==============

தமிழக அரசு மாநிலக் கல்விக் கொள்கையை வெளியிட்டுள்ளது. அதை மத்திய அரசின் கொள்கைக் காப்பி என்று அண்ணாமலை அவர்கள் விமரிசித்துள்ளார். அது ஒருபுறம் இருக்கட்டும். அந்த கல்விக் கொள்கையின் அம்சங்களை மாணவ சமுதாயம் உள்ளிட்ட அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளத் தக்க வகையில் பாயிண்ட் பாயிண்டாக வெளியிட்டு விளக்கியுள்ள நமது இ இதழின் செய்நேர்த்தி மிகவும் பாராட்டுக்கு உரியது. நன்றிகள் பல. 


பெங்களூரு பேரணியில் ராகுல் அவர்கள் மகாதேவபுரா தொகுதியின் வாக்குத் திருட்டு ஒரு உதாரணம் மட்டுமே என்று முறைகேட்டின் முத்திரைத் தகவல் அளித்துள்ளார். தொடர்ந்து ராகுல் ஆறு மாதங்களாக முயன்று சேகரித்துள்ள தரவுகளை யாரும் மறுக்கவோ, புறக்கணிக்கவோ முடியாது என்று ப. சிதம்பரம் அவர்கள் வேறு சாட்டையைச் சுழட்டுகிறார். சம்பந்தப்பட்டவர்களுக்கு உரைத்தால் சரி.


அமெரிக்க இறக்குமதிப் பொருட்களுக்கு இந்தியா விதிக்கும் வரி வெறும் 17 சதம் 

மட்டுமே. அதை 50 சதமாக உயர்த்த வேண்டும் என்கிறார் திரு. சசி தரூர் அவர்கள். சரிதானே. முள்ளை முள்ளால் தானே எடுக்க வேண்டும். 


I. A. S. அதிகாரிகள் இணை அரசாங்கம் நடத்துவதாகவும், அவர்கள் அதிகார தொனியிலேயே செயல்படுபவர்கள் என்றும் உயர்நீதி மன்றம் கடுமை காட்டியுள்ளதன் மூலம் களத்தில் களைகள் செழித்துள்ளதைத் தெரிவிக்கிறார்கள்.


மார்க்சிஸ்ட் கட்சி செயலாளர் 

பெ. சண்முகம் அவர்கள் அ. தி. மு. க. நடத்தியுள்ள போராட்டங்களை பட்டியலிட்டுக் காட்டமுடியுமா என்று கேட்கிறார். 


இலங்கைச் சிறையில் வாடும் மீனவர்களின் நலனுக்காக மீண்டும் முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். எழுதினார். எழுதுவார். மீனவர்கள் சிறை மீளுவரா? பார்ப்போம். 


தமிழகத்தில் 48, 172 கோடி மதிப்பில் 45 சாலைத் திட்டங்களுக்கு அரசு முன்னுரிமை கொடுத்து முயல்வதாக மத்திய அமைச்சர் நித்தின் கட்கரி அவர்கள் சொல்வது இனிப்புச் செய்திதான். 


பாக். மற்றும் இஸ்ரேலைத் தொடர்ந்து கம்போடிய பிரதமரும் ட்ரம்பை நொபேல் பரிசுக்கு பரிந்துரைத்துள்ளார். நொபேல் பரிசு எடுப்பார் கைப்பிள்ளை ஆகி விட்டது. 


காசாவாசிகள் மட்டுமின்றி, இஸ்ரேல் பிணைக்கைதிகளும் பட்டினியால் மாண்டுகொண்டிருக்கிறார்கள். அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் காசாவைக் கையகப் படுத்துவத்தில் குறியாக உள்ளார் நெ தன்யாகு.


குழந்தைகளும், செல்லப் பிராணிகளும் கட்டுரை நல்ல eye opener. என்ன இருந்தாலும் நாய், பூனை போன்ற பிராணிகளால் பிளஸ்சை விட மைனஸ்சே அதிகம். 


திரு. இறையன்பு அவர்கள் மூன்று முனைவர் பட்டங்கள் பெற்றிருக்கும் செய்தி பிரமிக்க வைக்கிறது. அப்துல் கலாம் அவர்களும், இறையன்பு அவர்களும் அறிவு சாகரத்தில் ஒருபுறம் அட்லான்டிக்கும், மறுபுறம் பசிபிக்கும் போன்றவர்கள் என்றால் மிகையாகாது. நூல் மதிப்புரை சிறந்த வாசிப்பு அனுபவம். 


முனைவர். க. அன்பழகன் அவர்களின் கௌரவக் கிளிகள் தொடரின் ஆரம்பத்தில் வரும் வைகறை நேரத்தின் விவரிப்பு கலாநேர்த்தியும், கவித்துவமும் கைகோர்த்த கற்கண்டுப் படைப்பு. பாராட்டுக்கள். 


வளவளப்பான காகிதம், வண்ண வண்ண சித்திரங்கள் , வகைவகையாய் கட்டுரைகள். அதுதான் நான் இன்று பெற்ற அடுத்த "தெய்வம்" இதழ். தெய்வீகமே வீடு தேடி வந்தது போல் இருந்தது. நன்றிகள். 


பிரசுரமான படைப்புகளே மீண்டும், மீண்டும் பிரசுரமாவது தடுக்கப்ப படலாமே. 


P. கணபதி

பாளையங்கோட்டை

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%