நெல்லை, மே 23–
பா.ம.க.வில் அப்பா, மகன் பிரச்னை தானாகவே சரியாகும் என்று மாநில பா.ஜ தலைவர் நயினார்நாகேந்திரன் கூறினார்.
இதுகுறித்து
நெல்லையில் நேற்று அவர் அளித்த பேட்டி:
மூத்த தலைவர் ராமதாஸ் மற்றும் அவருடைய மகன் அன்புமணி ஆகியோர் இடையே ஏற்பட்டுள்ள பிரச்னை தீர்க்கப்பட வேண்டிய ஒன்று. அவர்கள் இருவரும் ஒன்றாக இருந்து செயல்பட வேண்டும் என்பது தான் பா.ஜ.,வின் எண்ணம். அப்பா – மகனுக்கு இடையே இருக்கும் பிரச்னை தானாக சரியாகிவிடும்.
ஒத்த எண்ணம் கொண்ட அனைத்து கட்சியினரும் பா.ஜ.,வோடு ஒன்றிணைய வேண்டும். தமிழகத்தை பொறுத்தவரை தி.மு.க.,வும், அதன் ஆட்சியும் வீழ்த்தப்பட வேண்டும். அதற்காகவே எல்லாரும் ஒன்றிணைய வேண்டும்.
‘அ.தி.மு.க., – பா.ஜ., இடையே ஏற்-பட்டுள்ள கூட்டணி வெகுகாலம் நீடிக்காது; கூட்டணி உடைந்து விடும்’ என தன் கற்பனையை சொல்லிக் கொண்டிருக்கிறார் வி.சி.,க்கள் தலைவர் திருமாவளவன்.
அவருடைய எண்ணம் அது என்றால், எங்கள் எண்ணம், கூடா நட்பான தி.மு.க.,வோடு கூட்டணியாக இருக்கும் அவர், அக்கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும்.
தேர்தல் அறிக்கையில் சொன்ன எதையுமே தி.மு.க., அரசு நிறைவேற்றவில்லை. அறிக்கையில் சொல்லாத சொத்து வரி, மின் கட்டணம் என எல்லாவற்றையும் உயர்த்தி உள்ளனர். இதனால், தி.மு.க., அரசு மீது மக்கள் கொதிப்பாக உள்ளனர்.
எந்த புதிய திட்டம் கொண்டு வந்தாலும், அதை எதிர்ப்பதற்கென்றே சிலர் இருப்பர். ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்ட போதும்கூட, பலர் அதை எதிர்க்கத்தான் செய்தனர்; ஆனாலும், அது நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டு விட்டது.
அதேபோலத்தான், தங்க நகைகளை அடமானம் வைப்பதிலும் புதிய விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. விதிகளை மதித்து செயல்பட, மக்கள் தங்களை பழக்கிக் கொள்வர்.
இவ்வாறுநயினார் நாகேந்திரன் கூறினார்.