வாசகர் கடிதம் (P. கணபதி) 13.08.25

வாசகர் கடிதம் (P. கணபதி) 13.08.25


முதற்கண் சிகாகோ சின்னஞ்சிறு கோபு அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். 


21,70,454 பயனாளிகள் பயன்பெறும் வகையில் துவக்கப்பட்டுள்ள தாயுமானவர் திட்டம் அனைத்து ஊடகங்களிலும் வெளிச்சமிடப் பட்டுள்ளது. முதல்வர் கூறியுள்ளவாறு கடைக்கோடி பயனாளியும் பயன்பெறுவது உறுதி செய்யப்பட வேண்டும். 


ஜஸ்டிஸ் யஷ்வந்த் சர்மா வீட்டில் கட்டுக்கட்டாக பணம் விவகாரத்தில் மூவர் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. 146 எம். பி. க்கள் கையெழுத்திட்டு சர்மாவுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். மன்னன் அசைந்து கொடுப்பதாயில்லையே!  


ஓட்டு திருட்டு குறித்த எதிர்க்கட்சியினரின் தொடர் போராட்டத்தைத் தொடர்ந்து த்ரீணமுல் காங்கிரஸ் ஒட்டுமொத்த மக்களவையையும் கலைக்க வேண்டும் என்று கூறியிருப்பது இன்னொரு திருப்பம். 


பாலாறு மாசு விவகாரத்தில் மூன்று மாவட்ட ஆட்சியர் உச்ச நீதி மன்றத்தில் ஆஜர் என்பது செய்தி. மாசு பட்டுக் கிடப்பது பாலாறு மட்டுமல்ல. ஆட்சியரின் நேர்மை, கடமை, பதவிக்கான கௌரவம் எல்லாமும்தான். இதை உணர்ந்தால் சரிதான்.


ரூபாய் 37,537 கோடி செஸ் வரி வசூல் தொகை கல்வி, சுகாதார மேம்பாட்டுக்கு செலவிடப்படவில்லை என்று CAG அறிக்கை வெளிச்சப்படுத்தியுள்ளது. இதுக்குறித்த வருவாய் இனங்களின் விரிவான தகவலை அளித்துள்ள இ இதழின் சிரத்தை பாராட்டுக்கு உரியது. 


காவல் பெண் உதவி ஆய்வாளர் திருமிகு. தாரணியாவின் துணிச்சலான கடமை உணர்வும், பணி அர்ப்பணிப்பும் பிற மகளிர்க்கு முன்னுதாரணமாகும். அவருக்கு சான்றளித்து கௌரவப்படுத்திய செய்தி இனிப்புச் செய்தியாகும்.


திருமதி. நீட்டா அம்பானியின் Audi A9 chameleon கார் உலகில் 11 பேரிடம் மட்டுமே உள்ளது என்பதும், அதன் விலை ரூபாய் 100 கோடி என்பதும் மலைக்க வைக்கும் செய்தியாக இருந்தது. ஒரே பட்டனின் அழுத்தத்தில் காரின் வண்ணத்தை மாற்ற முடியும் என்பது விந்தையான தகவல். 


ஜப்பான் 2025 க்குள் 10 லட்சம் பேரை இழந்துவிடும் அபாயம் உள்ளதாகவும், இந்தப் பிரச்சினைக்கு செய்யறிவு ஒன்றே தீர்வாக இருக்கும் என்று எலான் மஸ்க் அவர்களின் எச்சரிக்கை கவனத்துக்குரியது.


ஆழத்தில் ஏற்படும் அழுத்தத்தை சமன் படுத்தும் வடிவமே வட்டம் என்பதாலேயே கிணறுகள் வட்டவடிவில் அமைக்கப்பட்டுள்ளது என்பது புதிய செய்தி. நீராதார மேம்பாட்டை நமது முன்னோர் எவ்வாறு சிந்தித்து செயல்படுத்தி உள்ளனர் என்பது பெருமைக்குரிய விஷயம். 


சுமார் 140 நாடுகள் பாலஸ்தீன அங்கீகாரத்துக்கு ஆதரவாக உள்ளதும், ஆஸ்திரேலியா தற்போது அங்கீகரிக்க முன்வந்துள்ளதும் மகிழ்ச்சியான செய்தி. 


தினம் ஒரு தலைவர் பகுதியில் -- சாதாரண ஆசிரியராக பணிவாழ்வைத் துவக்கி முன்சீப் எனும் உயர்ந்த பதவியை எட்டி சாதனை புரிந்த வ. த. சுப்பிரமணிய பிள்ளையின் வரலாறு உழைப்பின் உரைகல்லாக காட்சியளிக்கிறது. அவரது முருக பக்தியும், ஆன்மீக நாட்டமும், திருப்புகழ் சேவையும் அசர வைக்கிறது. சிறந்த தகவல் தொகுப்புக்கு பாராட்டுக்கள். சரி, நேற்றைய தலைப்பை மாற்ற மறந்து விட்டீர்களே! 


பூலோகம்தான் வைகுண்டம் கட்டுரை சிறப்பு. நட்பின் இறுக்கத்தையும், இறை பக்தியின் ஆழத்தையும் அளந்து காட்டிய வரலாறு அருமை. யுகங்கள் மீண்டும் மீண்டும் பிறக்கும் என்ற வரிகள், வினாடிக்கு 70 கி. மீ. வேகத்தில் இந்தப் பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டே போகிறது என்ற அறிவியல் உண்மை என் நினைவுக்கு வந்தது. அர்த்தமுள்ள கட்டுரை. அருமை. 


நன்னிலம். இளங்கோவனின் "தாரக மந்திரம்" சிறு சம்பவத்தின் மூலம் பெரும் எதார்த்தத்தைப் படம்பிடித்துக் காட்டியுள்ளது. உண்மை. பல ஜோதிடர்கள்தான் பல திருமணங்களின் தடைக்கும் காரணமாக முன்னோர்களின் சாபம் என்ற பூச்சாண்டியை மக்கள் முன்னாடி வைக்கிறார்கள். இரு தரப்பினரும் திருந்த வேண்டிய அவசியத்தை உணர்த்தும் நல்ல ஒரு கதை இது.


ஆசிரியரும் மாணவரும், நல்ல யோசனை - இரண்டு கதைகளும் ஏற்கனவே பலமுறை பிரசுரமானவைதான். மீண்டும் பிரசுரமாகியுள்ளன.

இ இதழின் அரும்பெரும் திரட்டுக்கள் பற்றி நன்றியுடன் 

இன்னும் சொல்ல வேண்டியவை நிறைய உள்ளன. இடம் போதாமையால் முடித்துக்கொள்கிறேன்.


 நாளை சந்திப்போம். 


P. கணபதி

பாளையங்கோட்டை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%