வாஷிங்டன்:
அமெரிக்காவின் புளு கோஸ்ட் விண்கலம் வெற்றிகரமாக நிலவில் நேற்று தரையிறங்கி உள்ளது.
அமெரிக்காவின் பயர்பிளை ஏரோஸ்பேஸ் நிறுவனம், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட் மூலம் ‘புளூ கோஸ்ட்’ என்ற விண்கலத்தை கடந்த ஜனவரி 15-ம் தேதி நிலவுக்கு அனுப்பியது. இது சுமார் ஒரு மாதமாக பூமியின் சுற்றுவட்டப்பாதையில் பயணம் செய்தது. பின்னர் நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது. 16 நாட்கள் பயணத்துக்குப் பிறகு புளு கோஸ்ட் விண்கலம் நிலவின் மாரே கிரிசியூம் பகுதியில் நேற்று அதிகாலை 3.34-க்கு (அமெரிக்க நேரம்) வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது.
டெக்சாஸ் மாகாணம் ஆஸ்டின் நகரில் உள்ள இந்த திட்டத்தின் கட்டுப்பாட்டு மைய பொறியாளர் இதை உறுதி செய்துள்ளார். இதன்மூலம் இந்த சாதனையை நிகழ்த்திய 2-வது தனியார் திட்டம் என்ற பெருமை கிடைத்துள்ளது. நிலவில் கால்பதித்த இந்த விண்கலம், நிலவின் தரைப்பரப்பை படம்பிடித்து அனுப்பி உள்ளது. அதில் அதன் கால்தடம் பதிவாகி உள்ளது. இந்த விண்கலத்தில் மண் பகுப்பாய்வி, கதிர்வீச்சு சகிப்புத்தன்மை கொண்ட கணினி உள்ளிட்ட 10 கருவிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த விண்கலம்ஒரு நிலவு நாள் முழுவதும் (14 பூமி நாட்கள்) இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. வரும் மார்ச் 14-ம் தேதி சூரிய ஒளியை பூமி மறைக்கும்போது உயர் திறன் கொண்ட புகைப்படங்களை எடுத்து அனுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிலவுக்கு மனிதர்களை அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான செலவைக் குறைப்பதற்காக அமெரிக்க விண்வெளிஆராய்ச்சி மையம் (நாசா) தனியார் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக இந்த விண்கலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.