100 நாளுக்கு பதில் 125 நாள் வேலை என்பது ஏமாற்றும் தந்திரம்” - பிரியங்கா காந்தி
புதுடெல்லி: கிராமப்புற மக்களுக்கு ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை உத்தரவாதத்தை வழங்கும் திட்டம் இன்னும் சில மாதங்களில் முடிவுக்கு வந்துவிடும் என்று தெரிவித்துள்ள பிரியங்கா காந்தி, மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய மசோதா ஏழைகளுக்கு எதிரானது என குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த 2005-ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை (எம்ஜிஎன்ஆர்இஜிஏ) கொண்டு வந்தது. கிராமப்புற மக்களுக்கு வாழ்வாதாரம் அளிக்கும் வகையில் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது. இதன்படி, ஆண்டுக்கு 100 நாட்களுக்கு வேலை வழங்கப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டத்தின் பெயரை, ‘விக்சித் பாரத் கேரன்ட்டி பார் ரோஜ்கர் அண்ட் அஜீவிகா மிஷன் (கிராமின்) (விபி-ஜி ராம்-ஜி)’ என பெயர் மாற்றி, பல்வேறு மாற்றங்களை செய்ய வகை செய்யும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் வழங்கியது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்த மசோதா மக்களவையில் இன்று நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, “இந்த மசோதாவுக்கு எதிராக நாங்கள் போராடுவோம். இந்த மசோதா காரணமாக, எம்ஜிஎன்ஆர்இஜிஏ திட்டம் இன்னும் சில மாதங்களில் முடிவுக்கு வந்துவிடும். இந்த மசோதாவில் 100 என்பதற்குப் பதில் 125 நாள் வேலை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருப்பது ஏமாற்றும் தந்திரம். இது தெளிவாக தெரிகிறது.
இந்த திட்டத்துக்கான நிதிச் சுமையை மாநிலங்கள் மீது சுமத்தும் அந்தக் கணத்தில் இருந்தே இந்த திட்டம் படிப்படியாக முடிவுக்கு வந்துவிடும். இவ்வளவு பெரிய நிதிச் சுமையை மாநிலங்கள் மீது சுமத்துவதில் இருந்தே இது நன்றாக தெரிகிறது. இந்த மசோதா ஏழைகளுக்கு எதிரானது” என தெரிவித்தார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?